full screen background image

படத்தில் நடிப்பதற்காக கவிஞர் கண்ணதாசனிடம் நடிகை சாவித்திரி விதித்த நிபந்தனைகள்..!

படத்தில் நடிப்பதற்காக கவிஞர் கண்ணதாசனிடம் நடிகை சாவித்திரி விதித்த நிபந்தனைகள்..!

1963-ம் ஆண்டு கவிஞர் கண்ணதாசன் தயாரித்த ‘இரத்தத் திலகம்’ படத்தின் படப்பிடிப்பின்போது நடிகையர் திலகம் சாவித்திரிக்கும், கவிஞர் கண்ணதாசனுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சாவித்திரி அந்தப் படத்தில் நடிக்கவே மறுத்துவிட்டாராம்.

இந்தச் சம்பவம் பற்றி அந்தப் படத்தில் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றிய வீரைய்யா சமீபத்தில் ‘டூரிங் டாக்கீஸ்’ யுடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

“இரத்தத் திலகம்’ படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், நடிகையர் திலகம் சாவித்திரியும் நடித்து வந்தனர். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது திடீரென்று சாவித்திரி எங்களுக்குக் கொடுத்திருந்த தேதிகளில் இருந்து 5 தேதிகளை தேவர் பிலிம்ஸ் தயாரித்து வந்த ‘வேட்டைக்காரன்’ படத்திற்குக் கொடுத்துவிட்டார்.

5 நாட்கள் படப்பிடிப்பு முடிந்த நிலையில் :நாளையில் இருந்து உங்களுக்குத் தேதியில்லை. ‘வேட்டைக்காரன்’ படப்பிடிப்புக்குப் போகிறேன்” என்று சொல்லிவிட்டு சாவித்திரி போய்விட்டார்.

நான் இதை கவிஞர் கண்ணதாசனிடம் போய் சொன்னேன். அவர் மிகவும் கோபப்பட்டார். எப்படி நமக்குக் கொடுத்த தேதிகளை நம்மிடம் சொல்லாமல் மாற்றிக் கொடுக்கலாம் என்று ஆத்திரப்பட்டார். “சாவித்திரி என்ன நினைச்சுக்கிட்டிருக்கா.. அவ நாளைக்கு வரலைன்னா அவ நடிச்ச பிலிமையெல்லாம் எரிச்சு கொளுத்திருவேன்….” என்றெல்லாம் கோபப்பட்டார் கவிஞர்.

இதை எங்களது அலுவலகத்தில் இருந்த யாரோ ஒரு ஆள் கேட்டுவிட்டு அன்றைய தினம் இரவிலேயே சாவித்திரி வீட்டுக்குப் போய் அவரிடத்தில் சொல்லிவிட்டார். இதைக் கேட்டு இன்னும் கோபமான சாவித்திரி.. “நான் அந்தப் படத்தில் நடிக்கப் போவதே இல்லை” என்று மேனேஜர் மூலமாகச் சொல்லிவிட்டார்.

நான் இந்தக் களேபரத்தையெல்லாம் சிவாஜியிடம் போய் சொன்னேன். அவர் தம்பி சண்முகத்தை அழைத்து என்னிடம் பேசச் சொன்னார். “இப்போ என்ன செய்றது..?” என்று சண்முகம் கேட்டபோது, சிவாஜி அவரிடம், “இதை வீரைய்யாகிட்டயே விட்ரு. அவரே பார்த்துக்குவாரு..” என்று சொல்லிவிட்டார்.

நானும் அனைவரிடமும் “இந்தப் பிரச்சினையை நான் எப்படியாவது சமாளித்து சாவித்திரியை அழைத்து வருகிறேன்…” என்று சொல்லிவிட்டு வந்தேன்.

மறுநாள் காலை சாவித்திரியிடம் மேனேஜராக இருந்த ராவ் என்பவருக்கு போன் செய்து “சாவித்திரி இப்போது எங்கே எந்த இடத்தில் ஷூட்டிங்கில் இருக்கிறார்..?” என்று கேட்டேன். அவரும் சொன்னார். அவர் சொன்ன நெப்டியூன் ஸ்டூடியோவுக்கு நானும் சென்றேன்.

