“தணிக்கைத் துறையின் சான்றிதழ் அடிப்படையில் இல்லாமல் சிறந்த சினிமா படங்களுக்கு தமிழக அரசு வரிச்சலுகை தர வேண்டும்…” என்று சினிமா துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழக செய்தித் தொடர்பு துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வணிகவரித்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் தமிழக முதல்வரின் தனிச் செயலாளர் ஆகியோரை தமிழ் திரைப்பட இயக்குநர்கள் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, ரமேஷ்கண்ணா, ஜிகர்தண்டா படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் ஆகியோர் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் இது பற்றி சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் எடுத்துக் கூறினார்கள். “யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்ட சினிமாக்களுக்கும் மத்திய அரசு விருது மற்றும் சான்றிதழ்களை வழங்குகிறது. ஆனால் தமிழகத்தில் அந்த நிலை இல்லை. தணிக்கைச் சான்றிதழில் ‘யு/ஏ’ என்றிருந்தால் அந்தப் படங்களுக்கு வரிச்சலுகை வழங்குவதில்லை.
‘யு/ஏ’ சான்றிதழ் தரப்பட்ட சினிமா நல்ல திரைப்படமாக இருந்தால், அவற்றுக்கும் வரிச்சலுகை அளிக்க வேண்டும். உதாரணமாக ‘ஜிகர்தண்டா’ திரைப்படம் ரவுடிகளைப் பற்றிய படமாக இருந்தாலும், அது சமுதாயத்துக்கு நல்ல தகவலைத் தருவதாக உள்ளது.
எனவே தணிக்கைச் சான்றிதழலில் கூறப்படும் யு/ஏ பிரிவின் அடிப்படையில் இல்லாமல் சிறந்த திரைப்படம் என்று கருதப்படும் படங்களுக்கும் வரிச்சலுகை வழங்க வேண்டும்..” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.









