full screen background image

ச்சூ மந்திரக்காளி – சினிமா விமர்சனம்

ச்சூ மந்திரக்காளி – சினிமா விமர்சனம்

அன்னம் மிடியாஸ் சார்பாக தயாரிப்பாளர் அன்னக்கிளி வேலு இப்படத்தை தயாரித்துள்ளார்.

புதுமுகமான கார்த்திகேயன் வேலு கதாநாயகனாக நடிக்க சஞ்சனா புர்லி கதாநாயகியாக நடித்துள்ளார். உடன் கிஷோர் தேவ், முகில், கோவிந்த் மாயோன், V.்ரீதர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – ஈஸ்வர் கொற்றவை, ஒளிப்பதிவு – முகமது பர்ஹான், பாடல்கள் இசை – சதிஷ் ரகுநாதன், பின்னணி இசை – நவிப் முருகன், கலை இயக்கம் – J.K.ஆண்டனி, படத் தொகுப்பு – கோகுல், நடன இயக்கம் – தீனா, சண்டை இயக்கம் – டேஞ்சர் மணி, மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM).

படத்தின் தலைப்பைப் பார்த்தவுடனேயே இது ஒரு மந்திர, தந்திரக் கதை என்று புரிந்திருக்கும். ஆனால் அதனை நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.

சேலம் அருகேயிருக்கும் பங்காளியூர்’ என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் அனைவருமே பங்காளிகள்தான். ஆனால் பொறாமைப் பிடித்தவர்கள். ஒருவருக்கொருவர் பில்லி சூனியம் வைத்து அடுத்தவர்களின் வாழ்க்கையைக் கெடுப்பதுதான் இவர்களது வேலை.

ஒருவருடைய வீடு பற்றி எரியும்போது, அதை அணைக்க முயல்வது போல் நடிக்கிறார்களே தவிர யாருக்கும் அதை அணைக்க உதவி செய்ய மாட்டார்கள். கடைசியில் அந்த வீடு எரிந்து சாம்பலாகிப் போனதைப் பார்த்து திருப்தி அடைவார்கள். இப்படியொரு கேடு கெட்ட மக்கள் வாழும் ஊர் இது.

அந்த ஊரிலேயே வசிக்கும் கதாநாயகன் இந்த மக்களைத் திருத்துவதற்காக அவர்கள் பாணியிலேயே பில்லி-சூனியம் வைத்துத் திருத்தலாம் என்று நினைக்கிறார்.

இதற்காக பில்லி சூனியம் வைப்பதை மட்டுமே தொழிலாக கொண்ட கொல்லிமலையில் உள்ள சிங்கப்பூர்’ என்ற கிராமத்தைப் பற்றிக் கேள்விப்படுகிறார்.

அந்த ஊர் இதைவிட மோசமாக இருக்கிறது. அந்த ஊரில் அனைவருமே மந்திரம், தந்திரம் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். ஒரு காதல் ஜோடியின் சாபத்தால் அந்த ஊரில் யாருக்குமே பிள்ளைகள் இல்லை என்பதுதான் அந்த ஊர் மக்களுக்கு இப்போது இருக்கும் ஒரேயொரு கவலை. அந்த சாபம் தீர வேண்டுமானால் ஒரு காதல் ஜோடிகளை அவர்கள் சேர்த்து வைக்க வேண்டுமாம்.

இதைக் கேள்விப்படும் ஹீரோ தன் அத்தை மகனுக்கு பெண் வேடம் போட்டு தங்களை காதலர்களாக அறிமுகப்படுத்திக் கொண்டு அந்த ஊரில் அடைக்கலம் ஆகிறார். அங்கே அவர்களுடன் பழகிப் பார்த்து யாராவது ஒரு மந்திரவாதியையாவது தனது ஊருக்கு அழைத்துப் போக நினைக்கிறான் ஹீரோ. ஆனால், ஒருவரும் ஊரைவிட்டு வெளியில் வர மறுக்கிறார்கள்.

இதற்கிடையில் அந்த ஊரில் மிகவும் சக்தி வாய்ந்த அழகுப் பதுமையாக இருக்கும் கதாநாயகியை பார்த்ததும் அவனுக்குள் காதல் துளிர்விட, அவளை காதலித்து தனது கிராமத்திற்கு அழைத்து சென்றால் தனது பங்காளிகளை திருத்தலாம் என்றும் திட்டம் தீட்டுகிறார்.

ஆனால் பங்காளியூர் மக்கள் கதாநாயகன் மீது கொண்ட பொறாமையால் அவர்களது காதலுக்கு பல தடைகளை ஏற்படுத்துகிறார்கள்.