அங்கே சாவித்திரி அமர்ந்திருந்த இடத்தில் இருந்து தூரத்தில் நானும் நின்று கொண்டேன். சாவித்திரி பார்ப்பதுபோல இங்கிட்டும், அங்கிட்டுமாக நடந்து போனேன். வந்தேன். இதுபோல் தொடர்ந்து 3 நாட்கள் செய்தேன். 4-வது நாள் சாவித்திரி என்னை அருகில் அழைத்தார்.

“என்ன விஷயம்.. நீங்க எதுக்கு இங்க வர்றீங்க…?” என்று கேட்டார். “அம்மா.. அங்க ஷூட்டிங் அப்படியே நிக்குது. நீங்க கால்ஷீட் கொடுத்தால்தான் ஷூட்டிங் நடக்கும். நீங்க பார்த்து மனசு வைச்சு தேதி கொடுத்தால் நல்லாயிருக்கும்..” என்றேன்.

சாவித்திரி, “சரி. வர்றேன். ஆனால் ரெண்டு கண்டிஷன்.. ஒண்ணு எனக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்தை மொத்தமா ஒரே செக்குல தரணும். ரெண்டாவது.. இந்தப் பட விஷயமா உங்களைத் தவிர வேற யாரும் என்கிட்ட பேசக் கூடாது. இதுக்கு சம்மதமா..?” என்றார்.

நான் உடனேயே கவிஞரிடம் ஓடி வந்து இதைச் சொன்னேன். கவிஞரும் இதற்குச் சம்மதித்து சாவித்திரிக்குக் கொடுக்கப்பட வேண்டிய சம்பளமான பத்தாயிரம் ரூபாய்க்கு ஒரு செக்கை கொடுத்தார். அதோடு எங்க யூனிட்ல இருந்தவங்ககிட்ட “என்னைத் தவிர வேற யாரும் சாவித்திரிகிட்ட எது பத்தியும் பேசக் கூடாது”ன்னு நானே ஆர்டர் போட்டுட்டேன்.

செக்கைக் கொண்டு போய் சாவித்திரியோட மேனேஜர்கிட்ட கொடுத்திட்டேன். அது தெரிஞ்சு சாவித்திரியம்மா ஷூட்டிங்குக்கு வந்தாங்க.. ஷூட்டிங் போயிட்டிருக்கும்போது கவிஞர் கொடுத்த அந்த செக் பவுன்ஸ் ஆயிருச்சுன்னு மேனேஜர் ராவ் வந்து சொன்னார். இதை அவர் சாவித்திரிகிட்ட சொல்லலை.

நல்லதாப் போச்சுன்னு நினைச்சு.. ‘சாவித்திரிகிட்ட இதைச் சொல்ல வேண்டாம். நான் எப்படியாச்சும் நாளைக்குள்ள பணமா கொடுத்திடறேன்’ என்று சொல்லிவிட்டு கவிஞரிடம் வந்து இதைச் சொன்னேன். கவிஞரிடம் பணத்தைப் புரட்டி அடுத்த நாளே என்னிடம் கொடுத்தார். நான் ராவிடம் அந்தப் பணத்தைக் கொடுத்து பைசல் செய்தேன். ஒரு வழியாக சாவித்திரியை வைத்து அந்தப் படத்தை எடுத்து முடித்தோம்..” என்றார் தயாரிப்பு நிர்வாகி வீரைய்யா.

இங்கே இவ்வளவு கெத்து காட்டிய சாவித்திரி, இதே கெத்தை ‘வேட்டைக்காரன்’ படத்திலும் காட்டிவிட.. அந்தப் படத்தின் தயாரிப்பாளரான தேவருக்கும், சாவித்திரிக்கும் இடையிலும் மோதல் ஏற்பட்டு அந்தப் படத்திலும் பாதியில் நடிக்க மறுத்து தகராறு செய்துவிட்டார் சாவித்திரி.

கடைசியாக சமாதானம் செய்தபோது சாவித்திரி போட்ட ஒரு கண்டிஷன் “நான் செட்டுல இருக்கும்போது தேவர் அந்தப் பக்கமே வரக் கூடாது…” என்பதுதான். இந்தப் படம் முடியும்வரையிலும் தேவரும், சாவித்திரியும் பேசிக் கொள்ளவே இல்லை என்பதுதான் காமெடியான விஷயம்..!

Our Score