full screen background image

அம்பேத்கர் புகைப்படத்தினால் இயக்குநருக்கும், கலை இயக்குநருக்கும் மோதல்..!

அம்பேத்கர் புகைப்படத்தினால் இயக்குநருக்கும், கலை இயக்குநருக்கும் மோதல்..!

ஆஹா’ ஓடிடி சேனலில் தற்போது வெளியாகியிருக்கும் போத்தனூர் தபால் நிலையம்’ படம் சினிமா ரசிகர்களிடையே பரவலாக வெற்றி பெற்றுள்ளது. படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம், அறிமுக நடிகர்களின் நடிப்பு அனைத்துமே மிக சிறப்பாக இருப்பதாக அனைத்து விமர்சனங்களும் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இந்தப் படத்தில் கலை இயக்குநராகப் பணியாற்றிய ‘சதீஷ்’ என்பவர் இந்தப் படத்தின் இயக்குநரைப் பற்றி சில அதிர்ச்சிகரமான செய்திகளை வெளியில் பரப்புரை செய்துள்ளார்.

அதில், “இந்தப் படத்தில் நான் கலை இயக்குநராகப் பணியாற்றி போஸ்ட் ஆபீஸுக்கான செட் அமைக்கும்போது அங்கே அம்பேத்கர் படம் வைக்க முயன்றேன். இயக்குநர்கள் டீமில் இருந்தவர்களும், இயக்குநரும் அம்பேத்கர் படத்தை அங்கே வைக்க மறுத்தோடு, அம்பேத்கரின் புகைப்படத்தைக் குப்பையில் வீசியதாக” புகார் கூறியிருந்தார். “இதனாலேயே நான் அந்தப் படத்தில் வேலை பார்த்தமைக்காக பணமே வாங்காமல் விலகி வந்துவிட்டதாகவும்” சதீஷ் தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ‘போத்தனூர் தபால் நிலையம்’ படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான பிரவீன் முற்றிலுமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

“அனைவருக்கும் வணக்கம்.

என் பெயர் Praveen. தற்பொழுது AHA tamil OTT-ல் ரிலீசாகி நல்ல விமர்சனங்களை பெற்றுக் கொண்டிருக்கும் போத்தனூர் தபால்  நிலையம்’ திரைப்படத்தின் இயக்குர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர்.

என்னைப் பற்றி ‘சதீஷ்’ எனும் நபர் சோசியல் மீடியாவில் ஆதாரமின்றி அவதூறு பரப்பி வருவதை கண்டு மிகவும் மன வேதனைக்கு உள்ளானேன்.

2015-ல் இந்தப் படத்தின் Pre-production வேலைகள் நடந்து கொண்டிருக்கும்பொழுது என் படத்தின் ஆர்ட் டைரக்க்ஷன் வேலைகளை செய்து தருவதாக என்னை அணுகினார் சதீஷ்.

இந்தப் படத்திற்கு குறைந்த முதலீட்டில் தரமான செட்டுகளை அமைத்து தருவதாக உறுதி கூறி என்னிடமிருந்து ஒரு லட்ச ரூபாயை ஜனவரி 2015-ல் முன் பணமாக பெற்றார்.

சில மாதங்களுக்குப் பிறகு படத்தின் முதல் பெரிய செட்டான போஸ்ட் ஆபீஸ் செட் அமைக்கும் பணி துவங்கியது. ஆரம்பம் முதலே மிகவும் தாமதமாகவும் மற்றும் தறமற்றவாரே அந்த போஸ்ட் ஆபீஸ் செட்டுகளை அமைத்துக் கொண்டு இருந்தார். பிறகுதான் தெரிய வந்தது நான் கொடுத்த முன் பணத்தை செலவு செய்துவிட்டு இப்போது கையில் காசு இல்லாமல் இருப்பதை வைத்து ஒப்பேற்றி கொண்டிருக்கிறார் என்று.

இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் வர 25% சதவிகிதம் கூட முடியாத  அந்த செட்டில் இருந்து எங்கள் முன் பணத்தையும் திருப்பித் தராமல் வெளியேறிவிட்டார். பல முறை தொலைபேசியில் அழைத்துப் பேசியும் பலனில்லை.

அதன் பிறகு நானும்,  என் டீமும் சேர்ந்து மிகுந்த சிரமப்பட்டு அந்த செட்டை உருவாக்கி ஷூட்டிங் நடத்தி முடித்தோம். படம் நன்றாக வந்து கொண்டிருப்பதை கேள்விப்பட்ட சதீஷ், போஸ்ட் ஆபீஸ் ஷெட்யூல் கடைசி நாளில் என்னிடம் வந்து நடந்ததற்கு மன்னிப்பு கேட்டு, அடுத்த செட்டை தரமாக அமைத்து தருவதாகவும் அதற்கு முன் பணம் வேண்டும் என்றும் கேட்டார்.

அவரது நோக்கம் பணத்தைப் பெறுவதில் மட்டுமே இருப்பதை அறிந்து கொண்ட நான், ஏமாற தயாராக இல்லை இனி நீங்கள் இங்கு வர வேண்டாம் என்று கடுமையாக கண்டித்து அனுப்பிவிட்டேன்.

அதன் பிறகு படத்தில் வரும் அனைத்து செட்டுகளையும் நானும் எனது டீமும் சேர்ந்து மிகக் கடுமையான உழைப்பால் உருவாக்கியது. இப்போது அதற்கான அங்கீகாரம் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி.  

இந்தப் படத்தின் ஆர்ட் டைரக்க்ஷனுக்கும், சதீஷ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதன் பிறகு ஆறு ஆண்டு காலம் என்னுடன் எந்த தொடர்பிலும் இல்லாத  அவர் படம் ரிலீஸ் ஆகி மக்களால் அங்கீகரிக்கப்படுவதை அறிந்தவுடன் நடக்காத ஒரு சம்பவத்தை நடந்ததாகக் கூறி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை என் மீது வைக்கிறார்.

அனைத்து மனிதர்களும்  சமம் என்று நினைப்பவன் நான். இது என்னுடன் பழகியவர்களுக்கு நன்கு தெரியும்.  அப்படிப்பட்ட நான் ஒரு போதும் அம்பேத்கர் படத்தை அவமரியாதை செய்திருக்க வாய்ப்பே இல்லை.

நாங்கள் அம்பேத்கர் படத்தை குப்பையில் போட்டு இருந்ததாக அவர் கூறுவது தன் மீது மீடியாவின் கவனம் திரும்ப வேண்டும் என்பதற்காக அவர் கூறும் ஆதாரமற்ற பொய்களே.

தயவு செய்து பத்திரிக்கை நண்பர்களும், எனது நலம் விரும்பிகளும் இந்த ஆதாரமற்ற பொய்களை நம்ப வேண்டாமென்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்…” என்று அந்த அறிக்கையில் இயக்குநர் பிரவீன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Our Score