தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இருந்து வரும் நிர்வாகிகளின் பணிக்காலம் முடிவடைவதால் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற இந்தச் சங்கத்தின் 101-வது பொதுக் குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி 1 தலைவர், 2 துணைத் தலைவர்கள், 1 பொதுச் செயலாளர், 4 இணைச் செயலாளர்கள், 1 பொருளாளர், 12 செயற்குழு உறுப்பினர்கள் என்ற நிர்வாகக் கமிட்டிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்குப் போட்டியிடுபவர்கள் வைப்புத் தொகையாக 3,000 ரூபாயும், நன்கொடையாக 10,000 ரூபாயும் தர வேண்டும்.
துணைத் தலைவர், இணைச் செயலாளர்கள் பதவிக்குப் போட்டியிடுபவர்கள் வைப்புத் தொகையாக 2,000 ரூபாயையும், நன்கொடையாக 3,000 ரூபாயையும் சங்கத்திற்கு அளிக்க வேண்டும்.
செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்குப் போட்டியிடுபவர்கள் வைப்பத் தொகையாக 2,000 ரூபாயையும், நன்கொடையாக 2,000 ரூபாயையும் அளிக்க வேண்டும்.
தேர்தல் முடிவில் பதிவான மொத்த வாக்குகளில் 3-ல் 1 பங்கையாவது பெறும் உறுப்பினர்களுக்கு மட்டுமே வைப்புத் தொகைத் திருப்பித் தரப்படும்.
இந்தத் தேர்தலுக்கான விண்ணப்பங்கள் வரும் ஜனவரி 5, 6 ஆகிய தேதிகளில் சங்க அலுவலகத்தில் தரப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜனவரி 7, 8, 9 ஆகிய மூன்று தினங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள்ளாக சமர்ப்பிக்கப்பட்டாக வேண்டும்.
விண்ணப்பங்கள் பரிசீலனை – ஜனவரி 10.
விண்ணப்பங்களை திரும்பப் பெற கடைசி தேதி – ஜனவரி 11.
இறுதி வேட்பாளர் பட்டியல் ஜனவரி 12-ம் தேதியன்று வெளியிடப்படும்.
தேர்தல் வரும் ஜனவரி 23 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையிலும் வடபழனியில் உள்ள இசைக் கலைஞர்கள் சங்கத்தில் நடைபெறும்.









