சென்னை மணலியைச் சேர்ந்த 19 வயதான பிரபுகுமார் என்பவரை, பொது இடத்தில் ஒரு சிறுமியை ஆபாச வார்த்தைகளால் கேலி செய்ததாக, போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் பிரபுகுமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், “16 வயது சிறுமியும், மனுதாரர் பிரபு குமாரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். ஆகையால், அவர் மீது போலீஸார் தொடர்ந்த வழக்கு பொய்யானது..” என்று வாதிட்டார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான வக்கீல், “சிறுமியும், அவரது தாயாரும் சாலையில் நடந்துச் சென்றனர். அப்போது, சிறுமியை பார்த்து, ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா… ஓடி போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா..?’ என்று பிரபு குமார் திரைப்பட பாடலை பாடியுள்ளார். இதைத் தட்ட கேட்ட அவர்களை பிரபு குமார் தாக்கியது மட்டுமல்லாமல், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்..” என்றார்.
இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு இதுதான் :
“மனுதாரர் திரைப்பட பாடல் மட்டும்தான் பாடியுள்ளார். அவரிடம் பாலியல் தொந்தரவு செய்யும் உள் நோக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் மனுதாரர் சிறையில் உள்ளார். ஆகையால், அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியமும், இந்த வழக்கில் எழவில்லை.
எனவே, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குகிறேன். அதாவது, ரூ.10 ஆயிரம், அதே தொகைக்கு இரு நபர் உத்தரவாதத்தை கீழ் நீதிமன்றத்தில் கொடுத்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, காலையிலும், மாலையிலும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கு என்பதால், இந்த வழக்கை போலீஸர் விரைவாக விசாரணை நடத்தி, குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும்.
இதனிடையே திரைப்பட துறையினரின் செயல்களுக்கு என்னுடைய அதிருப்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இளைய சமுதாயத்தினர் மனதில் நல்ல எண்ணங்களையும், சமுதாய பொறுப்புகளையும் பதிய வைக்க வேண்டும். அதற்கு பதிலாக, திரைப்பட பாடல்களில் ஆபாச வார்த்தைகளை இடம் பெற செய்வது, வன்முறை காட்சிகளை படமாக்குவது போன்றவற்றால், நமது உயர்ந்த கலாசாரம், அறநெறியையும் திரைப்பட துறையினர் சீரழித்து விடுகின்றனர்.
திரைப்படம் போன்ற ஊடகங்கள், இளைய சமுதாயத்தினரின் வலிமையான ஆசிரியராக உள்ளது. இந்த ஆசிரியர் சொல்லி கொடுக்கும் பாடம் வாழ்நாளில் எப்போதுமே அவர்களுக்கு மறக்காது. எனவே, திரை உலகத்தினர் தங்களுடைய சமுதாயப் பொறுப்புகளை உணர்ந்து செயல்படவேண்டும்.
எதிர்கால தூண்களான இளைய சமுதாயத்தினரின் மனதில் நல்ல எண்ணத்தை விதைக்க வேண்டும். இவற்றின் மூலம் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க திரையுலகினர் முன் வர வேண்டும்..” என்றும் கேட்டுக் கொண்டார்.
இதுக்கெல்லாம் அடங்குறவங்களா நம்ம சினிமாக்காரங்க..? கருத்து சுதந்திரம்.. காலத்திற்கேற்ற மாற்றம்.. இப்போதைய கலாச்சாரமும், பண்பாடும் இதுதான்னு சொல்லிட்டு இதையேதான் செய்யப் போறாங்க..!?