ராம் என்டர்டெய்னர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.வி.பிரகாஷ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இதில் ராஜீவ் கோவிந்த், அபிஷேக் ஜார்ஜ், யுக்தா பெர்வி, சித்தாரா விஜயன், ஹரிஷ் பெர்டி, அஷ்ரப் குருக்கள், சோபா பிரியா, குழந்தை நட்சத்திரங்களான பெஹ்மின், பர்ஹான், ஜான்வி, சினேகல், ஆதித்யன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஆதித்ய கோவிந்தராஜ், இசை – ஸ்ரீநாத் விஜய், பாடல்கள் – மோகன்ராஜன், படத் தொகுப்பு– ஸ்ரீனிவாஸ் பி.பாபு, சண்டை பயிற்சி– அஷ்ரப் குருக்கள், கே.டி.வெங்கடேஷ், நடனம் – சினேகா அசோக், எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர் – ஷார்வாக்கா, கதை – சிவம், பத்திரிக்கை தொடர்பு – வெங்கட்.
இந்த டெக்ஸ்டர் திரைப்படத்தை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சூரியன்.ஜி.
ஆதி என்ற ராஜிவ் கோவிந்த் தன்னுடைய காதலியான யாமினியை உயிருக்கு உயிராக காதலித்து வருகிறார். இன்றைய இளைஞர்கள் போலவே தன்னுடைய காதலியுடன் லிவிங் டு கெதராகவும் வாழ்ந்து வருகிறார்.
இந்த நேரத்தில் யாமினி திடீரென்று கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இந்த அதிர்ச்சியினால் ஆதியின் மன நிலை பாதிக்கப்படுகிறது. இதனால் ஒரு பெரிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்கிறார் ஆதி. அங்கு ஒரு நவீன சிகிச்சை முறையால் அவரை குணப்படுத்தி அனுப்பி வைக்கிறார்கள் மருத்துவர்கள்.
மருத்துவமனையில் இருந்து வெளியில் வரும் ஆதிக்கு தன்னுடைய பழைய காலத்து நண்பியான புவியை தற்செயலாக சந்திக்கிறார். புவியுடன் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் புவியின் தாய், தந்தையர் ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்கி தவிப்பதாகவும் அவர்களை பல ஆண்டுகளாக பார்க்க முடியாமல் எங்கே இருக்கிறார்கள் என்பதுகூட தெரியாமல் தவிப்பதாகவோ சொல்கிறார்.
ஆனால் இதற்கு காரணமான ஹரிஷ் பெராடியை மட்டும் அடையாளம் காட்டுகிறார் புவி. இதன் பின்பு ஆதியும், புவியும் சேர்ந்து ஹரீஷ் பெரடியை பாலோ செய்து ஹரிஷ் பெரடி கடந்த 22 ஆண்டு காலமாக மறைத்து வைத்திருந்த புவியின் அப்பா, அம்மாவை மீட்கிறார்கள். ஆனால் இந்த சந்தோஷம் சில நிமிடங்களிலேயே கரைந்து போகிறது.
திடீரென்று புதிதாக வரும் ஒருவன் புவியைக் கடத்திக் கொண்டு போக அவனை விரட்டிக்கொண்டு ஆதியும், ஹரீஷ் பெராடியும் செல்கிறார்கள். அங்கே அவர்களுக்கு மிகப் பெரிய டிவிஸ்ட் காத்திருக்கிறது.
இந்தக் கடத்தல் பின்னணியில் இருப்பவன் யார்?.. எதற்காக புவியை கடத்தினான்?.. இதற்கும் யாமினி கொலைக்கும் என்ன சம்பந்தம்?.. என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
ஆதியாக நடித்திருக்கும் ராஜீவ் கோவிந்த் தனது வாட்டசாட்டமான உடல்வாகுவுடன் ஒரு ஹீரோவாகவும் இல்லாமல், வில்லனாகவும் இல்லாமல் ஒரு மாதிரியான தோற்றத்திலேயே படம் முழுவதும் வந்திருக்கிறார்.
முதல் பாதி முழுவதும் தன்னுடைய காதலியை இழந்து தவித்து மதுவில் மூழ்கி ஒரு பைத்தியக்காரத்தனமாக பிளம்பிக் கொண்டிருக்கும் ஒரு மனநோயாளி கேரக்டரில் வாழ்ந்து இருக்கிறார் ராஜீவ் கோவிந்த்.
இரண்டாம் பாதியில் ஒரு தேடுதல் வேட்டையிலும், சண்டை காட்சிகயிலுமே ஹீரோ மூழ்கிவிட்டதால், அவருடைய நடிப்பை அடுத்தடுத்து வரக்கூடிய படங்களில் பார்த்து நாம் விமர்சனம் செய்யலாம்.
