ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரமேஷ் குமார் தயாரித்துள்ள படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’.
அறிமுக இயக்குநரான பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் இந்த ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம், வரும் ஜூலை 28-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
‘இவன் வேற மாதிரி’, ‘வேலையில்லா பட்டதாரி’ புகழ் சுரபி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் மாறன், சேது, மொட்டை ராஜேந்திரன், பெப்சி விஜயன், முனீஷ் காந்த், பிரதீப் ராவத், ரெடின் கிங்ஸ்லி, தீனா, தங்கதுரை, மசூம் ஷங்கர், மானசி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் உடன் பணிபுரிந்தவரும், தனிப் பாடல்கள் மூலம் கவனம் ஈர்த்தவருமான ஆஃப்ரோ இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை தீபக் குமாரும், படத் தொகுப்பை ஸ்ரீகாந்தும், கலை இயக்கத்தை மோகனும் கையாண்டுள்ளனர்.
இந்த விழாவில் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேசும்போது, “இந்த விழாவில் கலந்து கொள்வதற்காகவே நான் மதுரையிலிருந்து வந்திருக்கிறேன். இப்படத்தின் டீம் மிகவும் அருமையான டீம். இன்றைய காலகட்டத்தில் அழ வைப்பதும், உணர்ச்சிவசப்பட வைப்பதும் மிகவும் சுலபம், ஆனால், மனம் விட்டு சிரிக்க வைப்பதுதான் கடினம்.
இந்தக் கலையில் சந்தானம் சிறந்து விளங்குகிறார். ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை நான் பார்க்கும்போது பல இடங்களில் அடக்க முடியாமல் சிரித்தேன். ரசிகர்களும் அதே போல சிரித்து மகிழ்வார்கள் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.
ஒளிப்பதிவாளர் தீபக் பேசும்போது, “சந்தானத்துடன் இது எனக்கு நான்காவது படம். அவருடன் பணிபுரிவது ஒரு குதூகலமான அனுபவம். நகைச்சுவை என்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால் இப்படக் குழு அதை சாதித்து இருக்கிறது. பேயுடன் கேம் விளையாடுவதுதான் படத்தின் மையக் கரு, படத்தை பார்ப்பவர்களும் தாங்களும் இதை விளையாடுவது போல் உணர்வார்கள். மிகவும் சுவாரஸ்யமான திரைக்கதையை இயக்குநர் பிரேம் ஆனந்த் வடிவமைத்துள்ளார்.” என்றார்.
இசையமைப்பாளர் ஆஃப்ரோ பேசும்போது, “சுயாதீன இசைக் கலைஞரான நான் தற்போது திரைப்பட இசையமைப்பாளராக மாறி உள்ளேன். ஆல்பங்களுக்கு இசையமைப்பது சற்றே எளிது, ஏனென்றால், விதிகள் எதையும் இங்கே பெரிதாக பின்பற்ற தேவையில்லை. ஆனால் திரைப்படங்களுக்கு இசையமைக்கும்போது சூழலுக்கு ஏற்ப இசையமைக்க வேண்டும், அது கொஞ்சம் சவாலான விஷயம். எனக்கு இந்த வாய்ப்பை அளித்த சந்தானம், இயக்குநர் பிரேம் ஆனந்த், தயாரிப்பாளர் மற்றும் நண்பர் சேது ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.” என்றார்.
கலை இயக்குநர் மோகன் பேசும்போது, “இந்த டிடி ரிடர்ன்ஸ்’ முழுக்க முழுக்க செட்களிலேயே எடுக்கப்பட்ட படம். எனவே எனக்கு நிறைய வேலைகள் இருந்தது. மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. மிக பிரமாண்டமான அரங்கங்களை படத்துக்காக அமைத்தோம். இயக்குநர் ஒவ்வொன்றையும் தெளிவாக திட்டமிட்டு எங்களிடம் வேலை வாங்கினார். இப்படம் தொடங்கியது முதல் முடிவு வரை சிரிப்பு மழையாக ரசிகர்களை மகிழ்விக்கும்.” என்றார்.
நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசும்போது, “தான் மட்டும் இல்லாமல் தன் குழுவினரும் வளர வேண்டும் என்று சந்தானம் அவர்கள் நினைப்பார். நானும் அக்குழுவை சேர்ந்தவன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நகைச்சுவை நிறைந்த திரைப்படம் இது, டிடி ரிட்டர்ன்ஸ் போன்று இன்னும் பல திரைப்படங்களில் சந்தானம் நடிக்க வேண்டும்.” என்றார்.
நடிகை மசூம் ஷங்கர் பேசும்போது, “இப்படத்தில் நடித்த ஒவ்வொரு நாளும் மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. சந்தானம் மிகவும் திறமை வாய்ந்த நடிகர். இயக்குநர் பிரேம் ஆனந்த் திறம்பட திரைக்கதை அமைத்து அதை படமாக்கியுள்ளார். இப்படம் வெளியாகும் நாளுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.” என்றார்.
நடிகை சுரபி பேசும்போது, “இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல், ஏனென்றால் இப்போதுதான் முதல்முறையாக பேய் காமெடி படத்தில் நடித்துள்ளேன். இப்படத்தின் குழுவினர் என்னை மிகவும் நன்றாக பார்த்துக் கொண்டார்கள். சந்தானம் அவர்களுக்கும், இயக்குநர் பிரேம் ஆனந்த் அவர்களுக்கும் மிக்க நன்றி.” என்றார்.
இயக்குநர் பிரேம் ஆனந்த் பேசும்போது, “இன்று உங்கள் முன்னால் இயக்குநராக நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் சந்தானம் அவர்களும் ராம்பாலா அவர்களும்தான். கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தது முதல் இன்றுவரை சுமார் 18 ஆண்டுகளாக சந்தானம் அவர்களுடன் பணியாற்றிக் கொண்டு வருகிறேன்.
இதுவரை வந்த பேய் படங்களில் பார்த்தது எதுவும் இப்படத்தில் இருக்காது. ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ மிகவும் ஃபிரஷ்ஷாக இருக்கும். இப்படத்திற்காக அயராது உழைத்த எங்கள் குழுவிற்கு மனமார்ந்த நன்றி.” என்றார்.
நடிகர் சந்தானம் பேசும்போது, “நான் நடித்த சில படங்கள் சந்தானம் படம் போல இல்லையே என்று சொன்னவர்களுக்காக ‘டிடி ரிட்டர்ன்சை’ முழுக்க முழுக்க சந்தானம் படமாக எங்கள் குழுவினர் அனைவரின் ஒத்துழைப்போடு உருவாக்கி உள்ளோம்.
‘தில்லுக்கு துட்டு’ முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. அதேபோல் இந்த ‘டிடி ரிட்டர்ன்சு’ம் மக்களின் மனங்களை கவரும் என்று நான் நம்புகிறேன். இதில் வரும் ஒவ்வொரு பேயும் ஒவ்வொரு மாதிரி இருக்கும், இயக்குநர் பிரேம் ஆனந்த் இப்படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கியுள்ளார். குழந்தைகள் முதல் பெரியோர்கள்வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் இப்படம் இருக்கும். படத்திற்கு தங்கள் மேலான ஆதரவை வழங்குமாறு ரசிகப் பெருமக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்…” என்றார்.
இந்த ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் வரும் ஜூலை 28-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.















