full screen background image

ஒளிப்பதிவாளர் பீ.கண்ணன் மறைவுக்கு இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இரங்கல் செய்தி..!

ஒளிப்பதிவாளர் பீ.கண்ணன் மறைவுக்கு இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இரங்கல் செய்தி..!

தமிழ்த் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளரும், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான பீ.கண்ணன் இன்று மதியம் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69.

ஒளிப்பதிவாளர் பீ.கண்ணன் தமிழ்த் திரையுலகத்தின் பழம்பெரும் இயக்குநரான பீம்சிங்கின் மகனாவார். பிரபலமான படத் தொகுப்பாளரான பீ.லெனின் இவரது சகோதரராவார்.

இவருடைய தந்தை பீம்சிங் இயக்கிய ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ என்ற படத்தில்தான் ஒளிப்பதிவளராக பீ.கண்ணன் அறிமுகமானார். இதன் பின்பு ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுடன் இணைந்த பின்புதான் தமிழ்த் திரையுலகத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஒளிப்பதிவாளராகப் பெயரெடுத்தார் பீ.கண்ணன்.

இவர் தமிழில் மட்டும் மொத்தம் 50 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். அதில் சுமார் 30 படங்கள் பாரதிராஜா இயக்கியதாகும். இதனாலேயே இவரை பலரும் ‘பாரதிராஜாவின் கண்கள்’ என்றே அழைப்பார்கள்.

1980-ல் ‘நிழல்கள்’ படத்தில்தான் பீ.கண்ணனுடன் இணைந்தார் பாரதிராஜா. அதிலிருந்து 2008-ம் ஆண்டு வெளியான ‘பொம்மலாட்டம்’ படம் வரையிலும் சுமார் 29 ஆண்டுகள் தொடர்ச்சியாய் பாரதிராஜா இயக்கிய கிட்டத்தட்ட 30 படங்களுக்கு கண்ணன்தான் ஒளிப்பதிவாளர். இடையிடையே பாரதிராஜா இந்தியிலும், தெலுங்கிலும் படங்களை இயக்கப் போனபோதுகூட கண்ணனைத்தான் அங்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்ற வைத்தார்.

‘நிழல்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘டிக் டிக் டிக்’, ’காதல் ஓவியம்’, ‘வாலிபமே வா வா’, ‘மண் வாசனை’, ‘புதுமைப் பெண்’, ‘முதல் மரியாதை’, ‘ஒரு கைதியின் டைரி’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கொடி பறக்குது’, ‘என் உயிர்த் தோழன்’, ‘புது நெல்லு புது நாத்து’, ‘நாடோடித் தென்றல்’, ’கேப்டன் மகள்’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘கருத்தம்மா’, ‘பசும்பொன்’, ‘தாஜ் மஹால்’, ‘கடல் பூக்கள்’, ‘கண்களால் கைது செய்’, ‘பொம்மலாட்டம்’ ஆகியவை பீ.கண்ணன் தமிழில் ஒளிப்பதிவு செய்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் படங்கள். ‘அந்தி மந்தாரை’, ‘ஈர நிலம்’ ஆகிய இரண்டு படங்களுக்கு மட்டுமே இவர் ஒளிப்பதிவு செய்யவில்லை.

ஒரு இயக்குநர் – ஒளிப்பதிவாளர் கூட்டணி இத்தனையாண்டு காலம் தொடர்ச்சியாக தமிழ்த் திரையுலகத்தில் இணைந்து பணியாற்றியது வேறு யாரும் இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.

பாரதிராஜா அளித்த பேட்டியொன்றில், “நான் படப்பிடிப்புக்குச் செல்லும்போது கேமராவை எடுத்துச் செல்வதில்லை. என் கண்ணனுடைய இரண்டு கண்களை மட்டும்தான் எடுத்துச் செல்வேன். அந்தக் கண்களுக்கு மட்டும்தான் ஆகாயத்தின் மறுபுறத்தையும் பார்க்கும் சக்தியுண்டு” என்று பாராட்டியுள்ளார். அந்த அளவுக்கு இருவருமே மிக நெருங்கிய நண்பர்கள்.

