சென்சார் போர்டு செயல்படும் லட்சணம் இதுதான்.. ஒவ்வொரு மத்திய அரசு புதிதாக பதவியேற்றவுடனேயே இருக்கின்ற உறுப்பினர்கள் நீக்கப்படுவார்கள். அதற்குப் பிறகு மத்தியில் ஆட்சிக்கு வரும் கட்சியின் தலைவர்கள்.. ஆதரவாளர்கள்.. அந்தக் கட்சித் தலைவர்களின் அல்லக்கைகள் இப்படி நிறைய பேர் நியமிக்கப்படுவார்கள்.
இதனால்தான் அரசியல் போலவே சென்சார் போர்டு அலுவலகத்திலும் காசு கொடுத்து சர்டிபிகேட் வாங்கும் கேவலமான நிலைமை உருவானது. இதற்கு முழு முதற் காரணம் இந்திய அரசியல்தான் என்பதில் சந்தேகமில்லை.
சென்னையில் இருக்கும் சென்சார் அலுவலகத்தின் அதிகாரியான பக்கிரிசாமி இன்று ‘தினத்தந்தி’க்கு அளித்திருக்கும் விரிவான பேட்டியில் வெளிவந்திருக்கும் உண்மை..
மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தவுடனேயே சென்ற ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்டவர்களில் முக்கால்வாசி பேர் நீக்கப்பட்டிருக்கின்றனராம்.. புதியவர்கள் யாரும் இதுவரையில் நியமிக்கப்படவில்லையாம்..
“சென்னை மண்டலத்தில் கடந்த ஆண்டு ஏறத்தாழ 70 பெண் உறுப்பினர்கள் உள்பட மொத்தம் 190 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். மத்தியில் புதிய அரசு பதவியேற்றவுடன் கிட்டத்தட்ட 143 பேர் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். தற்போதைய நிலையில் 47 பேர்தான் உறுப்பினர்களாக இருக்கின்றனர். உறுப்பினர்கள் பற்றாக்குறையால்தான் ‘அஞ்சான்’ உள்பட ஒரு சில திரைப்படங்கள் தணிக்கைக்காக மும்பைக்கு அனுப்பப்பட்டது.
மத்திய அரசுதான் உறுப்பினர்களை நியமிக்கிறது. உறுப்பினர்களாக சமூக ஆர்வலர்கள், கலை-இலக்கிய துறையை சேர்ந்தவர்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் உள்பட குறிப்பிட்ட நபர்களை நியமிக்க நாங்களும் பரிந்துரை செய்து வருகிறோம்…” என்கிறார் பக்கிரிசாமி..
சென்சார் வழங்கிய படங்கள் :
“சென்னையில் 1-4-2013 முதல் 31-3-2014 வரை 281 தமிழ்ப் படங்களும், மொழி மாற்றம் செய்யப்பட்ட 58 தெலுங்கு படங்களும், 3 மலையாள படங்களும், 11 இந்தி படங்களும், 18 ஆங்கில திரைப்படங்களும், 2 சவுராஷ்டிரா திரைப்படங்களும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. இதில் 171 தமிழ் திரைப்படங்களுக்கு ‘யு’ சான்றிதழும், 76 தமிழ் திரைப்படங்களுக்கு ‘யு/ஏ’ சான்றிதழும், 34 தமிழ் திரைப்படங்களுக்கு ‘ஏ’ சான்றிதழும் வழங்கப்பட்டது. 1-4-2014 முதல் 31-8-2014 வரை 125 திரைப்படங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது..” என்கிறார் பக்கிரிசாமி.
அதே சமயம், ஒவ்வொரு படத்திற்கும் திடீரென்று கிளம்பும் எதிர்ப்புகள் பற்றி கூறுகையில், “ஜனநாயக நாட்டில் ஒருவருடைய எழுத்தூரிமை, பேச்சுரிமை, படைப்புரிமைகளை தடுக்க யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. ‘தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’ என்பது போல, என்னிடம் திரைப்படத்தை போட்டுக் காட்டு, எங்களிடம் திரையிட்டு காட்டுங்கள் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சமூக அக்கறையுடன்தான் ஒவ்வொரு திரைப்படங்களும் தணிக்கை செய்யப்பட்டு, அந்தந்த படத்தின் தன்மைக்கு ஏ, யு/ஏ, யு, எஸ் ஆகிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. திரைப்படங்களில் ஏதேனும் சர்ச்சையான கருத்துகள் இருந்தால் ஜனநாயக ரீதியில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். அதைவிடுத்து மலிவு விளம்பரத்துக்காக திரைப்படங்களுக்கு எதிராக போராடுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது…” என்கிறார் பக்கிரிசாமி.
இதைத்தாங்க நாங்களும் கேக்குறோம். அரசியல் தலைவர்களின் பெயர்களை சினிமாவிற்கு தலைப்பாக வை்பபதும், சினிமாவிற்குள் அவர்களுடைய புகைப்படங்களை காட்டுவதிலும், ஒரு அரசியல் தலைவரின் பெயரை கதாபாத்திரத்தின் பெயருக்குச் சூட்டுவதும் ஜனநாயக நாட்டில் ஒரு இயக்குநருக்கு உள்ள உரிமை.. அதையேன் சென்சார் போர்டு எதிர்க்கிறது..? ஏன் பெர்மிஷன் தர மாட்டேன்றீங்க..?
இதுக்கெல்லாம் பதிலை காணோம்.. அதுக்குள்ள ஊருக்கு உபதேசம் பண்றங்கப்பா..!
கடைசியா அவர் சொல்லியிருப்பதுதான் காமெடி..
“இலங்கை தமிழர் பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘தேன்கூடு’ என்ற படம் தணிக்கைக்காக வந்தது. படத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகள் இருந்ததால், தணிக்கை சான்றிதழ் வழங்க முடியவில்லை. அந்த திரைப்படம் டெல்லியில் உள்ள திரைப்பட தீர்ப்பாயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது…”
அதென்ன சர்ச்சைக்குரிய விஷயம்ன்னு சொல்றீங்களா..? ‘தேன்கூடு’ படத்தின் டைட்டில் ஈழ வரைபடம் போல இருந்தது. அது கூடாதாம்.. ‘ஏன் கூடாது’ன்னு கேட்டா பதிலே சொல்லலை. ‘அதை நீக்கினால்தான் டிரெயிலருக்கே சென்சார் தருவோம்’னு சொல்லி டார்ச்சர் பண்ணினதும் இதே சென்சார் போர்டுதான்..! இப்போவரைக்கும் இந்தப் படத்துக்கு சர்டிபிகேட் தராமல் டபாய்த்து டெல்லிக்கு அனுப்பி வைத்துவிட்டு எஸ்கேப்பாகிவிட்டது சென்னை மண்டல சென்சார் அலுவலகம்..
இவர்களெல்லாம் ஜனநாயகத்தை பத்தி பேசுறதை நினைத்தால்..???????