full screen background image

“நல்ல கதைகள் கிடைக்குது. தலைப்புதான் கிடைக்க மாட்டேங்குது..” – தயாரிப்பாளரின் வருத்தம்..!

“நல்ல கதைகள் கிடைக்குது. தலைப்புதான் கிடைக்க மாட்டேங்குது..” – தயாரிப்பாளரின் வருத்தம்..!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை நாயகனாக்கி உருவாகியுள்ள படம் ‘டார்லிங்’. இது தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பிரேம கதாசித்ரம்’ படத்தின் ரீமேக்.

ஜி.வி.பிரகாஷுடன், சிருஷ்டி, நிக்கி கல்ராணி, கருணாஸ், பாலசரவணன் நடித்துள்ளனர். படத்தை  ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம், அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது.

‘டார்லிங்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளிவரவுள்ளதால். படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

Darling Movie Press Meet Photos (2) 

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா பேசும்போது, “பெரிய படங்களாகத்தான் ஸ்டுடியோ க்ரீன் எடுக்கிறது என்று தமிழ்த் திரையுலகில் பேசப்பட்டபோது நல்ல சிறிய படங்களையும் வாங்கி வெளியிடுவது என்று முடிவெடுத்தோம். அப்படி நாங்கள் வெளியிட்ட படம்தான் ‘அட்டகத்தி’.

அந்தப் படம் எனக்குப் பிடித்திருந்தது. என் நண்பர்களிலேயே சிலருக்குத்தான் அந்தப் படம் பிடித்திருந்தது. பலரும் பல மாதிரி பேசினார்கள். ‘வாங்கியாகி விட்டது. என்ன செய்வது.. வெளியிட்டு விடு.. இனி இந்த  விநியோகம் வேலை என்று செய்யாதே’ என்றார்கள்.

ஆனால், நாங்கள் விடவில்லை. படத்தை ரஜினி படம் அளவுக்கு முயற்சி செய்து விளம்பரங்கள் செய்தோம். இருந்தாலும் உள்ளுக்குள் சிறு பயம் இருந்தது.

படத்தின் ரிலீஸ் தினத்தன்று தியேட்டர் விசிட் செய்தோம். ‘சங்கம் தியேட்டர் ஃபுல்’ என்றார்கள். எனக்கு ஆச்சரியமாகிவிட்டது. ‘அது எப்படிய்யா..? பக்கத்துல இருக்குற அபிராமி, ஆல்பர்ட்டுலேயும் இந்தப் படம் ரிலீஸாகியிருக்கே?’ன்னு சந்தேகப்பட்டோம். அவைகளும் ‘ஹவுஸ்புல்’ என்றவுடன் எனக்கு நம்பிக்கை பிறந்தது. மதியத்திற்குள் தகவல் கிடைத்த்து. ‘தமிழ்நாடு முழுக்க ஹவுஸ்புல் ஸார்’ என்றார்கள். படம் பெரிய அளவில் தமிழ்நாடு முழுவதும் வசூல் செய்தது. அந்தப் படத்தில் பல திறமைசாலிகள் கொட்டிக் கிடந்தார்கள். அதே இயக்குநர் ரஞ்சித்தை வைத்து ‘மெட்ராஸ்’ படத்தைத் தயாரித்தோம். அதுவும் வெற்றி பெற்றது.

இந்த ‘டார்லிங்’ படம் மேக்கிங்கில் தெலுங்கைவிட 15 மடங்கு நன்றாக வந்துள்ளது. இப்போதெல்லாம் படத்துக்கு தலைப்பு கிடைப்பதே பெரிய சிரமமாக இருக்கிறது. நல்ல கதையைக்கூட தேர்வு செய்துவிடலாம். ஆனால் தலைப்புதான் கிடைப்பதில்லை.

எந்த தலைப்பை யோசித்தாலும் யாராவது ஒருவர் அதைப் முன்பேயே பதிவு செய்து வைத்து இருக்கிறார்கள். எதைக் கேட்டாலும் அது 5 வருஷத்துக்கு முன்பே,  6 வருஷத்துக்கு முன்பேயே தயாரிப்பாளர் சங்கத்திலோ, கில்டிலோ பதிவு செய்துள்ளதாகக் கூறுகிறார்கள்.

இந்தப் பிரச்சினைக்கு விரைவில் ஒரு முடிவு கட்ட வேண்டும். குறிப்பிட்ட ஆண்டுவரை பதிவு செய்துவிட்டு படமெடுக்கவில்லை என்றால் அதனை ரத்து செய்ய வேண்டும்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் மீண்டும் தெலுங்கிலிருந்து ‘ரன் ராஜா ரன்’ படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறோம். தமிழிலும் கார்த்தி நடிக்கும் ‘கொம்பன்’, சூர்யா சாரின் ‘மாஸ்’  படங்களைத் தயாரிக்கிறோம். ஸ்டுடியோ க்ரீன் சிறு பட்ஜெட் படங்களையும் தொடர்ந்து தயாரிக்கும்…” என்றார்.

Our Score