சின்னத்திரை, சினிமா படப்பிடிப்புகள் ரத்து..!

சின்னத்திரை, சினிமா படப்பிடிப்புகள் ரத்து..!

ஊரே ஊரடங்கில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும்போது சின்னத்திரை மற்றும் சினிமா படப்பிடிப்புகள் மட்டும் நடந்து கொண்டிருந்தது விந்தையாக இருக்கிறது.

நேற்றைக்குக் காலமான குட்டி ரமேஷ் என்னும் நடிகர்கூட இது போன்ற படப்பிடிப்பினால்தான் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி தன் உயிரை இழந்திருக்கிறார்.

முதல் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தபோதே சின்னத்திரை, பெரிய திரை இரண்டுக்கும் சேர்த்தே லாக் டவுன் சொல்லியிருக்கலாம். ஆனால், தொலைக்காட்சித் தொடர்கள் பாதிக்கப்படும் என்று சேனல்காரர்கள் விரும்பியதால் அது பற்றி எதையும் சொல்லாமல் அப்படியே விட்டுவிட்டார்கள்.

இந்த லாக் டவுனின் ஆரம்ப நாளில் இருந்தே அனைத்து தொலைக்காட்சிகளின் சீரியல்களின் படப்பிடிப்பும் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.

நேற்றைக்கு குட்டி ரமேஷ் என்ற நடிகர் இறந்தவுடனேயே சின்னத்திரை வட்டாரத்தில் கடும் புகைச்சல். “நமது சக நடிகர் ஒருவரை கொரோனாவுக்கு பலி கொடுத்துவிட்டோம். இதற்கும் படப்பிடிப்புகள்தான் காரணம். அது நடக்காமல் இருந்திருந்தால் அவரது குடும்பத்தினர் அவரை இழந்திருக்க மாட்டார்களே..?” என்று பல நடிகர், நடிகைகள் வாட்ஸ்அப்பில் கண்டனக் குரல்களை எழுப்பி வந்தார்கள்.

சின்னத்திரை படப்பிடிப்பிலாவது 50 பேருக்குள்தான் இருப்பார்கள். ஆனால், சினிமா படப்பிடிப்புகளில் 150 பேர்கள் இருக்கிறார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது.. யாராவது ஒருவருக்கு வந்தாலே போதுமே.. அனைவரையும் ஒரு ரவுண்டு கட்டிவிடும். அதனால் இந்த இரண்டு படப்பிடிப்புகளையும் ரத்து செய்ய வேணடும் என்பது பலரது கோரிக்கையாக இருந்து வந்தது.

ஆனால், பெப்ஸியின் தலைவரான இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, செய்தித் துறை அமைச்சரிடமே போய் உட்கார்ந்து “சின்னத்திரைக்கு 50, பெரிய திரைக்கு 150 பேர்வரைக்கும் ஷூட்டிங் நடத்த பெர்மிஷன் வேணும் ஸார்…” என்று கேட்டிருந்தார். இதேபோல் தயாரிப்பாளர்கள் சங்கமும் கேட்டார்கள்.

ஆனால், இந்த 4 நாட்களில் நிலைமை மிகவும் மோசமானதை அடுத்து லாக் டவுனுக்குள் அனைத்துத் துறையினரும் வந்தாக வேண்டும் என்கிற அரசின் விருப்பம் திரைத்துறையினருக்கு எடுத்துக் கூறப்பட்டது.

இதையடுத்து இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்த பெப்ஸி அமைப்பின் தலைவரான ஆர்.கே.செல்வமணி, “முதலமைச்சரிடம் தாங்கள் கொடுத்த கோரிக்கை மனுவை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம். நாளை முதல் சின்னத்திரை, சினிமா படப்பிடிப்புகளில் பெப்ஸி தொழிலாளர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள்.

கொரோனோ நிவாரண நிதி உதவியாக கூடுதலாக திரைப்பட தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் வழங்க வேண்டும். திரைப்பட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தனி முகாம் ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளோம். இந்த மாத இறுதி வரையிலும் படப்பிடிப்பில் ஈடுபட மாட்டோம். அதேபோல் Post Productions வேலைகளிலும் ஈடுபட மாட்டோம்..” என்று தெரிவித்தார்.

இதேபோல் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளரான ராதாகிருஷ்ணனும் “அனைத்துப் படப்பிடிப்புகளையும் அரசின் மறு உத்தரவு வரும்வரையிலும் நிறுத்துவதாக…” அறிவித்துள்ளார்.

 
Our Score