நான் சிகப்பு மனிதனுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..!

நான் சிகப்பு மனிதனுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..!

எப்பவும் கடைசி நேரத்துல கழுத்தை அறுக்குற மாதிரி சினிமா படங்களுக்கு தடை கேட்டு கோர்ட்டுக்கு போற பழக்கம் என்னிக்கு நிக்குமோ தெரியலை.. நிறைய பெரிய பட்ஜெட் படங்கள் கோர்ட், கேஸ்களுக்கு உள்ளாகின்றன..

‘நான் சிகப்பு மனிதன்’ படத்தை யு டிவியுடன் இணைந்து தயாரித்திருக்கிறார் படத்தின் ஹீரோவான விஷால். இதே டைட்டிலில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படம் 1985-ம் ஆண்டு வெளிவந்தது. அதன் ஒரிஜினல் தயாரிப்பாளர் பூர்ணசந்திரராவ்.

பூர்ணசந்திரராவ் இந்த ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் நெகட்டிவ் உரிமைகளை சேலத்தைச் சேர்ந்த ஜோதிமுருகன் பிலிம்ஸிற்கு விற்றுவிட்டார். ஜோதிமுருகன் பிலிம்ஸ் இதனை சென்னையைச் சேர்ந்த நாகப்பன் என்பவரிடம் விற்றுவிட்டது.

இ்பபோது இந்த நாகப்பன்தான் உயர்நீதிமன்றப் படியேறியிருக்கிறார். “முந்தைய படத்தின் நெகடிவ் ரைட்ஸ் தன்னிடம் இருப்பதால் முறைப்படி தன்னிடம் படத்தின் டைட்டிலுக்கு அனுமதி கேட்டிருக்க வேண்டும். ஆனால் இவர்கள் கேட்கவில்லை. இதனால் எனக்குத் தகுந்த நஷ்டஈட்டைத் தந்துவிட்டுத்தான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும். அதுவரையில் படத்தை வெளியிட தடை விதியுங்கள்” என்று கோர்ட்டில் வாதாடினார்.

கூடவே தான் இந்தப் படத்தின் டைட்டிலை சட்டப்படி எனக்கு சொந்தமானதாக அறிவிக்கக் கோரி டெல்லியில் இருக்கும் காப்பிரைட்ஸ் ரிஜிஸ்தரர் அலுவலகத்தில் மனு அளித்திருப்பதாகவும் கோர்ட்டில் கூறியிருந்தார்.

ஆனால் எதிர்த் தரப்பில் வாதாடிய யு டிவி, நாகப்பன் இந்த டைட்டிலை தயாரிப்பாளர் கவுன்சிலில் மறு பதிவு செய்யவில்லை. ஆகவே சினிமா அகராதிப்படி இந்த டைட்டிலுக்கு அவர் சொந்தம் கொண்டாட முடியாது. மேலும், டெல்லியில் இருக்கும் காப்பிரைட்ஸ் ரிஜிஸ்தரர் ஆபிஸிலும் அவருக்கு இன்னமும் அனுமதி கிடைக்கவில்லை என்று வாதிட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்வாணன், நெகடிவ் ரைட்ஸ் வைத்திருப்பதால் தார்மீக ரீதியாக நாகப்பனுக்கு இந்த டைட்டில் மீது உரிமையுண்டு என்றாலும், சட்டப்படி அது இப்போது இல்லை. இதனால் ‘நான் சிகப்பு மனிதன்’ வெளியாக தடையில்லை… என்று சொல்லி வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்துவிட்டார்..

உஷ்.. அப்பாடா.. ஒரேயொரு முத்தக் காட்சியால சென்சார் போர்டுல தகராறு.. ரீ சென்சார் செஞ்சும் சர்டிபிகேட் வாங்குறதுல தகராறு.. வந்த எதிர்ப்புகளுக்கெல்லாம் பதில் சொல்லிக் களைச்சுப் போயாச்சு.. 20 சதவிகித வரிவிலக்கு இல்லாமலேயே படம் ரிலீஸாகப் போகுதுன்ற கவலை.. இத்தனையும் தாண்டி இந்தப் பஞ்சாயத்து வேற..!?

தயாரிப்பாளர்களெல்லாம் நிச்சயமா பாவப்பட்ட ஜீவனுகதான்..!

Our Score