தமிழகத்தில் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை சீரியல்களின் போஸ்ட் புரொடெக்சன்ஸ் பணிகளை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டி தமிழ்த் திரையுலகப் புள்ளிகள் தமிழக செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில், “தமிழகத்தில் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வரும் முன்பே, தமிழ் திரைப்பட துறை ஷூட்டிங் மற்றும் இதர போஸ்ட்-புரொடக்சன் வேலைகளை நிறுத்துவதாக அறிவித்து அதனை 16.3.2020 முதல் அமல்படுத்தியது.
தற்போது 50 நாட்களுக்கு மேலாக திரைப்பட துறை சம்பந்தப்பட்ட எந்த வேலைகளும் நடக்கவில்லை. இதனால் 50 படங்களின் வேலைகளும் தடைபட்டு, ஏறக்குறைய 500 கோடி ரூபாய் முதலீடு முற்றாக முடங்கியுள்ளது. 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் இதனால் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
சென்னை நகரம் சிவப்பு மண்டலமாக இன்னும் இருப்பதால், 50 முதல் 100 பேர் செயல்படும் ஷூட்டிங் / படப்பிடிப்பு செய்வதற்கு அனுமதி கொடுக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் படப்பிடிப்பு இல்லாத பணிகளான போஸ்ட்-புரொடக்சன் பணிகளுக்கு அனுமதி வழங்கினால், ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்து இந்தப் பணிகளுக்காக தற்போது 50 நாட்களாக காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் அவைகளை முடித்து, படங்களை தயார் செய்ய முடியும்.
தற்போது 11 தொழிற் துறைகளுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியிருப்பதை போன்று, திரைப்படத் துறையில் போஸ்ட்-புரொடக்சன் பணிகள் செய்வதற்கு, ஏற்கனவே தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தங்களிடம் கேட்டுக் கொண்டபடி, நிபந்தனைகளோடு அனுமதி வழங்குமாறு கேட்டு கொள்கிறோம்.
இதன் மூலம், அந்த பணிகளில் உள்ள தொழிலாளர்களுக்கும் வேலை கிடைக்கும். கேரளா அரசாங்கமும் இந்த பணிகளுக்கு நேற்று முதல் அனுமதி அளித்துள்ளதை தங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.
தங்களின் அனுமதியை கோரும் போஸ்ட்-புரொடக்சன் பணிகள் :
படத் தொகுப்பு (Editing) – அதிகப்பட்சம் முதல் 4 பேர் 5 பணியாற்றும் அலுவலகம்.
பின்னணி குரல் சேர்க்கை (Dubbing) – அதிகப்பட்சம் 4 முதல் 5 பேர் பணியாற்றும் அலுவலகம்.
கம்ப்யூட்டர் மற்றும் விஷுவல் கிராபிக்ஸ் (VFX/CGI) – 10 முதல் 15 பேர் பணியாற்றும் அலுவலகம்.
டி. ஐ. (DI) எனப்படும் நிற கிரேடிங் – அதிகப்பட்சம் 4 முதல் 5 பேர் பணியாற்றும் அலுவலகம்.
பின்னணி இசை (Re-Recording) – அதிகப்பட்சம் 5 பேர் பணியாற்றும் இடம்.
ஒலிக் கலவை (Sound Design/Mixing) – அதிகப்பட்சம் 4 முதல் 5 பேர் பணியாற்றும் அலுவலகம்.
மேற்கூறிய போஸ்ட்-புரொடக்சன் பணிகளை நாங்கள் சமூக இடைவெளியுடனும், முகக் கவசம் மற்றும் சானிடைஸிர் உபயோகித்தும், மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்றி சுகாதாரமான முறையில் செய்வோம் என்று தயாரிப்பாளர்களாகிய நாங்கள் உறுதி கூறுகிறோம்…”
என்று இந்த மனுவில் கூறியுள்ளனர்.
இந்த மனுவில் தமிழ்த் திரைப்படத் துறையின் முக்கியமான தயாரிப்பாளர்களான இயக்குநர் பாரதிராஜா, கலைப்புலி S.தாணு, T.G.தியாகராஜன், K.R., K.முரளிதரன், T. சிவா, K.S.ஸ்ரீனிவாசன், P.L.தேனப்பன், கதிரேசன், கமீலா நாசர், K.ராஜன், K.E.ஞானவேல் ராஜா, H.முரளி, K.விஜயகுமார், சித்ரா லக்ஷ்மணன், S.S. துரைராஜ், FEFSI சிவா, YNOT S.சஷிகாந்த், G.தனஞ்செயன், S.R.பிரபு, ராஜசேகர் பாண்டியன், P.மதன், J.S.K.சதீஷ்குமார், C.V.குமார், விஷ்ணு விஷால், சுதன் சுந்தரம், சுரேஷ் காமாட்சி, இயக்குனர் மனோபாலா, M.திருமலை, டில்லி பாபு, S. நந்தகோபால், M.மகேஷ், R.K.சுரேஷ், உதயா, வினோத் குமார், P.S.ரகுநாதன், லிப்ரா ரவீந்தரன், P.ரங்கநாதன், M.S.முருகராஜ், Dr.பிரபு திலக், K.S. சிவராமன், நிதின் சத்யா, ராதாரவி, பஞ்சு சுப்பு, இயக்குநர் மனோஜ் குமார், மதுரை செல்வம், பஞ்ச் பரத், ‘கின்னஸ் பாபு’ கணேஷ், மற்றும் P.G.முத்தையா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இன்று காலையில் இந்த மனுவுடன் தயாரிப்பாளர்கள் ஜி.தனஞ்செயன், டி.சிவா, நடிகர் மனோபாலா மற்றும் சின்னத்திரை சார்பில் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான சுஜாதா விஜயகுமார், செயலாளர் நடிகை குஷ்பூ ஆகியோர் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து மனு அளித்தனர்.