full screen background image

“சண்டிவீரன் ஜாதியை சொல்லும் படமில்லை..” – இயக்குநர் சற்குணத்தின் விளக்கம்..!

“சண்டிவீரன் ஜாதியை சொல்லும் படமில்லை..” – இயக்குநர் சற்குணத்தின் விளக்கம்..!

இயக்குநர் பாலாவின் பி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம் ‘சண்டி வீரன்’. இதில் அதர்வா, ஆனந்தி ஜோடியாக நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். அருணகிரி இசையமைத்துள்ளார். சற்குணம் இயக்கியுள்ளார்.

இந்தப் படம் இயக்குநர் சற்குணம் இயக்கும் 4 =வது திரைப்படமாகும். இந்தப் படம் பற்றி பேசிய இயக்குநர் சற்குணம். “நான் முதலில் இந்தக் கதையை ஒளிப்பதிவாளர் செழியனிடம் சொல்லி அவரை ஒளிப்பதிவு செய்யச் சொல்லலாம் என்றுதான் அவரைப் பார்க்க வந்தேன். அவரிடம் பேசியபோது அவர் வேறொரு கமிட்மெண்ட்டில் இருப்பது தெரிந்தது.

அதோடு முதலில் இந்தப் படத்தை நான்தான் தயாரிப்பதாக இருந்த்து. இந்த நேரத்தில் செழியன் மூலமாக பாலா புதிதாக படங்கள் தயாரிக்க கதைகள் கேட்பதாக தெரிந்தது. சரி… பாலாவிடம் இதைச் சொல்லிப் பார்ப்போமே என்று தற்செயலாகத்தான் சென்று கதை சொன்னேன்.

முதற்பாதிவரையிலும் கதை கேட்டுவிட்டு ‘இதில் யார் நடித்தால் ஷூட்டா இருக்கும்..?’ என்றார். அப்போதைக்கு என் மனதில் அதர்வாதான் இருந்தார். அதனால், ‘அதர்வா நடிச்சா நல்லாயிருக்கும் ஸாருண்ணே..’. எந்த ரியாக்ஷனும் காட்டாமல், ‘ஓகே..’ என்றார். திரும்பவும் இடைவேளைக்கு பின்பான கதையைக் கேட்டார். கேட்டு முடித்ததும் ‘இந்தப் படத்தை நானே தயாரிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு திரும்பவும் அதே கேள்வியைத்தான் கேட்டார். ‘யாரை ஹீரோவா போடணும்னு..?’ இப்போதும் நான், ‘அதர்வாதான் ஸார்’ என்றேன். பாலா அதற்கு மேல் பதில் பேசவில்லை. ஆனால் அடுத்த ஒரு வாரத்தில் அதர்வாவை என்னிடத்தில் கதை கேட்க அனுப்பி வைத்தார்..” என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அதர்வா, “நான் இந்தப் படத்துல நடிப்பேன்னு நினைக்கவே இல்லை. அடுத்து நல்ல படமா செய்யலாமேன்னு நினைச்சு பல இடத்துல கதை கேட்டுக்கிட்டிருந்தேன். ஒண்ணும் அமையல. அப்பத்தான் பாலா அண்ணன்கிட்டேயிருந்து போன் வந்துச்சு. ‘எங்கேயிருக்க..? எப்போ ப்ரீயா இருப்ப..?’ன்னு கேட்டார். ‘சாயந்தரமே வந்தர்றேன்’ணேன்னு சொல்லிட்டு ஷூட்டிங் விட்டவுடனேயே அவர் ஆபீஸுக்கு ஓடி வந்தேன்.

‘ஒரு நல்ல ஸ்டோரி இருக்கு. சற்குணம் வைச்சிருக்காரு. போய் கேளு. எனக்குப் பிடிச்சிருக்கு. உனக்கும் பிடிக்கும். நான்தான் தயாரிக்கப் போறேன். நீதான் நடிக்கணும்’னாரு.. எனக்கும் ரொம்ப சந்தோஷம். உடனேயே சற்குணம் ஸார்கிட்ட கதை கேட்டேன். அதுகூட சம்பிரதாயத்துக்குத்தான். இப்படித்தான் இந்தப் படத்துல நுழைஞ்சேன்..” என்றார்.

படம் பற்றி பேசிய இயக்குநர் சற்குணம், “நான் முன்பு இயக்கிய ‘களவாணி’, ‘வாகை சூட வா’, ‘நையாண்டி’ ஆகிய படங்களின் வரிசையில் இந்த ‘சண்டி வீரனும்’ இருக்கும்.  ‘களவாணி’ படத்துல இருந்த யதார்த்தம்… ‘வாகை சூட வா’ படத்துல இருந்த நல்ல மெஸேஜ்.. இந்த இரண்டுமே இந்த ‘சண்டிவீரன்’ படத்துல இருக்கு.

‘சண்டிவீரன்’ தலைப்புக்கு என்ன காரணம்ன்னா.. ஊர்ல சண்டித்தனம் செஞ்சுக்கிட்டு ரவுடி மாதிரி திரியிறவங்களை யாருமே மதிக்க மாட்டாங்க. அப்படிப்பட்டவனை எப்படி வீரனா ஏத்துக்க முடியும்னு கேள்வி வரலாம். பொதுவா ஜாதிப் பெருமையை தூக்கிப் பிடிக்கிற கேரக்டரை ‘சண்டியர்’னுதான் சொல்லுவாங்க. ஆனால், நான் இந்த ஏரியாவுக்குள்ளேயே போகல.

