full screen background image

‘கோமாளி’ – சினிமா விமர்சனம்

‘கோமாளி’ – சினிமா விமர்சனம்

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஜெயம் ரவி நாயகனாகவும், காஜல் அகர்வால், சம்யுக்த ஹெக்டே நாயகிகளாகவும் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, வினோதினி வைத்தியநாதன், ஆர்.ஜே.ஆனந்தி, பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, டிசைனர் – ராஜா, ஆடை வடிவமைப்பாளர் – சரளா விஜயகுமார், லைன் புரொடியூஸர் – விக்கி, புகைப்படங்கள் – ஜெய்குமார், வைரவன், நடன இயக்கம் – சாண்டி, ரூயல், அசார், பாடல்கள் – கபிலன் வைரமுத்து, பிரதீப் ரங்கநாதன், ‘ஹிப் ஹாப்’ தமிழா, சண்டை இயக்கம் – ‘மிராக்கிள்’ மைக்கேல் ராஜ், இசை – ‘ஹிப் ஹாப்’ தமிழா, ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம்.நாதன், படத் தொகுப்பு – பிரவீன் கே.எல்., எழுத்து, இயக்கம் – பிரதீப் ரங்கநாதன்.

ஒரு வாலிபன் 16 வருடங்கள் கழித்து கோமாவில் இருந்து மீண்டெழுந்தால் என்னென்ன கூத்துக்கள் நடக்கும் என்பதுதான் படத்தின் கதை.

1999-ம் ஆண்டின் இறுதி நாள். பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் ஜெயம் ரவி தன் உடன் படிக்கும் மாணவியான சம்யுக்த ஹெக்டே மீது ஒரு தலைக் காதல் கொள்கிறார். இன்றைக்கு எப்படியாவது காதலியிடம் காதலைச் சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்து தன்னுடைய வீட்டில் இருந்த ஒரு சிற்பத்தை காதலிக்குப் பரிசாகக் கொடுக்க வேண்டி அதையும் கையில் எடுத்துக் கொண்டு காதலிக்காக காத்திருக்கிறார் ஜெயம் ரவி.

அதே நேரம் உள்ளூரில் பெரிய ரவுடிகளான கே.எஸ்.ரவிக்குமாருக்கும், பொன்னம்பலத்துக்கும் யார் பெரியவர் என்பதில் மோதல். இதனால் பொன்னம்பலத்தை போட்டுத் தள்ள முடிவெடுத்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

அவர்கள் ஒரு டீக்கடையில் பொன்னம்பலத்தை பிளந்து கொண்டிருக்கும்போது அந்தக் கடையின் பின்பக்கமாக தனது காதலியிடம் தனது காதலைப் பற்றிப் பேசுகிறார் ஜெயம் ரவி.

அப்போது ஏற்படும் குழப்பத்தில் ஜெயம் ரவியின் கையில் இருந்த சிற்பம் கே.எஸ்.ரவிக்குமார் கைக்கு மாறுகிறது. காதலியும் அடிதடி களேபரத்தில் சிக்கி ஓடுகிறார். இதைத் தொடர்ந்து ஜெயம் ரவியும் ஓடத் துவங்க, எங்கிருந்தோ வரும் ஒரு லாரி மின்னல் வேகத்தில் ஜெயம் ரவியை அடித்துத் தூக்குகிறது.

தலையில் பலத்த அடி. கோமோ ஸ்டேஜூக்கு செல்கிறார் ஜெயம் ரவி. இவருடைய பள்ளிக் கால நண்பரான யோகிபாபு இவரது குடும்பத்துக்குத் துணையாய் இருக்கிறார்.

16 வருடங்கள் கழித்து ஜெயம் ரவி கண் முழிக்கும்போது யோகிபாபு ஜெயம் ரவியின் தங்கையைக் கல்யாணம் செய்து இரண்டு குழந்தைகளையும் பெற்று மச்சானாக இருக்கிறார். ஜெயம் ரவியின் அப்பா இறந்து போயிருக்கிறார்.

கண் விழித்த ஜெயம் ரவியைக் கண்டு அவரது குடும்பத்தினர் சந்தோஷமாக இருந்தாலும், தங்கையும், மச்சான் யோகிபாபுவும் மிகுந்த பணக் கஷ்டத்தில் இருக்கிறார்கள். இப்போது இருக்கும் வீடு வங்கிக் கடனில் சிக்கியிருப்பதால் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள்.

தன்னுடைய குடும்பச் சுமையைக் குறைப்பதற்காக ஒரு அருங்காட்சியகத்தில் வாட்ச்மேன் வேலைக்குப் போகிறார் ஜெயம் ரவி. அங்கே அரியப் பொருட்களெல்லாம் ஏலத்திற்காக வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஜெயம் ரவி தனது காதலிக்கு பரிசாகக் கொடுக்கப் போன அந்தச் சிற்பமும் இருக்கிறது. அது தன்னுடையது என்கிறார் ஜெயம் ரவி.

