லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்த ‘சந்திரமுகி-2’ படத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ராதிகா சரத்குமார், ‘வைகைப் புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்திருக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க, படத் தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார். பத்திரிக்கை தொடர்பு – யுவராஜ், எழுத்து, இயக்கம் – பி.வாசு.
2005-ம் ஆண்டு வெளிவந்து 1 வருடம்வரையிலும் சென்னை சாந்தி தியேட்டரில் ஓட்ட வைக்கப்பட்ட சந்திரமுகி படத்தின் 2-ம் பாகம் என்ற தலைப்பில் வேறொரு கதையில் இந்தப் படம் தயாராகியுள்ளது.
பெரும் பணக்காரியான ராதிகா சரத்குமாரின் குடும்பத்தில் நிறைய குழப்பங்கள். இழப்புகள். ஒரு மகள் காதலருடன் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டு 2 குழந்தைகளையும் பெற்றெடுத்த பின்பு கணவருடன் ஒரு விபத்தில் இறந்து போகிறாள். இன்னொரு மகளான லட்சுமி மேனனும் ஒரு விபத்தில் ஊனமாகி சக்கர நாற்காலியில் வலம் வருகிறார். குடும்பத் தொழிலான தோல் பேக்டரியில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டு பெரும் நஷ்டமாகி தொழிற்சாலையே மூடப்பட்டுள்ளது.
இப்படி சோகங்களே தொடர்கதையாகி வருவதையுணர்ந்து தங்களது குடும்ப ஆன்மீக குருஜியிடம் ஆலோசனை கேட்கிறார் ராதிகா. அவர்களுடைய குல தெய்வ வழிபாடு செய்யாததுதான் அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம் என்கிறார் குருஜி.
உடனேயே குல தெய்வத்தை வழிபட ஊருக்குக் குடும்பத்துடன் செல்கிறார் ராதிகா. அந்த ஊரில் இருக்கும் மிகப் பெரிய அரண்மனை போன்ற வீட்டுக்குச் சொந்தக்காரர் முருகேசன் என்ற வடிவேல். இந்த வழிபாட்டுக்கு தனது பேரன், பேத்தியையும் அழைக்கிறார் ராதிகா. அவர்களின் தற்போதைய கார்டியனான பாண்டியன் என்ற ராகவா லாரன்ஸூடன் அவர்களும் ஊருக்கு வந்து சேர்கிறார்கள்.
இப்போது அந்தக் கோவில் புதர் மண்டிக் கிடப்பதால் அதைச் சுத்தம் செய்ய முனைகிறார் ராதிகா. இந்த வேலையில் ஈடுபடும் 2 ஊழியர்கள் உயிரிழக்கிறார்கள். இதையடுத்து ராகவா லாரன்ஸே களமிறங்கி இடத்தை சுத்தம் செய்கிறார்.
அதே நேரம் அந்த அரண்மனை வீட்டுக்குள் தெற்குப் பகுதியில் இருக்கும் ஒரு அறைக்குள் முடங்கியிருந்த 2 பேய்களை லட்சுமி மேனனும், சுபிக்ஷாவும் உசுப்பிவிட்டுவிட.. அவைகள் லட்சுமி மேனன் உடலுக்குள் புகுந்து ஆட்டி வைக்கின்றன.
குல தெய்வக் கோவில் வழிபாடு நடந்துவிட்டால் இந்தப் பேய்களின் அட்டகாசங்கள் நின்று போகும் என்பதால் குல தெய்வ வழிபாட்டுக்கு ராகவா லாரன்ஸ் முயல.. பேய்கள் அதைத் தடுக்க.. இந்தப் போராட்டத்தின் முடிவு என்ன.. அந்தப் பேய்கள் யார்.. அவைகள் எதற்காக அந்த வீட்டில் இருக்கின்றன. குல தெய்வ வழிபாடு முடிந்ததா இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை சுருக்கம்.
நடனப் பயிற்சியும், சண்டை பயிற்சியும் ராகவா லாரன்ஸுடன் கூடவே பொறந்தது போலேவே இருப்பதால்தான் இது போன்ற கதைகளில் இவரே நாயகனாகவும் நடிக்க முடிகிறது.
