1977-ம் ஆண்டு வெளியான ‘பட்டினப்பிரவேசம்’ படத்தில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் ஒரு நடிகராக தமிழ்ச் சினிமாவுலகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் டெல்லி கணேஷ். இப்போதுவரையிலும் 700 படங்களுக்கு மேல் நடித்தும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் ஒரு படத்தில்கூட இவர் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அபுதாபியில் நடைபெற்ற இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் நினைவஞ்சலி கூட்டத்தில் இது பற்றி பேசினார் நடிகர் டெல்லி கணேஷ்.
டெல்லி கணேஷ் பேசும்போது, “பாரதிராஜா சார்கூட பக்கத்துல அமர்ற பாக்கியத்தை வேற எந்த மேடையும் கொடுக்கலை… முதல்ல கொடுத்தது இந்த அபுதாபி மேடைதான்… அந்த வகைல இது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. முதல் படத்தில் நடித்து அது வெளிவந்து நன்றாக ஓடியதும், அடுத்தவன் அறிமுகப்படுத்துனவந்தானே என்றில்லாமல் என்னை அழைத்தார்.
அவர் அழைப்பை ஏற்று அம்மன் பிலிம்ஸ் ஆபீஸுக்கு போனேன். அப்போ பாரதிராஜா ரொம்ப வயசானவரா இருப்பார்ன்னு நினைச்சிப் போனேன். இப்ப மாதிரிதான் ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட்டுல சின்னப் பையனா இருந்தார். ‘வாய்யா’ என்றார். இப்போ மாதிரி கரகரப்பான குரல், அப்போ இல்லை… இப்போதான் அப்படி பேசுறார். இது வேற எதாலயும் ஆனதில்லை… நடிக்கிறவங்ககிட்ட கத்தி கத்தியே இப்படி ஆயிடுச்சு. என்னிடம், ‘நல்லா நடிச்சிருக்கேய்யா… உன்னோட கண் பேசிச்சுய்யா’ என்று என்னை மனதாரப் பாராட்டினார் பாரதிராஜா.
அவரோட படத்துல நடிக்க எனக்கு உடனே வாய்ப்பும் கொடுத்தார். ஆனால் சில காரணங்களாலே அதுல நடிக்க முடியலை. அதுக்கப்புறம் அவரோட படத்துல நான் நடிக்கவேயில்லை. அதுக்காக நான் வருத்தப்படலை… அவருக்கு வலப்பக்கம் அமர்ற பாக்கியத்தை கே.பி. சாருக்கான இந்த மேடை எனக்கு கொடுத்திருக்கிறதே… இது யாருக்குக் கிடைக்கும்…? எனக்கு இதுவே போதும்…” என்றார்.
தொடர்ந்து அதே நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் இமயம் பாரதிராஜா, “டெல்லி.. எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு… உன்னைய கூப்பிடலையேன்னு நினைக்காதே.. ஏனோ தோணலை… நீ அருமையான நடிகன்… ஆனால் நீ சொன்ன மாதிரி.. இறைவன் என்ன நினைக்கிறானோ அதன்படிதானே நடக்கும்.
எனக்கு மனோரமாவை நான் அசிஸ்டெண்ட் டைரக்டரா இருக்கும்போதே தெரியும். ஆனா அவங்களையும் இதுவரைக்கும் என்னோட படங்கள்ல நடிக்க கூப்பிடலை. அந்தம்மா பாக்குற நேரமெல்லாம் ‘பாரதி என்னையெல்லாம் உங்களுக்குத் தெரியாதே?’ன்னு சொல்லும். ஆனா என்னன்னே தெரியலை… கூப்பிடத் தோணலை.
இவ்வளவு ஏன்.. சிவக்குமார் எங்க வீட்டுக்குப் பக்கத்து வீடு.. தினம் பேசுவோம். அப்ப சூர்யாவெல்லாம் சின்ன பசங்க… எங்க வீட்டுப் பிள்ளைங்களும் அவங்களும் விளையாடுவாங்க… 20 வருஷப் பழக்கம்… ஏனோ சிவக்குமாரை நடிக்கிறியான்னு கேக்கத் தோணலை…
‘பசும்பொன்’ கதை அவனுக்கு சரியா இருப்பதாகத் தோண, அவன்கிட்ட போயி கேட்டேன். ‘இத்தனை வருசத்துக்கு அப்புறம் இப்பத்தான் உங்களுக்குத் தோன்றியிருக்கு..’ என்றவன் நடிக்க மாட்டேன் என்றிருந்த தன்னோட விரதத்தை எனக்காக முடித்துக் கொண்டு நடித்தான். டெல்லி.. நீ சொன்ன மாதிரி ‘Gods almighty’-தான் இதுக்கெல்லாம் காரணம். இனிமேலாவது நிச்சயம் நாம சேர்ந்து பணியாற்றுவோம்..” என்றார்.











