ஓம் சினி வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் சாரதி சதீஷ் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘காபி’.
இந்தப் படத்தில் ராகுல் தேவ், முக்தா கோட்சே, சவுந்தர்ராஜன், ராமச்சந்திரன் துரைராஜ், தரணி வாசுதேவன், இவர்களுடன் இனியாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு – எஸ்.வெங்கடேஷ், இசை – வெங்கட்நாத், படத் தொகுப்பு – வெங்கட் ராஜன், கலை இயக்கம் – ஜி.துரைராஜ், சண்டை இயக்கம் – டான் அசோக், நடன இயக்கம் – விஜி, சதீஷ், பாடல்கள் – மோகன்ராஜ், தயாரிப்பு வடிவமைப்பு – யுவராஜ், எழுத்து, இயக்கம் – சாய் கிருஷ்ணா.
இந்த ‘காபி’ படம் பற்றி இயக்குநர் சாய் கிருஷ்ணா பேசும்போது, “ஏழ்மை நிலையில் இருக்கும் நாயகியும், அவளது ஒரே தம்பியும் தங்களுடைய இளம் வயதிலேயே பெற்றோர்களை இழந்துவிடுகிறார்கள்
இதன் பின்பு வாழ்க்கையின் அனைத்துவித சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு, சமாளித்து, ஒரு இலட்சியத்துடன் தனது கனவை நனைவாக்க முயன்று கூடவே, அக்காள் என்கிற பொறுப்புணர்ச்சியுடன் தனது தம்பியையும் நன்கு படிக்க வைத்து வளர்த்து ஆளாக்குகிறாள் நாயகி.
இனி நல்லபடியாக வாழலாம்.. கஷ்டங்கள் தீர்ந்துவிடும் காலம் வந்துவிட்டது என்று அவள் நினைக்கும்போது சற்றும் எதிர்பாராத பல பிரச்சினைகளையும், பின்னடைவுகளையும், அதிர்ச்சிகரமான நிகழ்வுகளையும் அவள் எதிர்கொள்ள நேரிடுகிறது. இந்தச் சோதனையில் நாயகி எப்படி வெற்றி பெறுகிறாள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
நமக்குத் தெரியாமலேயே நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு மிகப் பெரிய சமூக அவலத்தை இத்திரைப்படம் தோலுரித்துக் காட்டுகிறது. நம் மக்களுக்கு இந்த நேரத்தில் தேவையான ஒரு விழிப்புணர்ச்சியை இத்திரைப்படம் கொடுக்கவிருக்கிறது…” என்றார்.
படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.