full screen background image

ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் – சினிமா விமர்சனம்

ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை 2-டி எண்டர்டைன்மண்ட் சார்பில் நடிகர் சூர்யாவும், அவரது மனைவியான நடிகை ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் மிதுன் மாணிக்கம், ரம்யா பாண்டியன், வாணி போஜன், வடிவேல் முருகன், லட்சுமி, மனோஜ் தாஸ், செல்வேந்திரன், பருதி, சதீஷ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – அரிசில் மூர்த்தி, ஒளிப்பதிவு-சுகுமார்.எம், இசை – கிரிஷ், பாடல்கள் விவேக், யுகபாரதி, மதங்குமார், படத் தொகுப்பு – சிவ சரவணன், கலை இயக்கம் – முஜிபுர் ரகுமான், நடன இயக்கம் – சிவாஜி, சண்டை இயக்கம் – ராக் பிரபு, நிர்வாக தயாரிப்பு – செந்தில்குமார், மக்கள் தொடர்பு-யுவராஜ்.

2-D Entertainment நிறுவனம் அமேஸான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்துடன் ஏற்கெனவே செய்து கொண்டுள்ள ஒப்பந்தப்படி இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

மழை பொய்த்துப் போன பூச்சேரி கிராமத்தில் வசிக்கும் குன்னிமுத்து என்ற மிதுன் மாணிக்கம்) வீராயியை என்ற ரம்யா பாண்டியனைத் திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு ‘வெள்ளையன்’, ‘கருப்பன்’ என்ற இரட்டை காளை மாடுகள் சீதனமாக கிடைக்கிறது.

இவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆனாலும், குழந்தைகூட பெற்றுக் கொள்ளாது தாங்கள் வளர்க்கும் காளை மாடுகளையே, தங்களது பிள்ளைகளைப் போல பாவித்து வளர்க்கின்றனர்.

மாடு பெயரில் லோன் வாங்கினால் அவைகளின் காதுகளில் ஓட்டை போடுவார்கள் என்பதால் லோன்கூட வாங்காமல் இருக்கிறார்கள். அவைகளை மாடுகள்’ என்று மற்றவர்கள் சொன்னால்கூட இவர்கள் கோபப்படுவதுண்டு. “பெயர் எதுக்கு வைச்சிருக்கோம்..? பெயர் சொல்லித்தான் கூப்பிட வேண்டும்” என்பார்கள்.

அப்பேர்ப்பட்ட பாசக்கார அந்த இரட்டை காளை மாடுகள் ஒரு நாள் திடீரென்று காணாமல் போகின்றன. அவற்றை தேடி அலையும் குன்னிமுத்து இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்.

அங்கே அவரின் புகாரை ஏற்க மறுத்து அவமானப்படுத்தப்படுகிறார்கள் காவலர்கள். ஆனால் எம்.எல்.ஏ. வீட்டு நாய் குட்டி காணாமல் போனதால் எம்.எல்.ஏ.வின் மனைவி உறக்கம் இல்லாமல் தவிக்கிறார் என்று சொல்லி காவல் துறையினர் அலைந்து, திரிந்து அந்த நாய்களைத் தேடுகின்றனர்.

இந்த நிலையில் குன்னிமுத்துவின் இந்த மாடு தேடும் படலம் தொலைக்காட்சி நிருபரான நர்மதா பெரியசாமி என்னும் வாணி போஜன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகிறது.

இதனால், அவரின் வீட்டிற்கு ஊடகங்கள் படையெடுக்கத் துவங்க, மத்திய, மாநில அரசியல்வாதிகள், எதிர்க்கட்சிகள், விவசாய சங்கங்கள் என்று பல தரப்பினரும் அவரை காண வந்து விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள்.

ஆனால் யாராலும் தன் மாடுகளை கண்டு பிடிக்க முடியாததால் தவிக்கிறார் குன்னிமுத்து. இவரின் காளை மாடுகள் யாரால் திருடிச் செல்லப்பட்டது…? இதற்கு என்ன காரணம்..? குன்னிமுத்து காளை மாடுகளை கண்டுபிடித்தாரா..? என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான கதை.

மிதுன் மாணிக்கம் அச்சு அசலாக கிராமத்து அப்பாவி இளைஞராக, ஒவ்வொரு காட்சியிலும் வெள்ளேந்தி மனசோடு பேசும் வசனங்கள், காளை மாடுகளின் மேல் இவர் வைத்திருக்கும் பாசம், மாடுகளைத் தேடியலையும் அந்த வேட்கை என்று அனைத்திலும் ஒரு கிராமத்தானுக்கே உரித்தான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

ரம்யா பாண்டியன் வீராயி’யாக குன்னி முத்துவின் மனைவியாகவும், கணவனின் பரிதவிப்பை உணர்ந்து ஆறுதல் சொல்வதும், மாடுகளை நினைத்து கண்ணீர் விடுவதும், அரசியல்வாதிகளை கண்டு பொங்குவதும், கிராமத்து மங்கையாக நச்சென்று சில இடங்களில் கேள்வி கேட்பதுமாக தனது எளிய நடிப்பை காண்பித்திருக்கிறார்.

மிதுன் மாணிக்கத்தின் நண்பனாக வரும் வடிவேல் முருகனின் அரசியல் நையாண்டிகள் கை தட்ட வைக்கின்றன. செம. இவர் அடிக்கும் டைமிங் காமெடிகளும் சூப்பர். “ஹிந்தி தெரியாது போடா” என்பது முதல் அரசியல் நையாண்டிகள்வரையிலும் நம்மைக் கவர்ந்திழுக்கிறார்.

