ஏவி.எம்.ராஜேஸ்வரி திரையரங்கம் நிரந்தரமாக மூடப்படுகிறது

ஏவி.எம்.ராஜேஸ்வரி திரையரங்கம் நிரந்தரமாக மூடப்படுகிறது
வடபழனியின் தனித்த அடையாளமாக இருந்த ஏவி.எம்.ராஜேஸ்வரி திரையரங்கம் எதிர்பார்க்கப்பட்டதுபோலவே மூடப்படுகிறதாம்.
சென்ற வருடமே அந்த இடத்தில் அடுக்கு மாடி பல்நோக்கு வணிக வளாகம் வரப் போவதை அந்த தியேட்டரின் உரிமையாளரான ஏவி.எம்.கே.சண்முகம் உறுதிப்படுத்தியிருந்தார்.
இதனால் இந்தத் தியேட்டர் எப்போது மூடப்படும் என்பது எதிர்பார்ப்பாக இருந்தது. இப்போது இந்த கொரோனா காலத்திய ஷட் டவுனை பயன்படுத்தி நிரந்தரமாக மூடுவதாக அறிவித்துவிட்டார்கள்.
ஏவி.எம். நிறுவன சகோதரர்களிடையே ஏற்பட்ட பாகப் பிரிவினையின்போது ஏவி.எம்.கார்டன் மற்றும் அதற்கு முன்பு இருந்த பகுதி, ஏவி.எம்.ராஜேஸ்வரி தியேட்டர் மற்றும் அதன் முன்பு இருந்த பகுதிகள் அனைத்தும் ஏவி.எம்.குமரன் ஸாரின் வசம் வந்தன.
ஏற்கெனவே ஏவி.எம்.கார்டனின் முன்புறம் இருந்த பகுதியில் இருந்த செட்டுகள் இடிக்கப்பட்டு அது மருத்துவமனையாக மாறிவிட்டது. இப்போது இந்தப் பக்கம் கை வைத்திருக்கிறார்கள்.
தொழில் துறை மாறும்போது முதலாளிகளின் தொழில் பார்வையும் மாறும். இதுவும் தவறில்லைதான். ஆனால் என்னைப் போன்ற ஏழை ரசிகர்களுக்கு பல முறை ஏவி.எம். ராஜேஸ்வரி தியேட்டர்தான் மிகச் சிறந்த நண்பன்.
முதல் காரணம் தியேட்டர் கட்டணம் அரசு நிர்ணயித்த அதே கட்டணம்தான். அதிகப்பட்சம் பிளாக்கில் டிக்கெட் விற்காமல் பார்த்துக் கொள்வார்கள். ரசிகர்களை கவுரமாக நடத்துவார்கள். குடிக்க இலவச தண்ணீர் வேண்டும் என்று புகார் சொன்னவுடன் அடுத்த நாளே தண்ணீரை வைத்தார்கள்.
சுப்ரீம் கோர்ட் இந்தியாவின் தேசிய கீதத்தை திரையரங்குகளில் ஒலிபரப்பு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிடுவதற்கு முன்பாகவே தேசிய கீதம் இத்திரையரங்கத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. இதைத் தவிர்ப்பதற்காகவே தேசிய கீதம் பாடி முடியும்வரையிலும் வெளியில் காத்திருந்து உள்ளே செல்வேன். அது வேறு கதை..!
பல பெரிய பட்ஜெட் படங்கள் இத்தியேட்டரில் திரையிடப்படவில்லை. ஒரே காரணம்.. டிக்கெட் விலையை இவர்கள் ஏற்றவே மாட்டார்கள். இதனாலேயே பல தயாரிப்பாளர்களின் கோபத்திற்கு ஆளானவர்கள். ஆனாலும், கடைசிவரையிலும் இந்தக் கொள்கையில் உறுதியாகவே இருந்தார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.
தியேட்டர் பராமரிப்பில் யாரும் குற்றம், குறை சொல்லாத அளவுக்கு நடந்து கொண்ட முதலாளிகள். எத்தனையோ சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஷோக்களை கொடுத்தார்கள்.
காலை காட்சி ஒரு படமும் மற்றைய மூன்று காட்சிகள் வேறு படமும் வெளியாகும். இல்லையென்றால் காலையும், மாலையும் ஒரு படமும், மதியமும், இரவுக் காட்சியும் வேறு படமுமாக திரையிட்டு வாய்ப்புத் தந்தவர்கள்.
வாடகைதான் என்றாலும் ‘ஷோ’ கொடுப்பதற்கும் ஒரு மனசு வேண்டும். இதைச் செய்தவர்கள் இவர்கள்தான். சில குறிப்பிடத்தக்க சின்ன பட்ஜெட் படங்களை இந்தத் தியேட்டரில்தான் பார்த்தேன்.
நீண்ட காலம் வசித்து வந்த வீட்டை இடித்துத் தள்ளிவிட்டு புது வீட்டினைக் கட்டும்போது குடியிருந்தவர்களுக்கும் இருக்கும் அதே மன வலிதான் இப்போதும் இத்தியேட்டரின் ரசிகர்களுக்கும் ஏற்படுகிறது.
ஆனால் இது தவிர்க்க முடியாதது. மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை நினைவில் கொண்டு மனதை தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்..!
வரக் கூடிய மால் கட்டுமானத்தில் தியேட்டர்கள் உண்டா என்று தெரியவில்லை. இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். சின்ன சின்ன தியேட்டர்களாக கட்டினால் நிச்சயம் தொழிலை நடத்த முடியும்..
இதுநாள்வரையில் கூடுமானவரையிலும் நேர்மையாக இந்தத் திரையரங்கத்தை நடத்திக் காண்பித்த ஏவி.எம்.ராஜேஸ்வரி தியேட்டர் உரிமையாளர்களுக்கு எனது நன்றிகள்..!
Our Score