‘கத்தி’ கதை விஷயத்தில் எழுத்தாளர் கோபி சொல்வது உண்மையே – ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் சாட்சியம்..!

‘கத்தி’ கதை விஷயத்தில் எழுத்தாளர் கோபி சொல்வது உண்மையே – ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் சாட்சியம்..!

‘கத்தி’ படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளரும், இயக்குநருமான மீஞ்சூர் கோபி வெளியில் சொல்லி மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இன்னமும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

vijay-aniruth-murugadoss-sathsh

முருகதாஸோ கோபிக்கு டீயும், இட்லியும் வாங்கிக் கொடுத்ததையும் 100 ரூபாய் சன்மானமாகக் கொடுத்தையும் தப்பித் தவறிகூட இப்போதுவரையிலும் ஒப்புக் கொள்ளாமல், “கோபின்றது யார்..? இதுவரையிலும் நான் அவரை பார்த்ததே இல்லை..” என்று வெட்கமேயில்லாமல் பொய் சொல்லி வருகிறார்.

vijay amstrong

இந்த நேரத்தில் கோபி முதலில் இயக்கிய ‘கறுப்பர் நகரம்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் “கோபி சொல்வது உண்மைதான். ‘கத்தி’ படத்தின் கதை கோபியுடையதுதான். கோபி அந்தக் கதையை விஜய்யிடம் கூறி அவரது அழைப்புக்காக காத்துக் கொண்டிருந்தார் என்பதை தன்னிடம் சொன்னதாகச்” சொல்கிறார்  விஜய் ஆம்ஸ்ட்ராங்.

தனது வலைத்தளத்தில் இது பற்றி விளக்கக் கட்டுரையை எழுதியிருக்கிறார் விஜய் ஆம்ஸ்ட்ராங்.

“தற்போது, ‘கத்தி’ சிக்கலில், புகார்தாரரான இயக்குனர் கோபியை, நான் நன்கு அறிவேன். காரணம் நான் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ‘கறுப்பர் நகரம்’ திரைப்படத்தின் இயக்குனர் அவர்.

அப்படத்தையும், மெட்ராஸ் படத்தையும் இணைத்து கடந்த மாதம் இதே இணையத்தில் பல விவாதங்கள் நடந்தது நினைவிருக்கலாம். அதன் உண்மை நிலை என்ன என்பதைப் பற்றி பல நண்பர்கள் கேட்டார்கள்.

பொதுவெளியில் இல்லாமல், தனிப்பட்ட உரையாடலில் என் கருத்தை பகிர்ந்து கொண்டேன். பொதுவெளியில் இல்லாமல், தனிப்பட்ட முறையில் கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு காரணம், அப்படத்தைப் பற்றி கோபி அவர்களே பொதுவெளியில் கருத்து சொல்லவில்லை என்பதும், மேலும் அதில் அத்தகைய அவசியம் ஏற்படவில்லை என்பதும்தான்.

நமக்குத் தெரிந்ததை எல்லாம் பொதுவெளியில் சொல்லியே ஆக வேண்டுமா என்ன? ஆனால் இப்போது ‘கத்தி’ கதையில், எனக்குத் தெரிந்த சில உண்மைகளை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

அந்த வீடியோவில் இயக்குனர் கோபி சொல்லும் செய்திகள் பெரும்பாலானவை நான் முன்பே அறிந்ததுதான். இவற்றைப் பற்றிய தகவல்களை ‘கறுப்பர் நகரம்’ திரைப்பட வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

அப்போது அதில் அவருக்கு எந்த உள்நோக்கமும் இருந்திருக்கவில்லை, வெறும் தகவல்களாக மட்டுமே அவை பகிர்ந்து கொள்ளப்பட்டது. காரணம், அப்போது அவர் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்த இயக்குனர். அதைத் தவிர்த்து வேறதுவும் முக்கியமானதில்லை.

அப்போது ஏழாம் அறிவு பட வேலைகள் நிகழ்ந்து கொண்டிருந்ததாக நினைவு. (அதன் தலைப்பு பற்றியும் அப்போது என்னிடம் குறிப்பிட்டார் கோபி. “ஏழாம் அறிவு என்பது போரை குறிக்கிறது” என்றார்) தான் இயக்குனர் முருகதாஸ் அவர்களிடம் ஒரு கதை சொல்லியிருப்பதாகவும், பின்பு அது தள்ளிபோய் விட்டதாகவும் சொன்னார்.

திரைத்திறையில் இது மிகவும் சகஜம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். தான் தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தரை சந்தித்தது, அதன் தொடர்ச்சியாக முருகதாஸை சந்தித்தது பற்றி ஓய்வு நேர உரையாடல்களில் அவர் பகிர்ந்து கொண்டார்.

மேலும் அது விவசாயிகளின் பிரச்சனை பற்றியது என்பதும் நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களிடம் பறி கொடுப்பதைப் பற்றியது என்பதைக்கூட சொன்னார். மேலும் சில தகவல்களை அவர் அப்போது பகிர்ந்து கொண்ட போதும், அவை எனக்கு இப்போது நினைவிலில்லை.