இந்தப் படத்தோட ஹீரோ அந்த மாதிரியான கேரக்டரும் இல்லை. என்னோட முந்தைய இரண்டு படங்களிலும் எந்தவித ஜாதிச் சாயலும் இருக்காது. அதே மாதிரி இந்தப் படத்திலேயும் எந்த இடத்திலும், எந்தவொரு குறிப்பிட்ட ஜாதியை தூக்கிப் பிடிக்கிற மாதிரியான விஷயங்களும் கிடையாது.

ஹீரோ அதர்வா சிங்கப்பூர்ல வேலை பார்த்துட்டு தன்னோட சொந்த ஊரான மன்னார்குடிக்கு லீவுல வர்றார். வந்த நேரத்துல சில அசம்பாவிதங்கள்.. அதைத் தொடர்ந்து சங்கிலி தொடர்பா பல சம்பவங்கள். இதனால் ஊர் மக்கள் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து அவரையும், அவரோட குடும்பத்தையும் ஊரைவிட்டே ஒதுக்கி வைக்கிறாங்க.. அது ஏன்..? எதுக்கு…? ஒதுக்கி வைக்கிற அளவுக்கு என்ன நடந்துச்சுங்கிறதுதான் இந்தப் படத்தோட கதை.

‘களவாணி’ படத்துல ஹீரோ, ஹீரோயினைத் தாண்டி எப்படி அம்மாவா நடிச்ச சரண்யாவின் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டதோ அதேபோல இந்தப் படத்தில் மலையாளத்தின் பிரபல நடிகரான லால் சாரோட கேரக்டர், நிச்சயம் பெரிய அளவுல பேசப்படும்.

இந்தப் படத்துக்காக லால் சாரை நடிக்கச் சொல்லி கேட்கப் போனோம். கதையெல்லாம் கேட்டுட்டு, ”எனக்கு இப்பல்லாம் தமிழ்ப் படங்கள்ல நடிக்கவே பிடிக்க மாட்டேங்குது. எல்லாருமே என் வயதுக்கு மீறிய ஆக்சன் கேரக்டர்லயே நடிக்கக் கூப்பிடுறாங்க. ஒரு லெவலுக்கு மேல அதையெல்லாம் செய்ய முடியாதுங்கிறதால ‘முடியாது’ன்னு சொல்லிட்டேன். ஆனா இந்தக் கதையில அந்த மாதிரி எதுவும் இல்லை. அதுக்காகவே நான் நடிக்கிறேன்’னு ஒத்துக் கொண்டார். ‘சண்டகோழி’க்கு பின்பு லால் ஸாருக்கு பெயர் சொல்லும் படமாக இது அமையும்.

இது தஞ்சை மாவட்டத்தை களமாகக் கொண்ட கதையாக இருந்தாலும், தமிழகம் முழுவதுக்குமான ஒரு பொதுவான கதை. இதனால் படத்தின் ஷூட்டிங்கை தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியிலும், இராமநாதபுரத்திலும் தொடர்த்து நடத்தியுள்ளோம். அனைவரும் ரசிக்கும் வகையில் முற்றிலும் பொழுதுபோக்கு படமாக இதனை உருவாக்கியிருக்கிறேன்…” என்றார் சற்குணம்.

தொடர்ந்து ஹீரோ அதர்வா பேசும்போது, “இப்படத்தில் நான் கிராமத்து இளைஞனாக நடித்திருக்கிறேன். கிராமத்து பின்னணியில் முழுக்க, முழுக்க கமர்ஷியல் படமாகத்தான் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.

நான் இப்போ தொடர்ந்து படங்களில் நடிக்க விருப்பம் கொண்டு கதைகளைக் கேட்டு வருகிறேன். ஒரு நாளைக்கு 2 கதைதான் கேட்பேன். அதுக்கு மேல கேட்டா மனசுல நிக்காது. பிடிச்சிருந்தா திரும்பவும் ஒரு நாள் வரச் சொல்லி கேக்குறேன். அப்பவும் மனசுல அது உக்காந்திருச்சுன்னா ஒத்துக்குவேன்.

இதுல பாலா ஸார் படத்துல இருக்குற மாதிரி மேக்கப் மாத்தியோ, உடலை வருத்திக் கொண்டு நடிக்கிற மாதிரியோ காட்சிகளே இல்லை. ரொம்ப யதார்த்தமா அந்தப் பகுதில இருக்குற ஒரு பையன் என்ன சேட்டைகளெல்லாம் செய்வானோ.. அதையே கதையா எழுதி உருவாக்கியிருக்காரு இயக்குநர் சற்குணம்.. எனக்கும் இந்தப் படம் இன்னொரு திருப்பத்தைத் தரும்னு நம்புகிறேன்..” என்றார்.

‘சண்டி வீரன்’ படத்திற்கு சென்சாரில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. நாளை காலை 10 மணிக்கு இந்தப் படத்தின் ஒரு பாடலை நடிகர் சூர்யா வெளியிடவுள்ளார். ஸ்ரீகிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சரவணன் இந்தப் படத்தை ரிலீஸ் செய்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் – 7-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

Our Score