full screen background image

“குருவாயூரப்பனின் அருள் எடப்பாடி பழனிச்சாமிக்குத்தான் கிடைத்துள்ளது” – இயக்குநர் கே.பாக்யராஜ் பேச்சு..! 

“குருவாயூரப்பனின் அருள் எடப்பாடி பழனிச்சாமிக்குத்தான் கிடைத்துள்ளது” – இயக்குநர் கே.பாக்யராஜ் பேச்சு..! 

ஒரு படத் தயாரிப்பாளரின் வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் ‘கிரிஷ்ணம்’.

இந்தப் படத்தை பி.என்.பி. சினிமாஸ் நிறுவனம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரித்துள்ளது. தினேஷ் பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்களை இயக்குநர்  கே. பாக்யராஜ் வெளியிட படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் படத்தின்  தயாரிப்பாளர் பி.என்.பலராம் பேசும்போது, “இது என் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம். அற்புதமான அனுபவம்.

IMG_1372

என் மகன் அக்ஷய் கிருஷ்ணனுக்கு ஒரு நோய் வந்து பெரும் பிரச்சினையாகி அவனால் பிழைக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறினார்கள். அவன் பிழைப்பதற்கு  ஒரு சதவிகிதம்தான் வாய்ப்புள்ளது. ஆபரேஷன் பெயிலியர் ஆவதற்கு 99 சதவிகிதம் வாய்ப்புள்ளது என்றார்கள்.

நான் அந்த ஒரு சதவிகிதத்தை குருவாயூரப்பன் மீதுள்ள நம்பிக்கையில் முழுதுமாக நம்பினேன். அப்படி ஒரு நம்பிக்கை வைத்தேன். பயப்படவே இல்லை. என் மகன் பிழைத்து விட்டான். எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.

இதை வெளியில் சொன்னால் யாரும் நம்பவில்லை. ஆனால் என் வாழ்வில் நடந்த இந்த அற்புதத்தைப் பலரும் அறிய வேண்டுமல்லவா? அதற்காகவே  படமாக எடுத்து குருவாயூரப்பனின் மஹிமையை உலகிற்குக் காட்ட விரும்பினேன். இது எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்றே இப்படத்தை எடுத்து இருக்கிறேன்..” என்றார். 

விழாவில்  இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது,  “இங்கே திரையிடப்பட்ட காட்சிகளையும் பாடல் காட்சிகளையும் பார்க்கும்போது தினேஷ்பாபு  இயக்குநர் என்பதைவிட ஒளிப்பதிவாளராக கவனிக்க வைக்கும்படி சிறப்பாகச் செய்திருக்கிறார்.

K.Backyaraj

இந்த ‘கிரிஷ்ணம்’ படம் உண்மைச் சம்பவம் என்று தயாரிப்பாளர் விரிவாகக் கூறினார். இதைக் கேள்விப்பட்டதுமே அந்தக் கதையின் நாயகன் அக்ஷய் கிருஷ்ணனைப் பார்க்க ஆவலாக இருந்தேன். நிஜமாகேவே இது அற்புதமான சம்பவம்தான்.

எப்போதுமே கற்பனைக் கதைக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் உண்மைக் கதை என்றால் நம் மனசுக்கு நெருக்கமாக இருக்கும். பார்ப்பவர் தங்களையும் அதில் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். அப்படி ஒரு படமாக குருவாயூரப்பன்   அருள் பற்றிப் பேசும் படமாக இந்த ‘கிரிஷ்ணம்’ படமும் இருக்கும் என நம்புகிறேன்.

நம்ம தமிழ்நாட்டுல குருவாயூரப்பன் எடப்பாடி பழனிச்சாமிக்குத்தான் நிறைய கொடுத்திருக்காரு. அவர் எந்த சமயம் யாரை எங்க தூக்கிப் போடுவாருன்னே தெரியாது. ஆனால் அவருக்குத்தான் அந்தப் பாக்கியம் கிடைச்சிருக்கு. நாமளும் குருவாயூரப்பனை வேண்டிக்கிட்டேதான் இருக்கோம். நாளைக்கு நமக்கு என்ன நடக்குமோ தெரியாது..!

IMG_1367

என் வாழ்க்கையிலும் சில அற்புதங்கள் பார்த்த அனுபவம் உண்டு. எங்கள் ஊரில் பைத்தியம் போலப் பார்க்கப்பட்ட சாயம்மா என்ற பாட்டி  ஒரு நாள் குறி சொல்லும் பெண்ணாக மாறிக் குறி சொல்ல ஆரம்பித்தார். பலருக்கும் சரியாக இருந்தது.

நாங்கள் குடும்பத்துடன்  அந்த ஊரை விட்டுவேறு ஊர் போனோம். மீண்டும் பல நாள் கழித்து அவரைப் பார்த்தபோது என் அண்ணனுக்கு விபத்து போன்ற அசம்பாவிதங்கள் நடந்தது  பற்றியெல்லாம் கூறினார். எங்களுக்கு ஆச்சரியம்.

என்னைப் பார்த்து ‘நீ இன்னுமா இந்த ஊரை விட்டுப் போகவில்லை..? இங்கே இருக்காதே வெளியூர் போ’ என்றார். எனக்கு ஆச்சரியம். ஏனென்றால் நான் அப்போது  சினிமா கனவில் இருந்தேன். பிறகு  நான் சினிமாவுக்காக சென்னை புறப்பட்டபோது  என் அண்ணன் ஒரு பெரிய ஜோதிடரை அழைத்து வந்தார். அவரோ, ‘எனக்குச் சினிமாவே சரிப்பட்டு வராது இரும்பு சம்பந்தப்பட்ட வேலைதான் சரி வரும்’ என்றார். நான் ‘சினிமாதான்’ என்று  பிடிவாதமாக இருந்தேன்.

என் அம்மாவிடம் ‘சினிமாவில் கேமரா, ஸ்டாண்ட் ,டிராலி எல்லாம் இரும்புதான் என்னை நம்பும்மா..’ என்று சொல்லிவிட்டு புறப்பட்டேன். எங்களுக்கு ஒரு ஒர்க்க்ஷாப் இருந்தது. அதில் என்னைப் பிடித்து வைக்க என் அண்ணனின் ஏற்பாடாக இருக்குமோ  என்று பிறகு நான் நினைத்தேன்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் உள்பட ‘கிரிஷ்ணம்’ குழுவினர் கேரளாவிலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்களை வரவேற்போம். நம் தமிழ் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு எங்கும் வரவேற்பு இருக்கிறது. இவர்களையும் வரவேற்போம்…” என்றார்.

விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தின் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், இயக்குநர் தினேஷ்பாபு, நாயகன் அக்ஷய் கிருஷ்ணன், பி.ஆர்.ஓ. யூனியன் தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெரு.துளசி பழனிவேல்,  மற்றும் ‘கிரிஷ்ணம்’ படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக விழாவில் செண்டை மேளம் முழங்க கதகளி நடனம்’ சிங்காரி நடனம் என நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன.

Our Score