full screen background image

டியர் – சினிமா விமர்சனம்

டியர் – சினிமா விமர்சனம்

Nutmeg Productions நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி  மற்றும் G. பிருத்திவிராஜ் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஐஸ்வர்யா ராஜேஷ இணைந்து நடித்துள்ள திரைப்படம்  டியர்’.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன், காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், அப்துல் லீ, ‘ப்ளாக் ஷீப்நந்தினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ருகேஷ் படத் தொகுப்பையும், பிரகதீஸ்வரன் கலை இயக்கப் பணிகளையும், அனுஷா மீனாட்சி ஆடை வடிவமைப்பையும் கவனித்து வருகின்றனர். ராப்ஐகான் அறிவு, ஏகாதசி, ஜிகேபி, விண்ணுலக கவி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட செத்தும் ஆயிரம் பொன்படத்தின் இயக்குநரான ஆனந்த் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ், இந்த டியர் படத்தினை தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட்டுள்ளது.

தற்காலத்திய திருமணமான தம்பதியரின் உறவில் பிளவுகள் ஏன் ஏற்படுகிறது என்பதை அழுத்தமாக இந்தப் படம் பேசுகிறது. ஆண், பெண் இருவருக்கும் இடையில் சின்ன, சின்ன ஈகோ மோதலில் உருவாகும் பிரச்சனை, எங்கு கொண்டுபோய் விடும் என்பதை இப்படத்தில் முதிர்ச்சியாகக் கையாண்டுள்ளார் இயக்குநர்.

ஜி.வி.பிரகாஷ் ஒரு தனியார் டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய அம்மா ரோகிணி. அண்ணன் காளி வெங்கட். இவருக்குத் திருமணமாகி ஒரு பையனும் இருக்கிறான். இவருடைய அப்பா, பிரகாஷ் சின்னப் பையனாக இருக்கும்போதே இவர்களைப் புறக்கணித்து சென்றுவிட்டார். இதனால், பிரகாஷைவிடவும் காளி வெங்கட்தான் தங்களது தந்தை மீது கடும் கோபத்தில் இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷூக்கு பெண் பார்க்கும் படலம் துவங்குகிறது. மூணாறில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் அறிமுகம் இவர்களுக்குக் கிடைக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷூக்கும் பல வரன்கள் வந்தும் தள்ளிப் போய்க் கொண்டேயிருக்கிறது. காரணம், ஐஸ்வர்யாவுக்கு தூக்கத்தில் குறட்டைவிடும் பழக்கம் இருப்பதுதான்.

இது மருத்துவ ரீதியாகவும் குணப்படுத்த முடியாததாக இருப்பதால் வரும் மாப்பிள்ளைகளிடம் ஐஸ்வர்யாவே வெளிப்படையாக இதைச் சொல்லிவிடுகிறார். இதனாலேயே வருபவர்கள் ஓடிவிடுகிறார்கள்.

இந்த நேரத்தில் ஜி.வி.பிரகாஷின் குடும்பம் பெண் பார்க்க, மூணாறு செல்கிறது. அங்கே போன பின்புதான் ஐஸ்வர்யாவின் அம்மா கீதா கைலாசமும், பிரகாஷின் அம்மா ரோகிணியும் திருச்சியில் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படித்தவர்கள் என்பது தெரிகிறது..!

இதனால் “குறட்டை விஷயத்தை பிரகாஷிடம் சொல்ல வேண்டாம். நான் ரோகிணியிடம் பேசிக் கொள்கிறேன்..” என்று அம்மா கீதா கைலாசம் அறிவுறுத்த, ஐஸ்வர்யாவும் அதைச் சொல்லாமல் விட்டுவிடுகிறார்.

திருமணம் நடந்து முதலிரவிலேயே இந்தக் குறட்டை பிரச்சினை பூதகாரமாகிறது. “இதை வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம்..” என்று நினைக்கும் தம்பதியினர் அவர்களுக்குள்ளேயே ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு “ஒரு நாள் ஐஸ் தூங்கினால், பிரகாஷ் முழித்திருக்க வேண்டும். அடுத்த நாள் பிரகாஷ் தூங்கினால், ஐஸ் முழித்திருக்க வேண்டும்” என்று பேசி வைத்துக் கொண்டு நாட்களைக் கடத்துகிறார்கள்.

ஆனால் இதுவும் ஒர்க் அவுட் ஆகாமல், பிரகாஷூக்கு புதிதாக வேலைக்கு சேர்ந்த இடத்தில் இந்தத் தூக்கமின்மை பெரும் பிரச்சினையைக் கொடுக்க… பிரகாஷூக்கு வேலை பறி போகிறது. இதனால் கோபமடையும் பிரகாஷ், ஐஸிடம் “நாம் டைவர்ஸ் செய்து கொள்ளலாம்…” என்கிறார். ஐஸோ “முடியாது” என்கிறார். இருவரும் நீதிமன்றப் படியேறுகிறார்கள்.

அடுத்து என்ன நடக்கிறது..? இருவருக்கும் விவாகரத்து கிடைத்ததா..? இல்லையா..? அல்லது மீண்டும் இணைந்தார்களா..? என்பதுதான் இந்த ‘டியர்’ படத்தின் கதைச் சுருக்கம்.

