FEPSI அமைப்பினர் இன்று திடீரென்று அறிவித்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் தன்னிச்சையானது என்றும், திரைப்பட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடியது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்தச் சங்கத்தின் செயலாளர் B.கண்ணன் இன்று வெளியிட்ட அறிக்கை இது.
வணக்கம்.
தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின்(FEFSI) தலைவரான திரு. G.சிவா மீது தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம்(SICA) அபாண்டமாக குற்றம் சாட்டியதாக கூறி பெப்சி(FEFSI) நிர்வாகம் இன்று திடீரென வேலை நிறுத்தத்தை அறிவித்தனர்.
இது திரைப்பட துறையினர் மற்றும் திரைப்பட தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த குழப்பத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியது. இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம்(SICA) தன்னுடைய நிலைப்பாட்டினை விளக்குவது எங்களுடைய கடைமையாகும்.
எங்களது சங்கத்தின் சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதியன்று மலேசியாவில் நடத்தப்பட்ட SICA திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியின் தொகுப்பின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை சங்கத்தின் முந்தைய நிர்வாகிகளால் சன் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டது.
அதன் மூலமாக பெறப்பட்ட 3 கோடியே 75 லட்சம் வருவாயில், நாற்பது லட்சம் ரூபாய் செலவு செய்ததற்கான எந்தவொரு உண்மையான ரசீதுகளும், ஆவணங்களும் சங்கத்தில் ஒப்படைக்கப்படவே இல்லை.
இது தொடர்பாக கடந்த நிர்வாகத்தினர்களான திரு. N.K..விஸ்வநாதன் (முன்னாள் தலைவர்), திரு.G.சிவா (முன்னாள் பொதுச் செயலாளர்) மற்றும் திரு. K.S.செல்வராஜ் (முன்னாள் பொருளாளர்) ஆகியோரிடம் முறையான விளக்கம் கேட்டு பல முறை கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்களிடமிருந்து முறையான விளக்கங்களும், சரியான கணக்குகளும் அதற்கு உண்டான ரசீதுகளும், ஆவணங்களும் கொடுக்கப்படவில்லை.
இதன் விளைவாக தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின்(SICA) செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு திரு.G.சிவா உட்பட கடந்த நிர்வாகத்தினர் மீது நிர்வாக ரீதியாகவும், சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தின் அடிப்படையில்தான் அவர்களின் மீது சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் தற்போது உள்ள தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின்(SICA) புதிய நிர்வாகிகளாகிய நாங்கள் ஓர் புகார் மனுவை அளித்தோம்.
இந்த நடவடிக்கை எங்கள் சங்க உறுப்பினர்களின் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே ஆகும்.
ஆனால் தற்போது பெப்சி(FEFSI)யின் தலைவராக உள்ள திரு. G.சிவா அவர்கள் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம்(SICA) எடுத்த நடவடிக்கையை ஏதோ அவர் மீது மட்டுமே எடுத்த நடவடிக்கை போல ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கி அவரின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஒட்டு மொத்த திரைத்துறையின் படப்பிடிப்புகளை நடத்த விடாமல் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்த இந்த செயல் வருந்ததக்கதாகும்.
மேலும் இந்த வேலை நிறுத்தம் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் ஒட்டு மொத்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடிய செயலாகும்.
அகில இந்திய தொழிலாளர்கள் சம்மேளன தலைவராகவும்(AIFEC) மற்றும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் (FEFSI) தலைவராகவும் உள்ள திரு. G.சிவா அவர்களின் தலைமையின் கீழ் உள்ள பெப்சி (FEFSI) நிர்வாகமே தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடிய இது போன்ற செயலில் ஈடுபடுவது மிகவும் வருத்தத்திற்குரியது.
SICA நிர்வாகம் இது போன்ற தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு எதிரான வேலை நிறுத்தத்தை ஒருபோதும் ஆதரிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி
இப்படிக்கு
B .கண்ணன்
பொதுச் செயலாளர்
நாள் : 24/11/2016