இவர்களுடன் பயணிக்கும் நகரத்து நிருபராக வாணி போஜன் படத்தில் முக்கிய பங்களிப்போடு அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்து கிராமத்திற்கு நன்மை செய்தும் துணிச்சலான  கதாபாத்திரத்தை ஏற்று அதிலும் கச்சிதமாக நடித்திருக்கிறார்.

அவர் கதைக்குள் வந்ததும்தான் படமே சூடு பிடிக்கிறது. ஒரு கிராமத்தில் மாடு காணாமல் போகும் சராசரி நிகழ்வுக்குள் அரசியல் குறுக்கீடுகள் இருப்பதை பார்த்துவிட்டு அதை தனது பத்திரிகையாளர் என்ற உரிமையைப் பயன்படுத்தி மாநிலம் தழுவிய பிரச்சினையாக மாற்றி மீடியா பவரைக் காண்பிக்கும்போது சபாஷ் போட வைத்திருக்கிறார்.

அதே சமயம் இன்றைய மீடியா முதலாளிகள் பலரும் கார்ப்பரேட் கைக்கூலிகளாக மாறிப் போய், வெறும் பரபரப்புக்காக மட்டுமே மீடியா பவரைப் பயன்படுத்துவதையும் இன்னொரு பக்கம் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

அதுபோல் தான் வேலை பார்க்கும் நியூஸ் சேனலில் தனது உரிமை பறிக்கப்படும்போது வாணி எடுக்கும் முடிவு சபாஷ் போட வைக்கிறது. கூடவே அவரது பாட்டி கேரக்டருக்கும் ஒரு ஜே‘ போடுவோம்.

மற்றும் படத்தில் நடித்திருக்கும் மற்றைய கதாபாத்திரங்களும் அவரவர் கேரக்டருக்கேற்ற கிராமத்து வெள்ளந்தி நடிப்பை அப்படியே காட்டியிருக்கிறார்கள். தனி ஒருவனாக குளத்தைத் தூர் வாரும் முதியவரும் ஒரு பக்கம் நம்மை நெகிழ வைக்கிறார்.

இசையமைப்பாளர் கிரிஷ் பாடலாசிரியர்கள் விவேக், யுகபாரதி, மதங்குமார் ஆகியோரின் பாடல்களை மனதிற்கு இனிய அர்த்தம் பொதிந்த வரிகளோடு கிராமத்து வாசனையோடு கொடுத்திருக்கிறார்.

கிராமத்து எழிலை, எளிய கிராமத்து வாழ்க்கையை அளவோடு, நகரத்தின் கலவையோடு ஆனால் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார்.

சிவ சரவணனின் படத் தொகுப்பும், முஜிபுர் ரகுமானின் கலை இயக்கமும் படத்திற்கு பெரும் பலமாக உள்ளது.

தன் முதல் படத்திலேயே இயக்குநர் அரிசில் மூர்த்தி தன் அச்சு முத்திரையை சினிமாவில் பதித்துவிட்டார்.

ஏனாதி போலீஸ் நிலையத்தில் தொடங்கும் காட்சி முதல் மலை ரோட்டில் முடியும் இறுதிக் காட்சிவரையிலும் படத்தின் திரைக்கதையை ஏற்ற இறக்கமில்லாமல் கொடுத்து அதில் ஊடகத்தின் பங்களிப்பு, புகழுக்காக அரசியல்வாதிகள் செய்யும் கபட நாடகம், அரசியல் பின்னணியில் நடைபெறும் களவாணித்தனம், நிதி ஒதிக்கீட்டில் உள்ள சீர்கேடுகள், வெளி வேஷம் போட்டு ஏமாற்றித் திரியும் அரசியல்வாதி, அவரின் சதியால் மாடுகளை தொலைத்து விட்டு அல்லாடும் ஏழை கிராமத்து இளைஞன் என்று யதார்த்தமாக கதையை நகர்த்தியிருக்கிறார்.

என்ன… காளைக்கும் குடும்பத்தினருக்கும் உள்ள பாசத்தை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக காட்டியிருந்தால் காளை காணாமல் போனாபோது நாமும் அழுதிருப்போம்.

மாடுகள் மீதான மிதுனின் பாசத்தைக் காட்ட அடுத்தடுத்து வரும் காட்சிகள் ஒரே மாதிரியாக இருப்பது சற்று போரடிக்கிறது. மாடுகளின் காதுகளில் அடையாள வில்லை அடிப்பதையே பொறுத்துக் கொள்ள முடியாத மிதுன், மாடுகளுக்கு காயடிப்பதை மட்டும் எப்படி ஏற்றுக் கொள்கிறார் என்பது கொஞ்சம் முரணான விஷயம்.

யார் நம்மை ஆண்டாலும் நம்முடைய குறைகளை தீர்க்க நாமே தான் முயற்சி செய்து கொள்ள வேண்டும். யாரும் நமக்கு உதவப் போவதில்லை என்பதை இறுதியில் ஆணித்தரமாக சொல்லியிப்பதால்தான் இந்தப் படத்திற்கு ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இதனை கிராமத்து பின்னணியில் அரசியல் கலந்து நக்கல் நய்யாண்டியுடன் கொடுத்திருக்கும்விதமே இதன் வெற்றிக்கு வழி வகுக்கும். அடுத்த வருடம் பல விருதுகளை இத்திரைப்படம் அள்ளிச் செல்ல காத்திருக்கிறது என்பதுதான் உண்மை.

கிராமத்து மக்களின் அப்பாவித்தனத்தை பயன்படுத்தும் அரசியல்வாதிகளின் மறு பக்கத்தை வெளிப்படுத்தி மக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சியை இந்தப் படம் கொடுத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

RATING : 4 /5

Our Score