‘சார்லி சாப்ளின்-2’ – சினிமா விமர்சனம்

‘சார்லி சாப்ளின்-2’ – சினிமா விமர்சனம்

அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் டி.சிவா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் முதல் பாகமான ‘சார்லி சாப்ளின்’ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு வசூல் சாதனை புரிந்தது.

முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதிலும் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அதா சர்மா நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த நடிகர் பிரபு இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

மற்றும் சந்தனா, அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா, செந்தில், ரவிமரியா, கிரேன் மனோகர்,  செந்தி,  சாம்ஸ்,  காவ்யா,  அமீத் பார்கவ், ‘கோலிசோடா’ சீதா ஆகியோருடன்  வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் ஆகியோரும் நடிக்கிறார்கள். கூடவே தயாரிப்பாளர் டி.சிவாவும் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். கெளரவ வேடத்தில் வைபவ் நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு – செளந்தர்ராஜன், இசை – அம்ரீஷ், பாடல்கள்  –    மகாகவி பாரதியார்,  யுகபாரதி, பிரபுதேவா, ஷக்தி சிதம்பரம், கருணாகரன், படத் தொகுப்பு – சசி, கலை இயக்கம் – விஜய் முருகன், நடன இயக்கம் – ஜானி ஸ்ரீதர், சண்டை பயிற்சி – கனல் கண்ணன், தயாரிப்பு நிர்வாகம் – மகேந்திரன், தயாரிப்பு மேற்பார்வை – பரஞ்சோதி, தயாரிப்பு – டி.சிவா, எழுத்து, இயக்கம் – ஷக்தி சிதம்பரம்.

நாயகன் பிரபுதேவா மேட்ரிமோனியல் தொழில் செய்து வருகிறார். இதுவரையிலும் 99 பேருக்கு பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைத்திருக்கிறார். 100-வது திருமணத்துக்காக வெயிட்டிங்.

ஆனால் அவரது அப்பா டி.சிவாவும், காது கேளாத அம்மா செந்தியும் பிரபுதேவாவுக்கு பெண் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பிரபுதேவாவோ எந்தப் பெண்ணும் தனக்குப் பிடிக்கவில்லை என்று கல்யாணத்திற்கு மறுக்கிறார்.

இந்த நேரத்தில்தான்  கையில் சாதாரணமாக ஏற்பட்ட ஒரு காயத்திற்கு சிகிச்சை பெற வேண்டி டாக்டரான பிரபுவிடம் செல்கிறார். பிரபுவோ அப்போதுதான் இதயத்தில் ஓட்டை விழுந்து சில நாட்களில் இறக்கப் போகும் கோலிசோடா சீதாவிடம் அன்பாகப் பேசி அவரை அனுப்பி வைக்கிறார்.

சீதாவின் கதையை பிரபுதேவாவிடம் சொல்கிறார் பிரபு. அப்போது அடையாளத்திற்கு அவர் சொன்ன டிரெஸ்ஸிங் ஒற்றுமை தற்செயலாக அங்கே வரும் நிக்கி கல்ரானியின் மீது விழ.. நிக்கிதான் இன்னும் சில நாட்களில் சாகப் போகிறாரோ என்று தவறாக நினைத்து விடுகிறார் பிரபுதேவா. நிக்கி பிரபுவின் மகள் என்பது பிரபுதேவாவுக்கு தெரியாது.

ஆனால் நிக்கியை பிரபுதேவா இதற்கு முன்பாக கும்பகோணத்தில் பார்த்து பேசி அவர் மீது ஒரு தலைக் காதல் கொண்டிருக்கிறார். இதனால்தான் அந்தப் பெண்ணைக் காதலிப்பதாக பிரபுவிடம் சொல்கிறார். பிரபுவோ சீதாவைத்தான் பிரபுதேவா காதலிப்பதாக நினைதது இதற்காக அனைத்துவித உதவிகளையும் செய்கிறார்.

ஆனால் கடைசியில் பிரபுதேவா காதலிப்பது தன் மகள் நிக்கியைத்தான் என்பது அறிந்து அதிர்ச்சியடைகிறார் பிரபு. இதற்கிடையில் பிரபுதேவாவின் நல்ல மனதை அறிந்து வைத்திருக்கும் நிக்கியும், இந்தக் கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்ள… இருவீட்டாரும் பேசி கல்யாணத்தை திருப்பதியில் வைத்துக் கொள்ள முடிவெடுத்திருக்கிறா்கள்.

ஆனால் திருப்பதி செல்வதற்கு முதல் நாள் துபாயிலிருந்து வரும் ராஜா என்னும் பிரபுதேவாவின் நண்பனான விவேக் பிரசன்னா நிக்கியின் போட்டோவைப் பார்த்துவிட்டு ஒரு வீடியோவைக் காட்டுகிறான். அதில் கடற்கரையில் யாரோ ஒரு இளைஞனுடன் நிக்கி கல்ரானி லிப் கிஸ் கொடுப்பது தெளிவாகத் தெரிகிறது.