மேலும் அவரது சகோதரரான படத் தொகுப்பாளர் பீ.லெனின் இயக்கிய ‘சொல்லத் துடிக்குது மனசு’ படத்துக்கும் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இதில்லாமல், ‘சூரசம்ஹாரம்’, ‘விஷ்வதுளசி’, ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’, ‘உளியின் ஓசை’ ஆகிய படங்களுக்கும் இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பீ.கண்ணன் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘அலைகள் ஓய்வதில்லை’, ‘கண்களால் கைது செய்’ ஆகிய படங்களின் ஒளிப்பதிவிற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான மாநில அரசின் விருதினைப் பெற்றிருக்கிறார். 

இவரது மனைவி பெயர் காஞ்சனா. மதுமதி மற்றும் ஜனனி என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

இன்று திடீரென்று அவருக்கு கடும் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து வடபழனியில் இருக்கும் சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கண்ணன். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று மதியம் 3 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

ஒளிப்பதிவாளர் கண்ணனின் மறைவுக்கு, திரையுலகப் பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். அதேபோல், தன் நெருங்கிய நண்பரை இழந்துள்ள ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கும் ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா தற்போது தேனியில் இருப்பதால் தனது நெருங்கிய நண்பரான கண்ணனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோ செய்தியில்…

“என் இனிய தமிழ் மக்களே..!

பல நேரங்களில் பல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன். மகிழ்ச்சியாகவும் சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன். சில இடங்களில் இக்கட்டான சூழ்நிலைகளிலும் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

இன்றைக்கு என்னுடைய வாழ்நாளில் என் துணைவியாரைவிடவும் என்னுடன் அதிக நேரம் இருந்த, பணியாற்றிய ஒரு மிகப் பெரிய ஒளிப்பதிவு மேதை பி.கண்ணன்.. உங்களுக்கே தெரியும். நான் படிப்பிடிப்புக்குச் செல்லும்போது ‘என் இரண்டு கண்களையும் எடுத்துச் செல்வதில்லை. கண்ணனைத்தான் அழைத்துச் செல்கிறேன் என்று. அவனுக்குத்தான் ஆகாயத்தையும் அதன் மறுபக்கத்தையும் பார்க்கத் தெரியும்’ என்று சொல்லியிருக்கிறேன்.

நாற்பதாண்டு காலம் அவரோடு இணைந்து பணியாற்றியிருக்கிறேன். இப்போதுகூட என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை அவருடைய மறைவை..! இந்தக் கொரோனா அவருடைய உடலை தரிச்சக்கூட முடியாத நிலையை உருவாக்கியிருக்கிறது.

ஒரு அற்புதமான கலைஞனை நான் மட்டுமல்ல.. திரையுலகமே இழந்துவிட்டது. நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒரு ஸ்லம் பேக்கிரவுண்ட். அதற்கு எப்படி ஒளிப்பதிவு செய்ய வேண்டும்.. பீரியட் பிலிம். நாடோடி தென்றல்.. அதற்கு எப்படி ஒளிப்பதிவு செய்ய வேண்டும்.. காதல் ஓவியம்.. அது ஒரு காவியம்.. அதற்கு எப்படி ஒளிப்பதிவு செய்ய வேண்டும்.. இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு என்னுடன் பணியாற்றியிருக்கிறார்.

எனக்குக் கிடைத்த புகழ், இந்த மண், கலாச்சாரம், மண்வாசனை அனைத்தையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தினேன். ஆனால் இந்தப் புகழில் பெரும் பங்கு கண்ணனுக்குத்தான் போய்ச் சேர வேண்டும்.

இந்தக் கொரோனா சிக்கல்களினால் அவருடைய உடலை நேரில் பார்க்க செல்ல முடியாத நிலையில் நான் இருக்கிறேன். உலகத் தமிழர்கள் அனைவரும் இந்த மண்ணின் கலாச்சாரத்தை, பண்பாட்டை.. தன்னுடைய ஒளிப்பதிவின் மூலம் காட்டிய பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்த அதுவும் பீம்சிங்கின் பையன்.. கண்ணனின் ஆத்மா சாந்தியாக உலகத் தமிழர்கள் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்..” என்று தனது அஞ்சலியில் குறிப்பிட்டுள்ளார்.

ஒளிப்பதிவாளர் பீ.கண்ணனின் இறுதிச் சடங்குகள் நாளை காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெறவுள்ளது.

Our Score