“சின்ன பட்ஜெட் படங்களை திரையிட முன் வருவார்களா..?” – தியேட்டர்காரர்களுக்கு பாரதிராஜா கேள்வி..!

“சின்ன பட்ஜெட் படங்களை திரையிட முன் வருவார்களா..?” – தியேட்டர்காரர்களுக்கு பாரதிராஜா கேள்வி..!

தமிழ்நாடு திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலத்தின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.

சென்னை, அண்ணா சாலையில் ஜெமினி மேம்பாலம் அருகேயிருக்கும் புகழ் பெற்ற பார்சன் காம்ப்ளக்ஸில் இருக்கும் ஒரு வீட்டில் இந்தச் சங்கம் தற்போது குடியேறியுள்ளது.

இந்தச் சங்க அலுவலகத்தை சங்கத்தின் தலைவரும், தமிழ்த் திரையுலகத்தின் மூத்த இயக்குநருமான இயக்குநர் இமயம் பாரதிராஜா திறந்து வைத்தார்.

இதன் பின்பு பத்திரிகையாளர்களிடத்தில் அவர் பேசும்போது, "தற்போது திரைப்படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளை பேசித் தீர்ப்பதற்காக இந்தச் சங்கம் துவக்கப்பட்டது.

தற்போது இந்தக் கொரோனா காலத்தில் திரைக்கு வரத் தயாராக இருக்கும் படங்கள்.. தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் படங்கள் என்று பலவித பிரச்சினைகள் உள்ளன. இப்போது தயாரிப்பில் இருக்கும் திரைப்படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடிகர்கள் அதனை முடித்துக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் வாங்கிய கடனுக்காக அதிக அளவில் தயாரிப்பாளர்கள் வட்டி கட்ட வேண்டிய சூழல் உள்ளது. எனவே இந்தப் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் ஒரு வேண்டுகோளாக வைக்கிறோம்.

இரண்டாவதாக முன்பு விநியோகஸ்தர்கள் நிறைய பேர் இருந்தார்கள். இப்போது விநியோகஸ்தர்களே இல்லை என்ற நிலைமை. தற்போது நேரடியாக தியேட்டர்களில் படத்தை திரையிட்டு வருகிறோம். தியேட்டரில் இருந்து எங்களுக்கு கிடைக்கும் ஷேர்கள் நியாயமாக இல்லை. அதை சரி செய்ய வேண்டும் என்று அறிக்கை விட்டிருக்கிறோம்.

மேலும் முன்பு திரையரங்குகளில் புரொஜெக்டர்கள் இருந்தது. அப்போது அதற்கெல்லாம் தனியாக கட்டணம் தர வேண்டியதில்லை. ஆனால் இப்போது கியூப் வந்த பிறகு நாங்கள் அதற்கும் தனியாக கட்டணம் கட்ட வேண்டியிருக்கிறது. இது போன்ற பிரச்சினைகளையெல்லாம் பேசித் தீர்க்க வேண்டியிருப்பதற்காகத்தான் இந்தச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

ஒருமித்தக் கருத்தோடு, ஒரே சிந்தனையோடு பல புதிய தயாரிப்பாளர்களை உருவாக்கும் நோக்கோடு ஒற்றுமையோடு செயல்பட வேண்டி இந்தச் சங்கம் பாடுபடும்.." என்றார்.

இதன் பின்பு பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு இயக்குநர் இமயம் பாரதிராஜாவோடு சங்கத்தின் நிர்வாகிகளும் இணைந்து பதிலளித்தனர்.

திருப்பூர் சுப்ரமணியம் உங்களது சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பே இ்லலை என்று சொல்லியிருக்கிறாரோ என்ற கேள்விக்கு, "அவர்கள் ஒரு பாதையில் போகிறார்கள். நாங்கள் ஒரு வழியில் நிற்கிறோம். இருவரும் இணைந்து போக வேண்டுமென்றால் பேச்சுவார்த்தை நடத்தித்தான் அதனை முடிவுக்குக் கொண்டு முடியும்.