வடிவேலுவை சதாய்க்கிறார். நாயகிகளில் ஒருவரான மஹிமாவை லவ்வுகிறார். நடனத்தில் பின்னுகிறார். சண்டை காட்சிகளில் அனல் பறக்க வைக்கிறார். பஞ்ச் வசனத்தை அனாயசமாகப் பேசி கவர்கிறார். சின்னக் குழந்தைகளுக்குப் பிடித்ததுபோல் மொத்தமாக நடித்து வைத்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். இதுவே இவருடைய வெற்றிக்குக் காரணம்.
முருகேசனான வடிவேலு இந்தப் படத்தில் அநியாயமாக நடித்திருக்கிறார். ஒரு இடத்தில்கூட சிரிப்பே வரவில்லை. ஆனால் ரசிகர்களை முழுமையாக கவர்ந்திழுக்கிறார்.
ராதிகாவுக்கு பரிதாபமான குடும்பத் தலைவி வேடம். தனது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அவரது நிலைக்கு ஏற்ப நடித்திருக்கிறார்.
லட்சுமி மேனனும், கங்கனா ரனாவத்தும் போட்டி போட்டு பேயாய் நடித்திருக்கிறார்கள். கங்கனா சந்திரமுகியாக தனது நடனத் திறமையையும், நடிப்புத் திறமையையும் காட்டி நடித்திருக்கிறார். லட்சுமி மேனன் தனது நடனத் திறமையால் பேய் பிடித்ததைவிடவும் பேயாய் ஆடியிருக்கிறார்.
மகிமா நம்பியார், ராகவா லாரன்ஸை காதலிக்க வைக்கவே படம் நெடுகிலும் வந்திருக்கிறார். மேலும் சிடுசிடு சுரேஷ் மேனன், ஒரு சில காட்சிகள் என்றாலும் மனோபாலா அண்ட் கோ-வும், சுபிக்சாவும் தங்களது பெயரைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
கலை இயக்கம் செய்திருக்கும் தோட்டா தரணிக்கு ஒரு பொக்கே பார்சல். அரண்மனை மற்றும் குல தெய்வக் கோவிலை அழகாக வடிவமைத்துத் தந்திருக்கிறார்.
ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு ஏ ஒன் ரகம். இரவு நேரக் காட்சிகளை பயமுறுத்தலோடு காட்சிப்படுத்தியிருக்கிறார். அதே சமயம் சண்டை காட்சிகளில் திரையிலேயே பயர் வரும் அளவுக்கு பதிவு செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர் கீரவாணியின் இசையில் பாடல் வரிகள் தனித்து தெரிகின்றன. பாடல் காட்சிகளில் அடித்து நொறுக்கும் இசைக்கேற்ப ராகவா லாரன்ஸின் நடனமும் அமைந்திருப்பது சிறப்பு. பின்னணி இசையைத்தான் பேய்களே பயந்து ஓடும் அளவுக்கு இசைத்திருக்கிறார் கீரவாணிகாரு..!
நடன இயக்குநரான கலா மாஸ்டரை தனியாக வெகுவாகப் பாராட்ட வேண்டும். பேய் பிடித்தாடும் நடனத்தில் ஒரே சரணத்தில் அடுத்தடுத்து வரும் ஒற்றை வரியான பாடல்களுக்கு லட்சுமி மேனனையும், கங்கனாவையும் மாறி, மாறி நடனமாட வைத்திருக்கும் அந்த சாகசத்திற்கு நிச்சயம் ஒரு விருது பார்சல்..!
ஆண்டனியின் படத் தொகுப்பில் இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டு 25 நிமிடங்களை நீக்கியிருந்தால் படம் இன்னமும் கிரிப்பாக இருந்திருக்கும்.
ராஜாக்கள் காலத்தில் விஜய நகர சாம்ராஜ்யத்தில் நடந்த கதை.. ஒரு பெண்ணால் இரண்டு உயிருக்குயிரான நண்பர்களிடையே ஏற்பட்ட மோதல்… இத்தனையாண்டுகள் கழித்தும் ஒரு வீட்டில் குடியிருந்து அடுத்தடுத்த தலைமுறைகளையும் பாதிக்கிறது என்ற மாய, மந்திர, மாந்திரீக கதையில் சுவையான திரைக்கதையை எழுதி, இன்றைய இளம் இயக்குநர்களுக்கு சவால் விடும் வகையில் படத்தை இயக்கியிருக்கிறார் இளம் இயக்குநரான பி.வாசு. இவருடைய சிறப்பான இயக்கத்திற்கு நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!
RATING : 3.5 / 5