திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு சினிமா பைனான்ஸியர் அன்புச்செழியனிடம் படத் தயாரிப்புக்காக வாங்கிய கடன் பிரச்சனையில் நடிகர் சசிகுமார் உறவினரான அசோக்குமார் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது, சினிமா பைனான்சியர் போத்ரா குறித்தும் சில குற்றச்சாட்டுக்களைக் கூறியிருந்தார்.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று கூறி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீதும் செய்தியை வெளியிட்ட ‘ஜூனியர் விகடன்’ பத்திரிகை மீதும் பைனான்சியர் போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
“எனக்கு எதிரான வழக்கில் எந்தவித ஆதாரங்களும் இல்லை. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்…” என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் “தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவே அவர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்வதாக” தீர்ப்பளித்துள்ளது.