இதைப் பார்த்துவிட்டு நண்பர்களுடன் குடிபோதையில் இருந்த பிரபுதேவா நிக்கியைக் கேவலமாகத் திட்டிப் பேசி ஒரு வீடியோவை தயார் செய்து அதனை நிக்கி கல்ரானிக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி விடுகிறார்.

மறுநாள் எதற்கும் அந்தப் பையனின் வீட்டுக்குப் போய் அவனிடம் நடந்ததைக் கேட்கலாம் என்றெண்ணி போய்க் கேட்க.. அது அவனது உயிரைக் காப்பாற்ற நிக்கி செய்த முதலுதவி என்பது தெரிய வருகிறது.

அவசரத்தில் வீடியோவை அனுப்பிவிட்டோம் என்றெண்ணி அந்த வீடியோவை நிக்கியின் போனில் இருந்து அகற்ற வேண்டும் என்று துடிக்கிறார் பிரபுதேவா. இதற்கிடையில் அனைவருமே கல்யாணத்திற்காக திருப்பதிபோய் காத்திருக்க.. தனது நண்பர்களுடன் திருப்பதிக்கு பதைபதைப்புடன் போய்ச் சேர்கிறார் பிரபுதேவா.

அந்த வீடியோவை நிக்கி பார்த்தாரா..? இல்லையா..? இருவரின் கல்யாணமும் நடந்ததா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

2002-ம் ஆண்டு வெளிவந்த ‘சார்லி சாப்ளின்’ படத்தின் முதல் பாகத்தில் இருந்தவர்களில் பிரபு, பிரபுதேவா, இயக்குநர் ஷக்தி சிதம்பரம் என்று மூவர் மட்டுமே இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றுள்ளனர்.  முதல் பாகத்தின் தலைப்பு மட்டுமே ஒற்றுமை. மற்றவையெல்லாம் வேறுதான்.

இன்னொன்று, கதாபாத்திரத்தின் பெயரை மட்டும் அப்படியே வைத்திருக்கிறார்கள். பிரபுவின் கதாபாத்திரத்தின் பெயர் இதிலும் ‘ராமகிருஷ்ணன்’தான். பிரபுதேவாவுக்கும் அதே ‘திரு’ என்கிற பெயர்தான்.

முதல் பாகத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருந்த பிரபு, இந்தப் படத்தில் கதாநாயகியின் தந்தையாக ப்ரோமோட் ஆகியுள்ளார். ஆனால் இன்னொரு ஹீரோவாக நடித்திருந்த பிரபுதேவா இதிலும் நாயகனாகவே நடித்துள்ளார். என்னே விந்தை..?

பிரபுதேவாவின் வயதும், சிக்கென்ற உடம்பும் அவரை ஹீரோவாக பார்க்க வைத்துள்ளது. கொஞ்சம் நகைச்சுவைக்கு முயற்சி செய்திருக்கிறார். அதில் பாதிதான் வெற்றி கிடைத்திருக்கிறது. சுந்தர்.சி-யின் அனைத்து படங்களிலும் இருக்கும் தேடுதல் வேட்டை போன்ற திரைக்கதை இதிலும் இருக்கிறது. அந்தக் கொஞ்ச நேர பரிதவிப்பில், பதைபதைப்பில், பதறியோடும் பிரபுதேவாவை ரசிக்கலாம். நடிப்புக்கென்றே தனியாக வாய்ப்பே கொடுக்காமல் காமெடியை முன் வைத்திருப்பதால் எல்லாமே காமெடியாகிவிட்டது.

விவேக் பிரசன்னா ஒவ்வொரு முறையும் தன்னை யதேச்சையாக மாட்டிவிடும்போது அவரை அடிக்கவும் முடியாமல் கோபத்தை அடக்கும் காட்சியில் பாராட்டை விவேக்கிற்கு பெற்றுக் கொடுத்திருக்கிறார். உண்மையில் பிரபுதேவாவால் பயனடைந்திருப்பது விவேக் பிரசன்னாதான்.

மனிதர் மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார். ஏதோ உண்மையான அக்கறையில் சொல்வதை போலவே அனைத்து விஷயங்களையும் போட்டு உடைத்துவிட்டு கிளைமாக்ஸிலும் அவர் செய்யும் போட்டுக் கொடுத்தல் ஒரு அட்ராசிட்டி. 

நிக்கி கல்ரானி இந்தப் படம் மூலமாக அடுத்தத் தொடையழகி நான்தான் என்று ரம்பாவுக்கு சவால் விட்டிருக்கிறார். அந்த அளவுக்கு அவருடைய தொடையும் அதிகமான பிரேம்களில் நடித்துள்ளது.

