full screen background image

“சென்னை அருகே திரைப்பட நகரத்தை உருவாக்க வேண்டும்..” – நடிகர் டெல்லி கணேஷ் கோரிக்கை..!

“சென்னை அருகே திரைப்பட நகரத்தை உருவாக்க வேண்டும்..” – நடிகர் டெல்லி கணேஷ் கோரிக்கை..!

ஈரோடு கொங்கு இளைஞர் சங்கம், கொங்கு கலையரங்கம், கவிதாலயம் இசை பயிற்சி பள்ளி ஆகியவை சார்பில் குணச்சித்திர நடிகர் டெல்லி கணேசுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது இன்று வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று விருதினைப் பெற்றுக் கொள்ள ஈரோடு சென்றிருந்த நடிகர்  டெல்லி கணேஷ் அங்கே நிருபர்களைச் சந்தித்தார்.

delhi-ganesh award 

நிருபர்களிடத்தில் அவர் பேசும்போது, “நான் ஆரம்பத்தில் டெல்லியில் விமான படையில் வேலை பார்த்தேன். பின்னர் சென்னையில் இந்திய உணவு கழகத்தில் பணியாற்றினேன்.

அந்த சமயத்தில் சென்னையில் காத்தாடி ராமமூர்த்தியின் நாடகத்தை பார்க்க போய் இருந்தேன். அந்த நாடகத்தில் எனது நண்பர் ஒருவர் நடித்தார். அப்போது அந்த மேடையில் எனது நண்பரை நான் பாராட்டி பேசினேன். இதை பார்த்த நாடக குழுவினர் எனக்குள் நடிப்பு திறமை இருப்பதாக தெரிவித்தனர்.

இதனால் விசு தயாரித்து, இயக்கிய ‘பட்டினப்பிரவேசம்’ நாடகத்தில் முதன்முறையாக நடித்தேன். பின்னர் மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், அந்த நாடகத்தையே சினிமாவாக எடுத்தார். அதில்தான் நாடகத்தில் நடித்த அதே கேரக்டரில் சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு பாலசந்தர் சார்தான் ‘கணேஷ்’ என்ற எனது பெயரை ‘டெல்லி கணேஷ்’ என்று மாற்றினார். இதுவரை 400–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். தற்போது கமல்ஹாசனுடன் ‘பாபநாசம்’, ஜோதிகாவுடன் ‘36 வயதினிலே’ ஆகிய படங்களில் நடித்து வருகிறேன்.

தமிழக திரையுலகை காப்பாற்ற, சென்னையில் திரைப்பட நகரம் உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதுள்ள திரைப்பட நகர், பயனற்ற நிலையில் உள்ளது. ஹைதராபாத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய, திரைப்பட நகர் உள்ளது. அதேபோல், சென்னையின் சுற்றுப்புறத்திலாவது ‘பிலிம் சிட்டி’யை 40 ஏக்கர் பரப்பில் அமைக்க வேண்டும். இதில் ரெயில்வே ஸ்டேஷன், போலீஸ் நிலையம், தபால் நிலையம் ஆகியவைகளை நிரந்தரமாக செட் போட்டு வைத்தால் இதன் மூலம் சிறு பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் பயன் பெறுவார்கள். 

பகல் மற்றும் இரவு நேரங்களில் பொது இடங்களில் படப்பிடிப்பை நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும். கோவில்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், திரைப்படத் துறையினர் சேதம் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டைக் கூறி, அங்கு படப்பிடிப்புப் பணிகள் மேற்கொள்ளத் தடை விதிக்கப்படுகிறது.

திரைப்படம் எடுக்கவே நாங்கள் உள்ளோம். திரைப்படப் படப்பிடிப்பு என்ற பெயரில் முக்கிய இடங்களை கெடுக்க நாங்கள் இல்லை. எனவே, பிரபலமான கோவில்களிலும் படப்பிடிப்பு மேற்கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும்.

மதம், ஜாதி உள்ளிட்ட பிரச்னைகளை தூண்டாத வகையில் தயாரிக்கப்படும் குறைந்த பட்ஜெட் படங்களுக்கு அரசு வரிவிலக்கு அளிக்க வேண்டும். சேரனின் சிடி திட்டம், சிறிய பட்ஜெட் பட இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை காக்கும் திட்டமாகும்.

ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளாததால், கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதில் எனக்கு ஆர்வமில்லை. அதேபோல், அரசியலிலும் எனக்கு ஈடுபாடில்லை. தமிழ் படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லையே என்ற வருத்தம் அனைத்து தமிழ் சினிமா கலைஞர்களிடமும் உள்ளது. ஆனால், என்னை பொறுத்தவரை, ரசிகர்களின் கை தட்டல்களே நல்ல கலைஞனின் ஆஸ்கார் விருதாகும்.

கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்ச் சினிமாவில் எடுத்து வந்த கதையைத்தான் மீண்டும் இப்போதும் படமாக எடுத்து வருகிறார்கள். பழைய கதையை வைத்து புதுமுகங்களை நடிக்க வைத்து படம் எடுக்கிறார்கள். என் மகன் மகாதேவன் என்னும் மகாவை கதாநாயகனாக வைத்து ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளேன். படத்தின் பெயரை விரைவில் அறிவிப்போம்…” என்றார்.

Our Score