பின்பு அவற்றைப்பற்றி நான் மறந்துகூட போனேன். காரணம், கடந்த இரண்டு வருடங்களாக எனக்கு கோபிக்கும் தொடர்பில்லை என்பதுதான். சில காரணங்களால் கறுப்பர் நகரம் படம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. நான் மற்ற படங்கள் செய்ய வந்துவிட்டேன்.

இப்போது, கோபியின் பேட்டியை பார்த்தபோதுதான், இவற்றைப்பற்றி அவர் அன்றே பகிர்ந்துகொண்டது நினைவிற்கு வருகிறது.

அப்பேட்டியில் கோபி பொய் பேசவில்லை என்பது என் எண்ணம். காரணம், அவர் சொல்லும் பல விஷயங்கள் முன்பு என்னிடமும் சொல்லப்பட்டவை. கத்தி படமொன்று உருவாகும்… அதில் விஜய் நடிப்பார் போன்ற தகவல்கள் தெரிவதற்கு முன்பே சொல்லப்பட்டவை.

அப்போது அந்த தகவலுக்கு எந்த மதிப்புமில்லை. வெறும் தகவல்களாக, பொழுதைக் கடத்தும் வேளைகளில் சொல்லப்பட்டவை அவ்வளவுதான். அக்கதை படமாகும் என்ற நம்பிக்கைகூட கோபியிடமில்லை அப்போது.

இப்படியான பல நிகழ்வுகள் திரைத்துறையில் உண்டு.. ஒரு கதையை சொல்லி, அது தேர்வு செய்யப்பட்டு, படமாக்கும் முயற்சிகள் நடந்து, பின்பு அது அப்படியே கிடப்பில் போடப்படுவது திரைத்துறையின் மிகச் சாதாரண நிகழ்வுகளில் ஒன்றுதான்.

மேலும், ‘கத்தி’ திரைப்படம் பேசும் உட்பொருளை கோபி உருவாக்கியிருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

காரணம், கோபி ஒரு சிறந்த படிப்பாளி, சமூக ஆர்வலர், மக்களின் நலன் பேணும் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர். பொதுவுடமை பேசும் தோழர், நல்ல படைப்புகளை உருவாக்கும் பேரவா கொண்டவர், மாற்று சினிமா மீதான ஆர்வம் கொண்டவர். குறிப்பாக கடைநிலை மனிதர்களின் வாழ்வும், நிலையும் படைப்புகளாக மாற்றப்பட வேண்டுமென்ற விருப்பம் கொண்டவர், சமநிலை சமூகமொன்று உருவாகவும் அதற்கு கலை உதவ வேண்டுமென்ற எண்ணமும் கொண்டவர்.

இவைதான் அவரோடு நான் பழகிய நாட்களில் அவரைப் பற்றிய என் மதிப்பீடுகள். எனக்கு அவர் முன்பே பழக்கமில்லை. ‘கறுப்பர் நகரம்’ திரைப்படத்திற்காக சந்தித்ததுதான் எனக்கும் அவருக்குமான பழக்கம். இன்றுவரையும் அவ்வளவுதான்.

கறுப்பர் நகரம் படம் நிறுத்தப்பட்டபின்பு எங்களுக்குள் தொடர்பற்றுப் போயிற்று. சில காலம் கழித்து, ‘அட்டக்கத்தி’யும், ‘மெட்ராஸ்’ படத்தின் முன்னோட்டமும் வந்தபோதெல்லாம் அவரை நினைத்துக்கொண்டேன். காரணம் அதில், ‘கறுப்பர் நகர’த்தின் சாயல்கள் இருந்தன. அதைப் பற்றிகூட அவரிடம் நான் விவாதித்ததில்லை.

பின்பு ஒரு நாள் உணவுக் கூடமொன்றில் அவரைப் பார்த்தேன், முதல் கணத்தில் அடையாளம் கண்டு கொள்ள முடியாத அளவு மாறிப் போயிருந்தார். நாற்பதை ஒட்டிய வயதுக்காரர், உடல் நலமின்மை, வறுமை, போராட்டம், தளர்ச்சி என உருவம் குலைந்து காணப்பட்டார்.

பின்பு அடையாளம் தெளிந்து பேசிக் கொண்டோம். ‘கறுப்பர் நகர’த்தைப் பற்றி குறிப்பிடும்படியாக செய்தியில்லை என்றும், தான் திரைத்துறையிலிருந்தே விலக விரும்புவதையும், தன் மனம் உகந்த ‘ஆவணப் படங்களை’ மட்டுமே இனி இயக்கப் போவதாகவும் சொன்னார். மேலும் சிறிது நேரம் உரையாடிவிட்டு பிரிந்தோம்.

எனக்கு, உண்மையிலேயே பெரும் துயரமாக இருந்தது. அவரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். சிறந்த படைப்பாளியாக பரிமாணிக்கும் தகுதி உடைய ஒருவர், தமிழ்த் திரைத் துறையின் போராட்டக் களத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் விலகிப் போவதை நினைத்து மனம் வேதனை கொண்டது.