தனது வசீகரமான முகத்தழகிலேயே நிக்கிக்கு ரசிகர்கள் கூட்டம் கூடிக் கொண்டே போகிறது. அதா சர்மாவை பைத்தியம் என்று இவர் நினைக்க.. அவர் இவரை பைத்தியம் என்று நினைக்க.. அந்த போர்ஷன் முழுவதிலும் இரண்டு கதாநாயகிகளும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.

பாடல் காட்சிகளில் நிக்கி கல்ரானியின் நடன அசைவுகளும், அவரது வாளிப்பான உடலும், தொடையழகும் பி அண்ட் சி ரசிகர்களை கொஞ்ச நாளைக்கு மறக்க முடியாமல் செய்யும். ‘சின்ன மச்சான்’ பாடல் காட்சியில் அதகளம் செய்திருக்கிறார் நிக்கி. பாராட்டுக்கள்..!

அதா ஷர்மாவும் நிக்கிக்குப் போட்டியாக தானும் கவர்ச்சிக் குளத்தில் குதித்திருக்கிறார். நடிக்கவும் செய்திருக்கிறார். அமைதியாக போய் மணமேடையில் பிரபுதேவாவின் அருகில் அமரும் காட்சியில் செம ஜோர்..! ஆனால் குளோஸப் காட்சியில் டப்பிங் வாய்ஸ் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இன்னொரு துணை கேரக்டரில் வரும் சந்தனா என்னும் பெண்ணும் நன்கு நடித்திருக்கிறார்.

காமெடியனாக நடித்திருக்கும் ரவி மரியாதான் கொஞ்சூண்டு சிரிக்க வைத்திருக்கிறார். சில இடங்களில் பிரபுதேவாவின் சமாளிப்புக்கு என்ன ரியாக்சன் தருவது என்று தெரியாமல் அவர் குழம்புவது செம காமெடி.

பிரபுதேவாவின் அம்மாவாக காது கேளாத செந்தியை வைத்து காது கேளாமையை கேலி செய்திருக்கும் செயல்தான் படத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு அம்சம். இன்னொரு நடிகருக்குக் கொடுத்திருக்க வேண்டிய சம்பளத்தை கட் செய்துவிட்டு தானே அந்தக் கேரக்டரில் கச்சிதமாக நடித்திருக்கிறார் தயாரிப்பாளர் டி.சிவா. இனி இவரும் நடிகனாகவே வலம் வரலாம்.

சில காட்சிகளே ஆனாலும் கிரேன் மனோகர் சம்பந்தப்பட்ட திரைக்கதைக்கு ஒரு ஷொட்டு. படத்தில் நகைச்சுவைக்கு ஈடுகட்டும்விதமாய் அனைத்தையும் ஒன்று சேர்த்திருக்கிறார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம். திரைக்கதையை இப்படி பார்த்து, பார்த்து செய்த இயக்குநர், படத்தில் நகைச்சுவையை இன்னும் அதிகமாகவே வரவழைத்திருந்தால் தியேட்டரில் கரவொலி எழும்பியிருக்கும்.  

செளந்தர்ராஜனின் ஒளிப்பதிவும், அம்ரிஷின் இசையும்தான் படத்தில் குறிப்பிடத்தக்க அம்சங்கள். பாடல் காட்சிகளையும், இண்டோர் காட்சிகளையும் கொஞ்சமும் குறைவில்லாமல் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

அம்ரிஷின் இசையில் அனைத்துப் பாடல்களுமே இளமைத் துள்ளல். குறிப்பாக ‘சின்ன மச்சான்’ பாடல் காட்சிகள் கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்து. நடன இயக்குநருக்கு ஒரு ‘ஜே’ போடலாம்.

செல்போன் சம்பந்தமான விஷயங்களே இப்போதைய சினிமாவின் மையக் கண்ணாக இருந்து வருகிறது. அந்த வரிசையில் வாட்ஸ்அப்பில் ஒரு செய்தியை அனுப்பி அதை சம்பந்தப்பட்டவர் பார்த்துவிட்டாரா.. இல்லையா.. என்பது பற்றி அறிய விரும்பும் அந்த புளூ டிக் விஷயத்தைத்தான் இந்தப் படத்தில் கதைக் கருவாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இதனால்தான் படத்தின் போஸ்டரிலேயே ‘இரண்டு டிக்’ என்கிற விஷயத்தை பதிவு செய்திருக்கிறார்.

என்ன செய்திருந்தாலும் படத்தை இன்னும் அதிகமான நகைச்சுவை தெறிக்க உருவாக்கியிருக்கலாமே என்றுதான் சொல்லத் தோன்றுகிறது..!

Our Score