“வேதம் புதிது’ திரைப்படம் படமாக்கப்பட்டு வந்தபோது அதில் இருந்த சில காட்சிகள் அப்படியே நிஜத்திலும் நடந்திருக்கிறது…” என்கிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
இது பற்றி தனது யுடியூப் சேனலில் பாரதிராஜா பேசும்போது, “வேதம் புதிது’ படத்தின் படப்பிடிப்பு மைசூர் பக்கத்தில் நடந்து கொண்டிருந்தது. அந்தப் படத்தில் சாருஹாசனின் மகனாக ஒரு பையன் நடித்துக் கொண்டிருந்தான்.
கதைப்படி அந்தப் பையனை ஒரு ஆன்மீக மடத்தின் வாரிசாக ஆக்க முயற்சிகள் நடக்கும். அந்தப் பையன் அந்த வயதிலேயே மிகவும் அறிவாளியாக இருப்பான். மடத்தின் சம்பிரதாயங்களையும், மடத்தின் சாமியார்களைக கேள்வி கேட்பவனாகவும் இருப்பான். கேள்வியும் கேட்பான்.

தான் மடத்தின் தண்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமெனில் சில நிபந்தனைகள் உண்டு என்று சொல்லி சிலவற்றை அந்தப் பையன் முன் வைப்பான். இப்படி சில காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தேன்.
அதே நேரம்தான் காஞ்சி மடத்தின் ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் ஒரு நாள் இரவில் தண்டத்தை விட்டுவிட்டு தான் மட்டும் பிடதிக்கு ஓடிவிட்டார். இது அப்போது மிகப் பெரிய சர்ச்சையை தமிழகத்தில் எழுப்பியது.
மிகச் சரியாக அதே நேரத்தில்தான் நானும் அது போன்ற காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தேன். அப்போது படக் குழுவினரிடம் சிலர் “இது போன்ற காட்சிகள் இதில் வேண்டாமே. பின்னால் சிக்கல்கள் வரும்..” என்று என்னை பயமுறுத்தினார்கள்.
ஆனால், நான் துணிந்து நின்றேன். “வருவது வரட்டும். இந்தக் காட்சிகள் படத்தில் நிச்சயமாக இருக்கும்…” என்று சொல்லியே அவற்றைப் படமாக்கினேன்..” என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.