full screen background image

“மலையேறப் போனாலும் மச்சான் துணை வேணும்..” – இயக்குநர் கே.பாக்யராஜின் சுவையான பேச்சு

“மலையேறப் போனாலும் மச்சான் துணை வேணும்..” – இயக்குநர் கே.பாக்யராஜின் சுவையான பேச்சு

தயாரிப்பாளரும், இயக்குநருமான கணேஷ் சந்திரசேகர் நடித்து, இயக்கி தனது சொந்த நிறுவனமான ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் ‘செஞ்சி’.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ் பேசும்போது, “இப்போவெல்லாம் பத்திரிகை விளம்பரங்களைப் பார்க்கும்போது நகைச்சுவையாக இருக்கிறது. ‘வெற்றிகரமான மூன்றாவது நாள்’, ‘வெற்றிகரமான ஐந்தாவது நாள்’ என்று போடுகிறார்கள்.

ஒரு காலத்தில் ‘வெற்றிகரமான 25-வது நாள்’, ‘100வது நாள்’, ‘125-வது நாள்’, ‘175-வது நாள்’ என்று விளம்பரம் செய்வார்கள். இப்போது படம் வெளிவருவதே பெரிய சாதனையாக இருக்கும் போலிருக்கிறது.

இந்த நிலையில் சினிமா நன்றாக இருக்கிறதா, இல்லையா என்றே தெரியவில்லை.  அதே நேரம் தமிழ் சினிமா உலகின் பல நாடுகளில் ஜப்பான், கொரியா போன்ற நாடுகளிலெல்லாம் வெளியாகிப் பேசப்படுகிறது. அங்கு இப்போது தமிழ் சினிமாவைப் பற்றிப் பேசுகிறார்கள்.

இப்படி ஒரு பக்கம் தமிழ் சினிமா வளர்ந்து கொண்டு இருப்பது மகிழ்ச்சிதான். அப்படிப்பட்ட சூழலில்தான் இவர் இந்த செஞ்சி’ படத்தை உருவாக்கி இருக்கிறார்.

நான் சினிமா விழாக்களில் கலந்து கொள்ளும்போது, அந்தப் படத்தைப் பற்றி, தயாரிப்பாளர் பற்றி, இயக்குநர் பற்றி விசாரிப்பேன். இவரைப் பற்றி விசாரித்தபோது இவர் யாரிடமும் உதவி இயக்குநராக இல்லை என்றார்கள். ஒரு சுயம்புவாக வந்திருக்கிறார். அதே நேரத்தில் குடும்பத்தின்  தொந்தரவுகள்  எதுவும் இல்லாமல் எல்லாருக்கும் செட்டில் செய்துவிட்டுதான் இங்கு வந்திருக்கிறார்.

இப்படிக் குடும்பத்தில் செட்டில் செய்துவிட்டுத்தான்  சினிமாவுக்கு வர முடியும் என்று  நினைத்தால் இங்கு யாருமே வரவே முடியாது. ஆனால் இவர் செய்திருக்கிறார். இவரது விடாமுயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது.

ராஜன் சார் தன் வாழ்க்கைக் கதை முழுவதையும் கூறினார். இவ்வளவு  இழப்பு என்று ஆன போதும், இப்போதும் அவர் சினிமாவில் பணத்தை வட்டிக்கு விட்டுக் கொண்டுதான் இருக்கிறார். இது எப்படி நடக்கிறது என்பதுதான் எனக்குப் புரியவில்லை. இதிலிருந்து சினிமாவில் விழுந்தாலும், முடிந்தால் எழவும் முடியும் என்று புரிந்து கொள்ள முடியும். அதற்கு ராஜன்தான் மிகச் சிறந்த உதாரணம்.

இங்கே தயாரிப்பாளர் கணேஷ் சந்திரசேகர் நான் சினிமாவில் நுழைவது என்று முடிவெடுத்தபோது தன் மைத்துனர் பெரிதும் கவலைப்பட்டதாக இங்கு பேசும்போது கூறினார். தனது தங்கையின் கணவர் இப்படி சினிமா என்று போவதில் பதற்றப்பட்டதாகச் சொன்னார்.

ஆயிரம் இருந்தாலும் தனது தங்கையின் வாழ்க்கை மீது அண்ணனுக்கு ஒரு அக்கறை இருக்கும்தானே..? மலையேறப் போனாலும் மச்சான் துணை வேணும் என்பார்கள். அந்த வகையில் கவலைப்பட்டு இருக்கிறார். இனி அவர்கள் தைரியமாக இருக்கலாம்.

படத்தின் சில காட்சிகளைப் பார்க்கும்போது எனக்கு ஏதோ ஒரு புதைக்கப்பட்ட புதையலை, பொக்கிஷத்தைத் தேடிப் பயணம் செல்வது போல் உள்ளது. இது பார்ப்பதற்குப் புதிதாக உள்ளது.

இப்போதுகூட கேரளாவில் பல கோயில்கள்  திறக்கப்படாமல் உள்ளது. ஏனென்றால் அவ்வளவு பொக்கிஷங்கள் அங்கே இருப்பதாகப்  பேசப்படுகிறது. இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கும் முத்து கணேஷ், எல்.வைத்தியநாதன் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். எல்.வி என்பவர் இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன் போன்றவர்களால் மதிக்கப்பட்டவர். அந்தக் குடும்பத்தில் இருந்து வந்தவருக்கு வாழ்த்துகள்.

படத்திற்கான முக்கிய பாத்திரத்தில் இயக்குநரே நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பெரிய ஆள், சின்ன ஆள் என்று யாரும் பார்ப்பதில்லை. படம் நன்றாக இருந்தால் வரவேற்பார்கள். புதிய  முயற்சியை எப்போதும் தமிழ் ரசிகர்கள்  வரவேற்பார்கள். இந்த செஞ்சி படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்…” என்று வாழ்த்தினார்.

Our Score