ஆனால் அந்தச் சிற்பம் தற்போது லோக்கல் சட்டமன்ற உறுப்பினரான கே.எஸ்.ரவிக்குமாருடையதாக இருக்கிறது. அதனை எப்படியாவது கைப்பற்றி, ஏலத்தில் விற்று தங்கையின் வீட்டை மீட்கலாம் என்று ஜெயம் ரவி திட்டமிடுகிறார். இது நடந்தேறியதா.? இல்லையா..? என்பதுதான் இந்தக் ‘கோமாளி’ படத்தின் திரைக்கதை.

படத்தின் கதை வித்தியாசமாக இருந்தாலும் இது இயக்குநரின் சொந்தப் படைப்பல்ல. சுட்டதுதான். ‘Kick It In Old School’ என்ற கொரிய படத்தின் கதையை அப்படியே சுட்டு தமிழுக்கேற்றாற்போல் திரைக்கதை அமைத்து படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.

இருந்தும் இதே கதையில் ஏற்கெனவே நான் திரைக்கதை எழுதி அதனை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருப்பதாகச் சொல்லி கிருஷ்ணமூர்த்தி என்ற துணை இயக்குநர் ஒருவர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்தார்.

இந்தப் புகாரை விசாரித்த எழுத்தாளர் சங்கம், ‘கோமாளி’ படத்தின் இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி இருவரின் கதைகளையும் படித்துப் பார்த்துவிட்டு கிருஷ்ணமூர்த்தி முன்னரே எழுதி சங்கத்தில் பதிவு செய்து வைத்திருக்கும் திரைக்கதையைத்தான் பிரதீப் ரங்கநாதன் படமாக்கியிருக்கிறார் என்று தீர்ப்பளித்தது.

இதனால் துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்திக்கு ‘கோமாளி’ படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கே.கணேஷ், நஷ்ட ஈடாக 10 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார். மேலும், படத்தின் டைட்டிலிலும் ‘கதை, திரைக்கதை’ என்ற இடத்தில் கிருஷ்ணமூர்த்தியின் பெயரையும் போட்டிருக்கிறார்கள்.

ஆனால் பாவம் இந்தக் கிருஷ்ணமூர்த்தியும் இந்தக் கொரிய படத்தைக் காப்பியடித்துதான் கதை, திரைக்கதையை எழுதியிருக்கிறார் என்பது  தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுக்குத் தெரியவில்லை.

கொரிய எழுத்தாளர் எழுதிய கதையைத் திருடி புதிதாக தான் எழுதியதுபோல் எழுதி அதற்கு பத்து லட்சம் ரூபாய் சன்மானத்தையும் பெற்றிருக்கும் துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியின் வில்லத்தனத்தைப் பார்த்து தமிழ்த் திரையுலகமே சிரிக்கிறது..!

மீண்டும் படத்திற்கு வருவோம்.

ஜெயம் ரவியின் தோற்றத்திற்கு மிகவும் பொருத்தமாக இந்தப் படத்தின் கதை அமைந்திருக்கிறது. பள்ளி மாணவன் கேரக்டரில் பார்க்கும்போது சற்றும் சந்தேகம் வரவில்லை. அந்தக் காட்சிகளிலெல்லாம் அவரது இன்னசென்ட்டான தோற்றமும், அந்த வயதுக்கேற்ற நடிப்பும் பிரமாதமாக அமைந்திருக்கிறது.

கோமாவில் இருந்து விழித்த பிறகு வழக்கமான வாலிபராக இருந்தாலும் மனதளவில் அவர் 18 வயது வாலிபராகவே இருப்பதாக மருத்துவர் சொல்கிறார். அந்தக் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கேற்ற நடிப்பையும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் ஜெயம் ரவி.

காஜல் அகர்வாலுடனான காதலை வளர்க்க வேண்டி ஒரு தப்பை செய்து அதனால் மானம், மரியாதை போய் திரும்பி வந்து தங்கையிடம் பேச்சு வாங்கி அவமானப்படும்போது நிஜமாகவே வருத்தப்பட வைக்கிறது அவரது நடிப்பு.

இதேபோல் கிளைமாக்ஸில் வினோதினியைக் காப்பாற்ற முனையும் அந்தத் தருணத்தில் அவரது டிவிஸ்ட்டான ஆக்சன் ஏற்புடையதாகவே இருக்கிறது.  வரிசையாக ஹிட்டுக்களை கொடுத்துக் கொண்டிருக்கும் ஜெயம் ரவிக்கு நமது பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

நாயகிகளில் காஜலுக்கு வழக்கமான ஹீரோயின் வேடம். பெரிதாக நடிப்புக்கு வேலையில்லை. ஆனால் முதல் நாயகியாக நடித்திருக்கும் சம்யுக்த ஹெக்டேவை பள்ளிப் பருவத்தில் ரசித்து, இப்போது டாக்டரின் மனைவியாக இருக்கும்போதும் ஜெயம் ரவியுடன் இணைத்துப் பேசும் சில காட்சிகள் ஓவர்தான் என்றாலும் அதில் இவரது சமாளிப்பும், நடிப்பும் ரசனையானது. தியேட்டரில் கை தட்டல்கள் பறக்கிறது.

