full screen background image

சின்னத்திரை இயக்குநர் சங்கம் நடத்தும் பிரம்மாண்டமான கலை விழா..!

சின்னத்திரை இயக்குநர் சங்கம் நடத்தும் பிரம்மாண்டமான கலை விழா..!

தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் ஆரம்பித்து கடந்த 23 ஆண்டுகளாக மிக சிறப்பாக இயங்கி வருகிறது.

அதைச் சிறப்பிக்கும் வகையில் ‘CD-23’ என்ற பெயரில் பிரம்மாண்டமான கலை விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா வரும் ஜூலை 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 10 மணிவரையிலும் சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் திரைப்படத் துறை மற்றும் சின்னத்திரையை சேர்ந்த பிரபல இயக்குநர்கள், எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், நடனக் கலைஞர்கள், சண்டை பயிற்சி இயக்குநர்கள், கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒலிப்பதிவாளர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள், தயாரிப்பு நிர்வாகிகள், ஒப்பனை கலைஞர்கள், தையற் கலைஞர்கள் மற்றும் அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும், தொழிலாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பில் உள்ள அனைத்து சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்களும், நிர்வாகத்தினரும் கலந்து கொள்கின்றனர்.

இந்த விழாவில் நடைபெறும் நடன நிகழ்ச்சிகள் முழுவதையும் பிரபல நடன இயக்குநரான கலா மாஸ்டர் இயக்குகிறார்.

இசை நிகழ்ச்சிகளை பிரபல இசையமைப்பாளரான ஸ்ரீகாந்த் தேவா நடத்துகிறார்.

மேடையில் நடைபெறும் வீர விளையாட்டு நிகழ்ச்சிகளை பிரபல சண்டை பயிற்சி இயக்குநர்களான பாண்டியன் மாஸ்டர் மற்றும் தவசி மாஸ்டர் இருவரும் இணைந்து நடத்துகின்றனர்.

வயிறு குலுங்கு சிரிக்க வைக்கும் நகைச்சுவை நிகழ்ச்சிகளை பிரபல திரைப்படம் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் நடத்துகின்றனர்.

தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தத் திரைப்படம் மற்றும் சின்னத்திரை நட்சத்திர தம்பதிகள் பங்கு பெறும் வித்தியாசமான ஒரு குடும்ப நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

திரைப்படம் மற்றும் சின்னத்திரையைச் சேர்ந்த பிரபல இயக்குநர்கள் உருவாக்கிய பல்வேறு நிகழ்ச்சிகளும் இந்த விழாவில் இடம் பெறவுள்ளது.

பிரபல மிமிக்ரி கலைஞர்கள் நடத்திக் காட்டும் பல குரல் நிகழ்ச்சிகளும் விழாவில் இடம் பெறுகிறது.

இந்த கலை நிகழ்ச்சிக்கு பிரபல திரைப்பட இயக்குநரான எஸ்.டி.சபா, இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

திரைப்படத் துறை மற்றும் சின்னத்திரையில் சாதனைகள் நிகழ்த்திய சிறந்த கலைஞர்களுக்கு இந்த விழா மேடையில் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படும்.

தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர் சங்கத்தின் உறுப்பினர்களான இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களுக்கும், வாய்ப்பளித்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கி நன்றி செலுத்தப்படும்.

இந்த விழாவை ஒவ்வொரு நிமிடமும் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நிகழ்ச்சியாக இது அமையும்.

இந்தக் கலை நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போது அதைப் பார்க்கும் கோடிக்கணக்கான தமிழர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அனைத்து நிகழ்ச்சிகளும் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

இந்த கலை விழாவை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று மாலை பிரசாத் 70 எம்.எம். தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் தளபதி, செயலாளர் சி.ரங்கநாதன், பொருளாளர் அரவிந்த்ராஜ் ஆகியோரின் தலைமையில் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளரான ஆர்.வி.உதயகுமார், சின்னத்திரை நடிகையும், தயாரிப்பாளருமான குட்டி பத்மினி, எழுத்தாளர்கள் சங்கத்தின் செயலாளரான லியாகத் அலிகான், சண்டை இயக்குநர் தவசி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் பல்வேறு சினிமா சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டு நடக்கவிருக்கும் கலை நிகழ்ச்சிக்கு தங்களது ஒத்துழைப்பை நல்குவதாக உறுதியளித்தனர்.  

Our Score