full screen background image

திரையரங்குகள் அமேஸான் குடோனாக மாறினால் திரையுலகத்தின் நிலைமை என்ன..?

திரையரங்குகள் அமேஸான் குடோனாக மாறினால் திரையுலகத்தின் நிலைமை என்ன..?

தற்போது தமிழகத்தில் திறந்திருக்கும் சினிமா தியேட்டர்களிலும் ஷோவுக்கு 10 அல்லது 11 பேர் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்காகவே ஒரு ஷோவை வேண்டா வெறுப்பாக ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.

ஆனால், இது எதுவுமே தெரியாததுபோல படத்துக்குப் படம் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போகிறார்கள் நடிகர், நடிகைகள்.

இன்னொரு பக்கம் வி.பி.எஃப். கட்டணப் பிரச்சினையினால் மார்ச் 31-வரையிலும் மட்டும்தான் நாங்கள் குறைந்தப்பட்ச பணத்தைக் கட்டுவோம் என்று தயாரிப்பாளர்கள் சங்கங்களும் கியூப் நிறுவனத்திற்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் முன்னெச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்திருக்கின்றன. ஏப்ரல் முதல் தேதி முதல் நிலைமை என்னாகும் என்று யாருக்குமே தெரியவில்லை.

இந்த நிலையில் காத்தாடிக் கொண்டிருக்கும் தனித் தனி தியேட்டர்களை அமேஸான் நிறுவனம் வளைக்கப் பார்க்கிறது.

உலகம் முழுவதும் பார்சலில் பொருட்களை அனுப்பி பிஸினஸ் செய்து வரும் அமேஸான் நிறுவனம், தனது பொருட்களை வைப்பதற்கு இந்தியா முழுவதிலும் இருக்கும் முக்கிய நகரங்களில் வசதியான பெரிய குடோன்களை வாடகைக்கு எடுத்து வருகிறது.

பல நகரங்களில் அது நகரங்களுக்கு நடுவில் கிடைக்கவில்லை. ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஏதோ ஒன்று, இரண்டு இடங்களில் மட்டுமே கிடைக்கிறது. இதனால் ஓடாமல் இருக்கும் தியேட்டர்களை வாடகைக்கு எடுத்தால் என்ன என்று அமேஸான் நிறுவனம் யோசித்திருக்கிறது.

இப்போது பல ஊர்களில் இப்படியிருக்கும் தனி தியேட்டர்களை வாடகைக்கோ, அல்லது குத்தகைக்கோ எடுத்து அதை அமேஸான் குடோனாக பயன்படுத்த தியேட்டர் உரிமையாளர்களிடத்தில் அந்த நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் திரையுலகத்தினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “அமேஸான் நிறுவனம் தனித்தனியாக இருக்கும் திரையரங்குகளை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு அதனை தங்களது பொருட்கள் வைக்கும் குடோனாக மாற்றலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பெரிய படம் திரையிட்டால் கிடைக்கும் லாபத்தைப் போல இரண்டு மடங்கு வாடகையை அமேஸான் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறது. இப்படி மாறினால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு கண்டிப்பாக லாபம் கிடைக்கும். ஆனால், சினிமாக்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காதே..

கார்பரேட் கம்பெனிகளின் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் மட்டுமே இருக்கும். அப்போதும் தயாரிப்பாளர் இதே வி.பி.எஃப். கட்டணத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

திரையரங்குகளின் உரிமையாளர்களுடன் இது குறித்து கலந்து பேசினால் மட்டுமே இதற்குத் தீர்வு கிடைக்கும். இல்லையென்றால் தாங்கள் எடுத்தத் திரைப்படங்களை திரையிடுவதற்கு போதுமான தியேட்டர்கள் அவர்களுக்குக் கிடைக்காது. கார்பரேட் நிறுவனங்களின் மால் தியேட்டர்களை மட்டுமே நம்பினால் திரைத்துறையின் தலையெழுத்து வேறு நபர்களின் கைக்கு போய்விடும்.

இது திரைப்பட தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்களின் பிரச்சினைகள் மட்டுமல்ல.. ஹீரோக்களும் சிக்கல்தான். ஏனென்றால் தியேட்டர் என்னும் வெகுஜனங்களை ஈர்க்கும் கட்டமைப்பு இருந்தால்தான் அவர்களுக்கும் புகழ் கிடைக்கும்.

இல்லையென்றால் அந்த ஸ்டார்.. இந்த ஸ்டார் என்ற பட்டமெல்லாம் அவர்கள் போட்டுக் கொள்ள முடியாது. ஓடிடியில் படங்கள் அதிகமாக வெளியாகத் துவங்கிவிட்டால் ஹீரோ, ஹீரோயின்களெல்லாம் பெரிய நட்சத்திர அந்தஸ்தோடு வாழவே முடியாது. மாதச் சம்பளம் வாங்கும் சாதாரண குடிமகனாக இருக்க வேண்டியதுதான்.

ஹீரோக்களும், ஹீரோயின்களும் வானத்திலிருந்து குதித்தவர்கள் இல்லை என்னும் நிலை உருவாவது நல்லதுதான். ஆனால், அது தியேட்டர் மற்றும் சினிமா தொழிலை அழித்துதான் உருவாக வேண்டும் என்ற நிலை வரக் கூடாது. இதை நான் ஒரு தியேட்டர் உரிமையாளராகச் சொல்லவில்லை. சாதாரண சினிமா ரசிகனாகவே சொல்கிறேன். இதைத் திரைப்பட தயாரிப்பாளர்களும், நடிகர், நடிகைகளும் புரிந்து கொள்ள வேண்டும்..” என்கிறார் திருப்பூர் சுப்ரமணியம்.

திரையுலகம் விழித்துக் கொள்வது நல்லது..!

Our Score