யோகிபாபு வழக்கமான காமெடியனாக மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிப்பையும் சேர்த்தே வழங்கியிருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் வில்லன் எம்.எல்.ஏ.வாக வலம் வருகிறார். உடன் இருக்கும் அல்லக்கைகளின் முட்டாள்தனமான பேச்சுக்களை சமாளிக்க முடியாமல் அவர் தடுமாறுவதிலும் நகைச்சுவை தெறிக்கிறது.

இவருடைய மனைவியாக நடித்திருக்கும் வினோதினியும் தனது கர்ப்பிணி வேடத்திற்கு மிகப் பொருத்தமாக நடித்திருக்கிறார். மருத்துவமனையில் முதல் முறையாக ஜெயம் ரவியைச் சந்தித்து தனது கதையைச் சொல்லும் தோரணையில் மனதைக் கவர்கிறார். மழை வெள்ளத்தில் மிதந்தபடியே தனது பிரசவ வலியை அவர் வெளிப்படுத்தியிருக்குமவிதம் சிறப்பு..!

ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவு இடைவேளைக்கு பின்புதான் சிறப்பாகவே தென்படுகிறது. அதிலும் மழை, வெள்ளம் காட்சிகளையெல்லாம் கச்சிதமாகப் படம் பிடித்திருக்கிறார். காஜல் அகர்வாலை தேவியாகக் காட்சிப்படுத்தும் அந்தப் பாடல் காட்சியைப் படமாக்கியிருக்கும்விதமும் சிறப்பு.

படத் தொகுப்பாளர் கே.எல்.பிரவீன் காமெடிகள் தெறிக்கும் அளவுக்கு கச்சிதமாக காட்சிகளை நறுக்கியிருக்கிறார். டாக்டருடன் அவரது வீட்டில் அமர்ந்து தனது காதல் கதையை ஜெயம் ரவி எடுத்துவிடும் காட்சியிலும், வினோதினியிடம் கல்யாணப் பத்திரிகை கொடுக்க வந்து மாற்றி, மாற்றிப் பேசும் காட்சியிலும் படத் தொகுப்பாளரால்தான் நகைச்சுவை தெறித்திருக்கிறது. பாராட்டுக்கள் பிரவீன் ஸார்..

‘ஹிப் ஹாப்’ தமிழாவின் இசையில் ‘பைசா நோட்டு’ பாடல் கேட்கும் ரகம். மற்ற பாடல்கள் மனதில் நிற்கவில்லை.

இப்போதைய குழந்தைகளுக்கும், முப்பதாண்டுகளுக்கு முந்தையக் காலக்கட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்குமான வித்தியாசத்தை மிகப் பெரிய வசனக் காட்சியின் மூலமாக சரியாக உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

மேலும், தற்போதைய காலக்கட்டத்தில் குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை காட்சி ரீதியாக படைத்திருப்பது அழகு. முதலில் தற்போது நமது குழந்தைகளின் கையில் இருந்து ஸ்மார்ட் போனை பிடுங்கி, அவர்களை விளையாட அனுப்ப வேண்டும் என்பதை அத்தனை பெற்றோர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமாக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் சொல்லியிருக்கிறார்.   

இதுபோலவே ‘கோலிக் குண்டு’, ‘காற்றாடி விடுதல்’, ‘பம்பரம் சுற்றுதல்’, ‘பல்லாங்குழி ஆடுதல்’ என 1970, 1980-களில் பிறந்தவர்கள் விளையாடி, அனுபவித்து, ரசித்த பல விஷயங்களையும் இதில் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

இதையெல்லாம் மறந்துவிட்ட தமிழ்ச் சமூகம் தற்போது எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதே தெரியாமல் இருக்கிறது என்பதையும் இந்தக் ‘கோமாளி’ சொல்லியிருப்பது இந்தப் படத்தின் சிறப்பம்சமாகும்.

பொன்னம்பலம் டீக்கடையில் அந்தப் பெண்ணின் இடுப்பைப் பார்க்கும் கவர்ச்சி காட்சியை முற்றிலுமாக நீக்கியிருக்கலாம். இந்த ஒரு காட்சியைப் படமாக்கியிருக்கும் விதத்திற்கே இந்தப் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்தான் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், ‘யு’ வாங்கியிருக்கிறார்கள். சென்சார் போர்டுக்கு நமது கண்டனங்கள்..!

முதல் பாதி ஜெட் வேகத்தில் நகைச்சுவையுடன் சென்றாலும் இடைவேளைக்கு பின்பான கதையில் நிறைய குழப்படி செய்திருப்பதால் முழுமையாக ரசிக்க முடியவில்லை. இடைவேளைக்கு முன்பு இருந்த அதே சுவையான திரைக்கதையை, இரண்டாம் பாதியிலும் வைத்திருந்தால் இந்தக் ‘கோமாளி’ நாயகனாகவே ஆகியிருப்பான்..!

Our Score