இறுதியில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்ததா..? பங்காளியூர் திருந்தியதா..? என்பதை சொல்லும் படமே இந்த ‘சூ மந்திரகாளி’ திரைப்படம்.

நாயகனான கார்த்திகேயன் வேலு கிராமத்து இளைஞன் கதாபாத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். தனது ஊர்க்காரர்களை திருத்த முயல்வதும், அது முடியாமல் போய் தனது குடும்பத்தினர் மீது கோபம் கொள்வதுமாக தனது இயல்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

மேலும் சிங்கப்பூர்’ கிராமத்திற்கு வந்த பிறகு மொத்தப் படத்தையும் அவரும், அவரது நண்பரும்தான் ஏற்றிருக்கிறார்கள். அதிலும் அந்தப் பெண் வேடமிட்ட நண்பர் அசத்தியிருக்கிறார். அவரது தோற்றம் அவரை பெண்ணாகவே நம்ப வைக்கிறது. அந்தக் கோலத்திலும் அவர் காட்டும் நடிப்பும், தவிப்பும் கொஞ்சமேனும் புன்னகைக்க வைத்திருக்கிறது.

நாயகன் முருகன் அவதாரம் என்று ஒரு மென்டல் பூசாரி சொல்ல… அதை வைத்து ஊரே அவரை முருகனாகப் பார்ப்பது காமெடி திரைக்கதைதான். ஆனால் சிரிப்புதான் வரவில்லை. அவர் மீது நாயகிக்குக் காதல் அரும்புவது நல்ல நகைச்சுவைதான். தாயத்து ஒட்டப்பட்டவுடன் நாயகன் வீரனாக மாற, அதை முருகனின் அவதார லீலையாகவே நாயகி நினைப்பது அந்த இடத்தில் ரசிக்க வைத்திருக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் சஞ்சனா புர்லி அழகாக இருக்கிறார். சிறப்பாக வசனங்களை டெலிவரி செய்திருக்கிறார். நடிக்கவும் செய்திருக்கிறார். இன்னும் அடுத்தடுத்த படங்களில் பார்க்கலாம்..

ஊருக்குள் பானை திருட வந்து அங்கேயே மாட்டிக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும் அந்தத் திருடன் கேரக்டரும் நகைக்க வைத்திருக்கிறது.

எல்லா மந்திர, தந்திரங்களும் தெரிந்த சிங்கப்பூர் மக்களுக்கு பெண்ணாக வேடமிட்ட ஆணைக் கண்டறிய முடியவில்லை என்பதுதான் மிகப் பெரிய லாஜிக் ஓட்டை.

ஒளிப்பதிவு, இசை என்று அனைத்திலும் இரண்டாம் நிலையில்தான் இந்தப் படம் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம்.

தாயத்து கட்டிவிடுவது.. ஊரைவிட்டு ஓடிப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஊர்க்காரர்கள் சொல்ல கிடைத்த கேப்பில் நாயகன் தப்பித்து ஓடுவது.. நாயகியின் அப்பாவை நாயகன் தினமும் சந்தித்துப் பேசுவது.. சில, பல மந்திர தந்திர வார்த்தைகளை அசால்ட்டாக அனைத்து கேரக்டர்களும் பயன்படுத்தியிருப்பது என்று சில இடங்களில் இந்தப் படம் பாராட்டவும் வைக்கிறது.

கலை இயக்குநருக்கு ஒரு ஜே போட வேண்டும். அந்த சிற்றூரில் முடிந்த அளவுக்கு கலர் கரெக்சன் செய்து.. மந்திர, தந்திரங்களுக்கேற்றவாறு வீடுகளை பெயிண்ட் செய்து.. செட்டப் செய்து.. பலவித மந்திரப் பொருட்களை பரப்பி.. நிச்சயமாக இது மிகப் பெரிய வேலைதான். இதைச் செய்திருக்கும் கலை இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.

ஆனால் இதிலென்ன ஒரு சோகமென்றால்… நகைச்சுவை படம் என்று சொல்லிவிட்டு கடைசிவரையிலும் சிரிக்கவே வைக்கவில்லை என்பதுதான் இந்தப் படம் செய்திருக்கும் கொடுமை.

தியேட்டருக்கு போனால் கொஞ்சமாக சிரித்துவிட்டு, அதே சமயம் போரடிக்காமலும் பார்த்துவிட்டு வரலாம்..!

RATING – 3 / 5

 
Our Score