இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளிவந்த ‘டார்லிங்’ படம் விமர்சகர்கள் இடையேயும், ரசிகர்கள் இடையேயும் வர்த்தக ரீதியாக மாபெரும் வெற்றியை தந்தது. அது மட்டுமல்ல.. சிறந்த இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு, நல்ல நடிகர் என்ற அந்தஸ்தையும் அந்த ‘டார்லிங்’ திரைப்படம் பெற்றுக் கொடுத்துள்ளது. இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்தார்.
இந்த வெற்றியை தொடர்ந்து ஞானவேல் ராஜா மீண்டும் தயாரித்துள்ள படம் ‘டார்லிங் 2’.
இந்தப் படத்தில் ‘மெட்ராஸ்’ புகழ் கலையரசன், காளி வெங்கட், முனிஷ்காந்த், ‘மெட்ராஸ்’ புகழ் ஜானி, இவர்களுடன் புதுமுகங்களாக ரமீஸ் மற்றும் மாயா அறிமுகமாகிறார்கள்.
மேலும் ரதன் இசையமைப்பாளராகவும், விஜய் கார்த்தி கண்ணன் ஒளிப்பதிவாளராகவும் சதீஷ் சந்திரசேகர் இயக்குநராகவும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளனர்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் சதீஷ் சந்திரசேகர், “ஒரு உண்மை சம்பத்தின் அடிப்படையில்தான் இந்த கதை உருவாக்கபட்டுள்ளது. நானும், எனது நண்பர்களும் ஒரு சுற்றுலாவுக்கு சென்றபோது எங்களுக்கு ஏற்பட்ட அனுபவம்தான் இந்தப் படத்தின் கதை. சின்ன பட்ஜெட்டில்தான் இந்தப் படத்தை ஆரம்பித்தோம். சின்னப் படம் என்றாலும் ஞானவேல் ராஜ சாரின் கை பட்டதும் பெரிய படமாக மாறிவிட்டது.
இந்தப் படத்தில் நடித்த அனைவருமே மிகவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளனர். படம் முழுக்க இரவு நேரத்தில்தான் நடந்தது. அதுவும் ஊட்டி குளிரில் படம் எடுத்தோம். குளிரில் நடுங்க நடுங்க படமாக்கப்பட்ட இந்தப் படம் இந்த வெயில் காலத்தில் ரசிகர்களை பேய் பயத்துடன் நடுங்க, நடுங்க படம் பார்க்க வைக்கும், வரும் ஏப்ரல் 1-ம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளது..” என்றார்.









