full screen background image

ஐ.டி. துறையினர் கழுத்தில் அணிந்திருப்பது நாய் செயினா…? – இயக்குநர் அமீரின் நக்கல் பேச்சு..!

ஐ.டி. துறையினர் கழுத்தில் அணிந்திருப்பது நாய் செயினா…? – இயக்குநர் அமீரின் நக்கல் பேச்சு..!

ஐ.டி. துறையினர் தங்களது கழுத்தில் அணிந்திருக்கும் அடையாள அட்டைகளை ‘நாய் செயின்’ என்று வர்ணித்து பேசியிருக்கிறார் இயக்குநர் அமீர்.

பிங்கர் பிரிண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக நாயகன் துருவா நடிக்கும் படம் ‘திலகர்’. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஜி.பெருமாள் பிள்ளை இயக்கியுள்ள படம் இது. ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கண்ணன் இசையமைத்துள்ளார். மதியழகன், நாசே ஆர். ராஜேஷ், ரம்யா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை சாந்தம் திரையரங்கில் நடைபெற்றது. இயக்குநர் அமீர் இசையை வெளியிட்டு பேசினார்.

அமீர் தன் பேச்சில் “இந்தப் படத்தின் போஸ்டர்களை பார்த்தபோது ‘திலகர்’ என்று போட்டு கையில் அரிவாளுடன் நிற்பது போலிருந்தது. ‘திலகர்’ என்று போட்டு படத்தை மட்டும் சாந்தமாகப் போட்டிருக்கலாம். அந்தப் பெயருக்கு ஒரு மரியாதை வேண்டுமல்லவா..?

எனக்குத் தெரிந்து மதுரை ஆழ்வார் நகரில் காந்தி என்றொருவர் இருந்தார். அவர் சாராயம் காய்ச்சுவார். கரிமேட்டில் இன்னொரு காந்தி இருந்தார் கட்டை பஞ்சாயத்து செய்வார். இன்னொரு செட்டியார் குடும்பத்தில் ஒருவர் தன் பிள்ளைகளுக்கு திலகர், கோகலே என்று பெயர் வைத்தார். அந்தத் திலகர் ஒயின் ஷாப்பில் கணக்கு வைக்கிற அளவுக்குக் குடிகாரர்.

தலைவர்கள் பெயரை வைக்கிறவர்கள் எல்லாம் இப்படி இருக்கிறார்களே என்று நினைப்பேன். பெயர் வைக்கும்போது அதைக் காப்பற்ற வேண்டும்.  தலைவர் திலகர் பற்றி இன்று நாய் செயின் போல கழுத்தில் அடையாள அட்டை மாட்டிக் கொண்டிருக்கும் ஐ.டி. தலைமுறைகளுக்குத் தெரியாது. எனவே மறைந்த தலைவர்களின் பெயரைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாகப் பயன்படுத்த வேண்டும். இதை திரையுலகினருக்கு ஒரு வேண்டுகோளாகவே வைக்கிறேன்…” என்றார்.

இயக்குநர் அமீர் சொன்னது பல முரண்பாடுகளைக் கொண்டது.

மனிதர்களின் பெயர்களுக்கும், குணங்களுக்கும் சம்பந்தமேயில்லை.. எல்லா குழந்தைகளும் பிறப்பின்போது நல்லவர்கள்தான்.. ஆனால் பின்பு வளர்ப்பின்போதுதான் அவர்கள் வேறு வேறு ஆட்களாக வளர்ந்து வருகிறார்கள்.

இதில் தலைவர்களின் பெயர்களை வைப்பது தவறு என்கிற ரீதியில் அமீர் பேசியிருப்பது சற்றும் பொருந்தாதது. இது அவரவர் குடும்ப விஷயம். தந்தையர், தாய்மார்களுக்கு தங்களது குழந்தைக்கு தங்களுக்குப் பிடித்த பெயர்களை வைக்கும் உரிமையுண்டு. வைக்கிறார்கள். அந்தக் குழந்தை பெயருக்கு மாறாக வளர்ந்துவிட்டால், அதற்கு யாரும் பொறுப்பேற்க முடியாதே..? அதற்காக வைக்கவே கூடாது என்று சொன்னால் எப்படி..?

இன்னொன்று.. ஐ.டி. நிறுவன ஊழியர்கள் மீது அமீருக்கு திடீரென்று என்ன கோபமோ தெரியவில்லை..

“தலைவர் திலகர் பற்றி இன்று நாய் செயின் போல கழுத்தில் அடையாள அட்டை மாட்டிக் கொண்டிருக்கும் ஐ.டி. தலைமுறைகளுக்குத் தெரியாது.” என்று சொல்லியிருக்கிறார்.

ஐ.டி. இல்லாத தலைமுறைகளுக்கு மட்டும் திலகர் பற்றி முழுசும் தெரிந்திருக்கிறதா..? சாதாரண பெட்டிக் கடை. டீக்கடை, கூலி வேலை செய்பவர்கள்.. ஏன் டாஸ்மாக் கடையில் வேலை பார்ப்பவர்களுக்குக்கூட திலகரின் முழுப் பெயரும் தெரியாது.

ஆனால் ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் பட்டதாரிகள், பொறியாளர்கள் குறைந்தபட்சம் திலகரின் வாழ்க்கை வரலாற்றையாவது நிச்சயம் படித்திருப்பார்கள்.. படிக்காத முட்டாள்கள் ஐ.டி. துறைக்கு வந்திருக்கவே முடியாது..!

அதென்ன ‘நாய் செயின்’ என்று தெரியவில்லை.. ஐ.டி. துறையினர் மட்டுமா அடையாள அட்டையை மாட்டியிருக்கிறார்கள். இன்று அரசு அலுவலகங்களில்கூட அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சினிமா ஸ்டூடியோக்களில்.. பிரசாத் லேப், பிரசாத் ரிக்கார்டிங் ஸ்டூடியோ, பிரசாத் பிலிம் அகாடமி, ஏவி.எம். ஸ்டூடியோ அதன் தொடர்புடைய நிறுவனங்கள்.. ஏன் இந்த நிகழ்ச்சி நடந்த சத்யம் தியேட்டர்.. என்று அனைத்து இடங்களிலுமே இன்றைக்கு அடையாள அட்டைகள் மிக அவசியம்..

அனைத்து ஊழியர்களும் ஒன்று போலத்தான் அதனை கழுத்தில் அணிந்திருக்கிறார்கள். இதில் ஐ.டி. துறையினரை மட்டுமென்ன இப்படியொரு இளக்காரமாக ‘நாய் செயின்’ என்றழைக்க வேண்டும்..? அவர்கள் மட்டுமென்ன 4 முழத்திற்கா செயின் செய்து போட்டிருக்கிறார்கள்..?

இயக்குநர் அமீரின் இந்த எல்லை மீறிய பேச்சிற்கு நமது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்..!

Our Score