கோடம்பாக்கத்தில் இப்போதெல்லாம் இந்த வாரம் எந்த படம் ரிலீஸ் என்று கேட்பதைவிட எந்தப் படத்துக்கு ஸ்டே வாங்கியிருக்காங்க என்றுதான் அதிகம் விசாரிக்கப்படுகிறது.. அந்த அளவுக்கு வழக்கு, வாய்தாக்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
வரும் 18-ம் தேதி ரீலிஸாகக் காத்திருக்கும் இயக்குநர் விஜய்யின் ‘சைவம்’ படத்திற்கு சென்னை சிட்டி சிவில் கோர்ட் நேற்று தடையுத்தரவை வழங்கியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த எஸ்.ஜி.பிலிம்ஸ் நிறுனத்தின் உரிமையாளர் பி.ராம்தாஸ் தொடுத்த வழக்கின் அடிப்படையில் இந்த ஸ்டே ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.
பி.ராம்தாஸ் 2012-ம் ஆண்டு இயக்குநர் விஜய்யிடம் ஒரு படம் இயக்கித் தரும்படி கேட்டிருக்கிறார். விஜய்யும் ஒத்துக் கொள்ள ஒரு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் அட்வான்ஸாகவும் கொடுத்திருக்கிறார். ஆனால் பணத்தை வாங்கிவிட்டு விஜய் இதுவரையிலும் படம் செய்து தர முன் வராமல், தனது தந்தையின் தயாரிப்பில் ‘சைவம்’ படத்தைத் தயாரித்து வெளியிட முனைந்துவிட்டார்.
“இப்போது எனக்கு பதில் சொல்லிவிட்டுத்தான் சைவம் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும்..” என்பது ராம்தாஸின் கோரிக்கை. விஜய் பணம் வாங்கியது உண்மையெனில் இது நியாயமான கோரிக்கைதான்..
திரையுலகில் மட்டும் ஏன் நேர்மையும், நியாயமும், நாணயமும் கடைப்பிடிக்கப்படுவதில்லை…? கடைசி நிமிடத்தில் இந்த அளவுக்கு பிரச்சினைகளைச் சந்திப்பதெல்லாம் தேவைதானா..? முன்பே பேசி முடித்திருக்கலாமே..? எல்லாம் இவர்களாக இழுத்துக் கொள்வதுதான்..!