ஐஸ்வர்யாவின் கேரக்டர் பெயர் ‘DHIVYA’. பிரகாஷின் கேரக்டர் பெயர் ‘ARUN’. இந்த இரண்டு பெயர்களின் முதல் இரண்டு எழுத்துக்களை ஒன்றாக்கி ‘DeAr’ என்று கன கச்சிதமாகப் படத்துக்குப் பெயர் வைத்துள்ளார்கள்.  பாராட்டுக்கள்..!

இதே குறட்டை சப்தத்தை மையமாக வைத்து சென்ற ஆண்டு ‘குட் நைட்’ படம் வெளிவந்தது நினைவிருக்கலாம். அதில் ஆணுக்குத்தான் குறட்டை விடும் பழக்கம் இருந்தது. இதில் பெண்ணுக்கு.. அவ்வளவுதான் வித்தியாசம்..!

இதுவரையிலான படங்களில் ஜி.வி.க்கு நடிக்கக் கிடைத்த ஸ்கோப்புகளைவிடவும் இந்தப் படத்தில் கூடுதலாகவே வாய்ப்புக் கிடைத்துள்ளது. அண்ணன் மீது பயம், அம்மா மீது பாசம், ஐஸ் மீது காதல், தன் தொழில் மீது வேட்கை என்று பலவகையான நடிப்புகளையும் படத்தில் காட்டியிருக்கிறார்.

அந்த அடல்ட் வயதுக்கே உரித்தான திமிரும் சேர்ந்து கொள்ள.. “நீ எனக்கு வேண்டாம். ஆனால் என் பிள்ளை எனக்கு வேண்டும். அதனால் பிள்ளையைப் பெத்துக் குடுத்துவிடு..” என்று முட்டாள்தனமாய் ஐஸிடம் சண்டையிடும் காட்சியில் படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரின் ஒட்டு மொத்த வெறுப்பையும் சம்பாதிக்கும் வகையில் நடித்துத் தள்ளியிருக்கிறார் பிரகாஷ்.

கிட்டத்தட்ட முதிர் கன்னி தோற்றதுக்கு வந்துவிட்டாலும் அது தெரியாதவண்ணம் ஒப்பனையின் உதவியோடு படம் முழுவதும் அழகியாகவே வலம் வந்து கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தந்திருக்கிறார் ஐஸ்.

பொறுப்பான பெண்ணாய், குடும்பத்துக்கான மருமகளாய் வாழ நினைக்கும் ஐஸின் கேரக்டர் ஸ்கெட்ச் நிச்சயமாகப் பாராட்டுக்குரியது. தன்னைப் பார்க்க வரும் மாப்பிள்ளைகளிடம் உண்மையைச் சொல்லிவிடுவதே நல்லது என்று நினைக்கும் அவரது குணம் நல்லதுதான்.

ஆனால் பிரகாஷிடம் மட்டும் சொல்ல முடியாமல் போனது அவரது தவறல்ல. அதற்கு அவரது அம்மாதான் பொறுப்பேற்க வேண்டும். அந்த ஒரு தவறினால் இவர் படும் கஷ்டமும், நஷ்டமும் அகோரம். அதிலும் வயிற்றில் குழந்தையை வைத்துக் கொண்டு அதைக் கலைக்கப் போகும்போது “கலைக்காதே.. பெத்துக் கொடு” என்று டைவர்ஸ் கேட்டிருக்கும் கணவன் வந்து சண்டையிடுவதை சந்திப்பதெல்லாம் நிச்சயமாக ஒரு சாபக் கேடு.

இந்த இடத்தில் ஐஸின் நடிப்பு முதிர்ச்சியானது. நமது ஒட்டு மொத்த பரிதாப உணர்வையும், ஆதரவையும் அந்த ஒரு காட்சியிலேயே தட்டிச் சென்றுள்ளார் ஐஸ்வர்யா.

கணவனை சமாளித்து, அம்மா, அப்பாவை சமாளித்து.. டைவர்ஸ் கேஸ் கோர்ட்டில் நிற்கும்போதும் மாமனாரையும், மாமியாரையும் சேர்த்து வைக்கப் போராடும் ஐஸின் காட்சிகளும், நடிப்பும் அவருடைய கேரக்டர் மீதான மதிப்பையும், மரியாதையையும் கூட்டியிருக்கிறது.

ரோகிணியும், கீதா கைலாசமும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். தன்னை விட்டுப் பிரிந்து சென்ற கணவருடன் சேரத் துடிக்கும் ரோகிணி காளி வெங்கட்டின் கோபத்தைப் பார்த்து அடங்கிப் போவதும், கணவர் வந்து சேர்ந்தவுடன் “அவருடன்தான் இனிமேல் நான் இருப்பேன்” என்று சொல்லி தன் வாழ்க்கை.. தன் உரிமை என்று தன்னுடைய பெர்ஸனல் லைபில் வேறு யாருக்கும் இடமில்லை என்று சொல்லுமிடத்தில் அழுத்தமாய் தன் பெயரைப் பதிவு செய்திருக்கிறார்.