யாமினியாக நடித்தவர் முதலில் ஒரு சில காட்சிகளிலும் ஒரு பாடல் காட்சிகயிலும் வந்து சென்று ஹீரோவுடன் மிக நெருக்கமான லிப் டூ லிப் கிஸ் காட்சியிலும் நடித்துவிட்டு பரிதாபமாக இறந்து போனார்.
புவியாக நடித்திருக்கும் யுக்தா பெர்வி தன் அழகான முகத்தை வைத்து கொஞ்ச நேரம் நம்மை ரசிக்க வைத்தவர் அவரையும் கட்டி போட்டு சித்திரவதை செய்ய… எங்களை ஏன் இப்படி சித்திரவதை பண்றீங்க என்ற நம்மையும் புலம்ப வைத்துவிட்டார்கள்.
ஹரிஷ் பெரடியின் வில்லன் வேடமும் இதில் எடுபடவில்லை. 22 வருடங்களாக ஒரு கணவன், மனைவியை கடத்தி வைத்திருப்பது எவ்வளவு பெரிய லாஜிக் மிஸ்டேக் என்பதை இயக்குநர் புரிந்து கொள்ளாமலேயே இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார் என்பது வேடிக்கையான ஒரு விஷயம்.
ஹரிஷ் பெராடியும், ராஜீவ் கோவிந்தும் எங்கே சந்தித்தார்கள்.. எப்படி இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து வில்லன் இடத்தை கண்டுபிடித்து உள்ளே வந்தார்கள் என்பதை படம் பார்க்கும் யாராலுமே கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு இந்த படத்தில் லாஜிக் ஓட்டைகள் ஏராளம்.
வில்லனாக நடித்திருக்கும் அபிஷேக் ஜார்ஜ் கிட்டத்தட்ட ஆறு முறையாவது தன்னுடைய வேட்டியை விளக்கி தன்னுடைய ஆணுறுப்பை ஹீரோயின் யுக்தா பெராவியிடம் காட்டுகிறார். வக்கிரமான காட்சி இது. கேவலமான காட்சி இது. ஒரு முறை காட்டியிருப்பதோடு நிறுத்தி இருக்கலாம். ஆனால் ஐந்தாறு முறை காட்டியிருப்பது இயக்குநரை நாம் சந்தேகிக்க வைக்கிறது.
சிறு வயதில் வில்லன் அபிஷேக் ஜார்ஜ் ஆய் போகும்போது இவர்கள் பார்த்துவிட்டு அவரைக் கிண்டல் செய்ததாகவும் அதனால் மிகப் பெரிய அவமானத்திற்கு உள்ளான அபிஷேக் ஜார்ஜ் அந்த ஒரே ஒரு காரணத்துக்காகவே இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் விரட்டி தேடி பிடித்து ஒவ்வொரு நண்பர்களையும் கொலை செய்கிறார் என்பதெல்லாம் நம்புகின்ற கதையா..
முட்டாள்தனமான கதை.. மூடத்தனமான கதை… இந்தக் கதைக்கு இவ்வளவு பெரிய திரைக்கதை வேறு.
அந்த வில்லன் கதாப்பாத்திரத்தை வெறுக்கத்தக்க வகையில் வெறித்தனமாக காட்டியிருக்கும் அபிஷேக் ஜார்ஜ் மட்டுமே, இந்தப் படத்தில் குறிப்பிடத்தக்க வகையில் நடிப்பை காண்பித்து இருக்கிறார்.
ஆதித்ய கோவிந்தராஜனின் ஒளிப்பதிவும், ஸ்ரீநாத்தின் இசையும் பரவாயில்லை ரகம். பல காட்சிகளில் டைட் குளோசப் ஷாட்டாக ஜூம் செய்து கொண்டே போவதெல்லாம் எந்த சினிமாவிலும் நாம் பார்க்காதது. இந்தப் படத்தில் இப்படியொரு புதுமையான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் ஆதித்யா கோவிந்தராஜ்.
படத் தொகுப்பு செய்திருக்கும் சீனிவாஸ் பாபு இன்னும் கொஞ்சம் மனம் வைத்து பல காட்சிகளை ஒன்றன்பின் ஒன்றாக வருவது போல தொகுத்து கொடுத்திருக்கலாம் திடீரென்று சில காட்சிகள் ஜம்ப்பாகி போவது சிரிப்பாக இருக்கிறது.
மொத்தத்தில் ஒரு சைக்கோத்தனமான படத்தை, சைக்கோ கொலைகாரனை வைத்து சைக்கோத்தனமாகவே நமக்கு கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
RATING : 2 / 5