அவர்கள் வர மறுத்தால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் எங்களது படங்களை தியேட்டரில் வெளியிடத்தான் நினைக்கிறோம். அவர்கள் எங்களது படங்களை வாங்க மறுத்தால் நாங்கள் வேறு வழிகளுக்குச் செல்வோம். அதை யாரும் தடுக்க முடியாது. இது எங்களுடைய சொத்து.. இதனை எப்படி வேண்டுமானாலும் நாங்கள் பயன்படுத்துவோம்.

தியேட்டர்கள் அவர்களுடைய சொத்து. அவர்களுடைய உடமை. அதை அவர்கள் தியேட்டர்களாகவும் வைத்திருக்கலாம். அல்லது கல்யாண மண்டபங்களாகவும் மாற்றலாம். அது அவர்களுடைய விருப்பம். அதில் நாங்கள் தலையிட மாட்டோம். எங்களுடைய தயாரிப்புகள் அவர்களுடைய இடத்திற்குள் நுழைந்தால்தான் ரசிகர்கள் அங்கே வருவார்கள். அப்போதுதான் அந்த இடத்திற்கு பெருமை கிடைக்கும். அது வேண்டாமென்றால் எங்களுக்கு அதில் கவலையில்லை.

நாங்கள் எங்களது கோரிக்கைகளை, வேண்டுகோள்களை அவர்களிடத்தில் முன் வைத்திருக்கிறோம். அதை ஏற்பதும், ஏற்காததும் அவர்களுடைய இஷ்டம். நாங்கள் தியேட்டர்கள் இல்லையென்றால் ஓடிடிக்கு செல்வோம். அது காலத்தின் கட்டாயம். விஞ்ஞானத்தின் வளர்ச்சி. பிடிக்குதோ, பிடிக்கலையோ அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். தொலைக்காட்சிகள் வந்தபோதும் இதுதான் பேச்சாக இருந்தது. ஆனால் பின்பு அனைவரும் அதற்குள் செல்லவில்லையா.. அது போலத்தான்.. எங்கள் வியாபாரத்திற்கு உகந்ததாக இருந்தால் எதுவும் எங்களுக்குச் சாத்தியமே.. நஷ்டத்திலா நாங்கள் படமெடுக்க முடியும்.

திரையரங்கு உரிமையாளர்கள் நடிகர்கள் சம்பளம் பற்றிப் பேசுவதெல்லாம் கூடாது. அது தயாரிப்பாளர்களின் சுதந்திரம். அது எங்களுடைய வேலை. அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்களுடைய படங்களை அவர்களுடைய தியேட்டர்களில் ஓட்ட வேண்டும். இதுதான் எங்களுக்கும் அவர்களுக்குமான வியாபாரத் தொடர்பு. அதை மீறி அவர்கள் பேச வேண்டாம்.

இப்போது இவ்வளவு பேசும் அவர்கள் எங்களது சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் தயாரித்த 100-க்கும் அதிகமான படங்கள் தியேட்டர்கள் கிடைக்காமல் முடங்கிப் போயிருக்கின்றன. அவற்றை வெளியிடுவார்களா.. அதை முதலில் வெளியிட்டுக் கொடுக்கச் சொல்லுங்கள்.

இந்தச் சங்கத்தில் வலுவுள்ள பயில்வான் மாதிரி 100 பேர் இருக்கோம்.. அந்தச் சங்கத்துல இருக்குற 1000 நோஞ்சான்களை கூப்பிட முடியுமா..." என்றார் பாரதிராஜா.

தயாரிப்பாளர் டி.சிவா பேசும்போது, "தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எங்களது தாய் சங்கம்தான். அந்தச் சங்கத்தில் இருப்பவர்கள் எங்களது புதிய சங்கத்திலும் தாராளமாகச் சேரலாம். இங்கே இருப்பவர்களும் அந்தச் சங்கத்தில் தொடர்ந்து இருக்கலாம். இந்தச் சங்கத்தில் நிர்வாகிகளாக இருப்பவர்கள் அந்தச் சங்கத்தின் தேர்தலில் போட்டியிட முடியாது…" என்றார்.