அதோடு அதே இடத்தில் காளி வெங்கட் தன் மனைவியை வீட்டில் அடிமைபோல நடத்துவதைச் சொல்லிக் காட்டும்போதும் ஒரு அறச் சீற்றத்தைக் காட்டியிருக்கிறார்.

இவருக்கு நேரெதிராக கீதா கைலாசம் தனது மென்மையான நடிப்பினால்.. “நல்ல குடும்பமா இருக்கே.. நண்பியா வேற இருக்காங்களே.. முடிச்சு வைச்சிரலாம்” என்று ஒரு நல்ல தாயின் நினைப்பில் கல்யாணத்தை நடத்தி வைத்துவிட்டு  மகளுக்கு அட்வைஸ் செய்து வாழ்க்கையை ஓட்டச் சொல்லும்போது மிக இயல்பான அம்மாவாக நம் கண்களுக்குத் தெரிகிறார். கடைசிவரையிலும் இயல்புத் தன்மை மாறாமல் தனது கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார் கீதா கைலாசம்.

பாசமுள்ள அப்பாவாக இளவரசுவும், குற்றவுணர்வில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் அப்பாவாக ‘தலைவாசல்’ விஜய்யும் தங்களது பங்களிப்பை செவ்வனே செய்திருக்கிறார்கள். மறைமுகமான ஆணாதிக்கவாதியாக நடித்திருக்கும் காளி வெங்கட்டின் அந்த இறுமாப்பு பேச்சும், ஸ்டைலும், நடத்தையும் அச்சு அசலாக ஆணாதிக்கத்தனத்தின் அடையாளமாகவே தெரிகிறார்.

ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவில் கடைசிவரையிலும் குறையில்லாத வெளிச்சத்தைக் காண்கிறோம். பாடல் காட்சிகளில் அழகுற காட்சிகளைப் பதிவாக்கியிருக்கிறார்கள். கலை இயக்குநரும், உடைகள் வடிவமைப்பாளரும் சிறப்பாகச் செயல்பட்டு படம் முழுவதும் காட்சிகளில் அழகைத் திணித்திருக்கிறார்கள்.

‘மஜா வெட்டிங்’, ‘ஸ்லீப்பிங் பியூட்டி’, ‘தலைவலி’ ஆகிய பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. ‘மஜா வெட்டிங்’ பாடல் காட்சியை மிக ரசனையாக, கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார்கள்.

குறைகளே இல்லையா என்றால் இருக்கத்தான் செய்கிறது. ரொம்பவும் முக்கியமான சில காட்சிகளில் குளோஸப் ஷாட்களில் காட்டியிருக்க வேண்டிய வசனங்களை லாங் ஷாட்டில் காண்பித்துவிட்டு அப்படியே முடித்திருக்கிறார் இயக்குநர்.

படம் சொல்ல வந்த நீதியை சொல்லிய, ரோகிணி கொந்தளித்துப் பேசும் காட்சியில் அவருக்கான குளோஸப் காட்சியை வைக்காததால், அந்தக் காட்சியின் தாக்கம் அதிகமாக நம்மைத் தாக்காமல் நகர்ந்துவிட்டது.

இந்தப் படத்தின் இயக்குருக்கு டப்பிங் பிடிக்காது என்பதால் “லைவ் சவுண்ட் வைத்திருக்கிறேன்” என்றார். அவருக்குப் பிடிக்கவில்லை என்றால் மற்றவர்களுக்கும் பிடிக்காமல் இருக்கும் என்பதில்லையே..? லைவ் சவுண்ட் என்பதாலேயே படத்தின் முக்கியமான சில காட்சிகளில் வசனங்கள் நமது காதில் விழுகாமலேயே போயிருக்கிறது. இயக்குநர் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குறட்டை விடுதலுக்காகவே தம்பதிகள் விவகாரத்து வரைக்கும் செல்வதெல்லாம் ரொம்பவே டூ மச்சான விஷயம். இதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக யதார்த்தமான வசனங்களால் சொல்லியிருக்க வேண்டும். அப்படி சொல்லாமல் மாத நாவல்களில் வரும் கதையாடல்போல திரைக்கதையை நகர்த்திக் கொண்டே போயிருப்பது நமக்குக் கொஞ்சம் சோதனையாக இருக்கிறது. படத்தின் பிற்பாதியில் இருக்கும் தேக்க நிலைக்கு இந்த திரைக்கதைதான் காரணம்.

மற்றபடி இன்றைய 2 கே கிட்ஸ்களின் கலாட்டா கல்யாணமும், அவசர டைவர்ஸூம் தெருவுக்குத் தெரு அலற விடும் காலத்தில், இது போன்று யதார்த்தமான, நிஜமான வாழ்க்கையை அறிவுறுத்தும் படங்களும் அவசியம் தேவைதான். அந்த வகையில் இத்திரைப்படம் குடும்பத்துடன் அவசியம் பார்க்க வேண்டிய படங்களில் ஒன்றாக இடம் பிடித்துவிட்டது.

அவசியம் பாருங்கள்..!

RATING : 3.5 / 5

Our Score