full screen background image

இயக்குநர் ஷங்கருக்குத் தடை விதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

இயக்குநர் ஷங்கருக்குத் தடை விதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் ‘இந்தியன்-2’ திரைப்படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார்.

இந்த நேரத்தில் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம்’ என்ற பெயரில் கட்சி துவங்கி சட்டப் பேரவைத் தேர்தலில் நிற்பதால் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாகிவிட்டார். இதனால் ‘இந்தியன்-2’ திரைப்படம் தற்போது கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

இந்த இடைப்பட்ட நேரத்தில் இயக்குநர் ஷங்கரும் தெலுங்கில் ஒரு திரைப்படத்தை இயக்குவதற்காக சென்றுவிட்டார். மேலும், ஒரு ஹிந்திப் படத்தையும் அவர் இயக்கப் போவதாகத் தகவல் வந்துள்ளது.

இந்த நிலையில் இந்தியன்-2’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

அந்த மனுவில், “நாங்கள் தயாரித்து வரும் ‘இந்தியன்-2’ படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும்.

இந்தியன்-2’ படத்திற்கு 150 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில், இப்போது அதையும் தாண்டி 236 கோடி ரூபாய்வரை செலவாகி உள்ளது. ஆனாலும், இதுவரையிலும் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது.

இயக்குநர் ஷங்கருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ள நிலையில் இதுவரை 14 கோடி ரூபாய் அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 26 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்தவும் தயாராக இருக்கிறோம்.

இந்தியன்-2’ படத்தின் மீதம் உள்ள பகுதிகளை முடித்துத் தர வேண்டுமென ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும்” என்று அதில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, “இயக்குர் ஷங்கரின் விளக்கத்தை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது.  பிற படங்களை இயக்கக் கூடாது என ஷங்கருக்கு இடைக்கால தடையும் விதிக்க முடியாது…” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கு குறித்து இயக்குநர் ஷங்கர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Our Score