full screen background image

பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் அனந்தகுட்டன் காலமானார்

பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் அனந்தகுட்டன் காலமானார்

பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் அனந்தகுட்டன் இன்று காலமானார். அவருக்கு வயது 61.

1977-ம் வருடம் ‘மனசில் ஒரு மயில்’ என்கிற மலையாளப் படத்தின் மூலமாக சினிமாவுலகத்திற்கு ஒளிப்பதிவாளராக அறிமுகமான அனந்தகுட்டன் இதுவரையிலும் சுமார் 150 படங்களுக்கும் மேலாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

மலையாளத்தில் பல முன்னணி இயக்குநர்களிடத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சிபி மலயில், பாசில், பிரியதர்ஷன், ஷாஜி கைலாஷ், ஜோஷி உள்ளிட்ட முக்கிய இயக்குநர்கள் பலரது படங்களிலும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

anandakuttan-2

‘ஹிஸ்ஹைனஸ் அப்துல்லா’, ‘மணிசித்ரதாழு’, ‘பரதம்’, ‘ஆகாசதூது’, ‘கமலாதாளம்’, ‘அனியத்திபரவு’, ‘அதர்வம்’, ‘நம்பர் 20 மெட்ராஸ் மெயில்’ உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இயக்குநர் பாசிலின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான இவர், பாசில் தமிழில் இயக்கிய அனைத்து படங்களையும் ஒளிப்பதிவு செய்த பெருமைக்குரியவர்.  

அந்த வகையில் ‘பூவே பூச்சூட வா’, ‘பூவிழி வாசலிலே’, ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’, ‘வருஷம் 16’, ‘அரங்கேற்ற வேளை’, ‘கற்பூர முல்லை’, ‘கிளிப்பேச்சு கேட்க வா’, ‘காதலுக்கு மரியாதை’, ‘கண்ணுக்குள் நிலவு’, ‘ஒரு நாள் ஒரு கனவு’ ஆகிய முக்கியமான தமிழ்த் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் அனந்தகுட்டன்.

பாசில் படங்கள் இல்லாமல் பல தமிழ்ப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 2000-ம் ஆண்டில் ‘கண்ணுக்குள் நிலவு’ படத்தில் சிறப்பாக ஒளிப்பதிவு செய்தமைக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான மாநில அரசின் விருதையும் பெற்றிருந்தார் அனந்தகுட்டன்.

சமீப காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் காலமனார். இவருக்கு கீதா என்கிற மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர்.

இவரது இறுதிச் சடங்குகள் நாளை கேரளாவில் நடைபெறுகிறது.

Our Score