இவ்வளவு அறிவு கொண்ட கோபி ஏன் தன் கதையை ‘காப்புரிமை’ பெற்று வைத்திருக்கவில்லை என்ற வாதமெல்லாம் வைக்கப்படுகிறது. ஏராளமான துறைகளில் உலகளாவிய அளவில் காப்புரிமை வழக்குகளின் நிலை  (Apple vs Samsung) எவ்வாறு இருக்கிறது என்பதை நாம் நன்கறிவோம். இங்கே கலைத்துறையில் அது உதவாது என்பது மட்டுமல்ல, நடைமுறைச் சாத்தியமுமற்றது என்பதை நாம் உணர வேண்டும்.

காரணம், ஒரு திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் என்பவை, அத்திரைப்படம் திரைக்கு வரும்வரை திருத்தம் செய்ய சாத்தியம் கொண்டவை. மாற்றம் அடைந்து கொண்டேதான் இருக்கும். அதன் காரணமாகவே பெரும்பாலானோர் தன் கதை இதுதான் என்று அறுதியிட்டு காப்பீடு செய்ய முயலுவதில்லை.

மேலும் தமிழ்த் திரையுலம், அப்படி ஒன்றும் முறையாக வழிமுறைகளை பின்பற்றி நடக்கும் துறையல்ல. தனக்கு எப்படியாவது வாய்ப்பு கிடைத்துவிடாதா என்ற தவிப்புக்கு, அத்துணை கலைஞர்களையும் உள்ளாக்கும் துறை இது.

ஆகையால், தன் கதையை ஏன் கோபி முன்பே காப்புரிமை செய்து வைத்திருக்கவில்லை என்ற வாதம், வீண் என்பதை உணர்க.

முடிவாக, ‘கத்தி’ சிக்கலை ஒட்டிய அவரின் பேட்டியைப் பார்க்கும் போது, அதை வழக்கமான பணம் பிடுங்க நடத்தப்படும் தகிடுத்தத்தமாக கருதி ஒதுக்கிச் சென்றுவிட என்னால் முடியவில்லை.

அப்பேட்டியின் முடிவில், “நான் பொய் சொல்லுகிறேன் என்பதை கண்டுபிடிக்கவாவது விசாரணை நடத்துங்கள்” என்ற அவரின் வாதம் ஞாயமானதாக எனக்குப் படுகிறது.

மேலும் தான் போராடுவது, பணத்திற்காக மட்டுமில்லை, அது என் கதை என்ற அங்கீகாரத்திற்காகவும்தான் என்று அவர் சொல்வதை நாம் ஏற்கத்தான் வேண்டும்.

அங்கீகாரத்திற்காக போராடும் சமூகத்திலிருந்தும், அதன் போராட்ட அரசியலிலிருந்தும் வந்த மனிதர் அவர். நீதிமன்றம் எப்போதும் நீதியை நிலை நாட்டிவிடும் என்ற நம்பிக்கையை கொடுக்கவியலா தன்மை கொண்டது, என்ற முன்னனுபவம் கொண்ட சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம் என்பதனால், சமூகத்தின் மீதும், திரைத்துறையின் மீதும் ஆர்வம் கொண்டவர்கள் இப்பிரச்சினையில் தலையிட்டு உண்மையை சமூகத்திற்கு உணர்த்த வேண்டுமென்ற விருப்பம் எனக்கு இருக்கிறது.

மற்றவர்கள் எப்படியோ, கோபியைப் பொருத்தவரை, அவர் தகுதியானவர் என்பதை அறிந்தவன் என்பதனாலேயே இக்கட்டுரையை நான் எழுத வேண்டியதாகிற்று.

சமூக அக்கறை, மக்கள் நலம், கலையின் மேன்மை, அழகியலோடு கூடிய உண்மை பேசும் படைப்புகளை உருவாக்கும் தகுதி, படிப்பு, பயிற்சி கொண்ட கலைஞர்களை தமிழ்த் திரையுலகம் இன்னும் கொஞ்சம் நன்றாக நடத்தலாம் என்பது என் ஏக்கம்.

அவர்களை துரத்தி துரத்தி.. வாழ்வின் எல்லைக்கே விரட்டும் பழக்கத்தை அது கைவிட்டு திருந்தினால்.. நன்றாக இருக்கும்..”

அண்ணன் விஜய் ஆம்ஸ்ட்ராங் இதில் எழுதியிருப்பதை பார்த்தால் இயக்குநர் கோபி, முருகதாஸை சந்தித்து கதையைச் சொல்லியிருப்பதும், அவர் காத்திருக்கும்படி சொல்லியிரு்பபதும் உண்மை என்றே தெரிகிறது..!

இன்னும் எத்தனை பொய் சொல்லித் தப்பிக்க இருக்கிறீர்கள் மிஸ்டர் முருகதாஸ்..!

இயக்குநர் கோபிக்குரிய பணத்தையும், அங்கீகாரத்தையும் வழங்குவதுதான் முறையானது. இன்னமும் பொய் சொல்லி ஒரு அக்மார்க் திருடனாக உங்களது பெயரை தமிழ்த் திரையுலகில் பதிவு செய்து கொள்ளாதீர்கள்..!

Our Score