full screen background image

தியேட்டர்களில் ‘கள்ளன்’ படத்தைத் திரையிடவிடாமல் சாதி அமைப்புகள் ரகளை..!

தியேட்டர்களில் ‘கள்ளன்’ படத்தைத் திரையிடவிடாமல் சாதி அமைப்புகள் ரகளை..!

இயக்குநர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் கரு.பழனியப்பன், சௌந்தரராஜன், நமோ நாராயணன் நடிப்பில் உருவான ‘கள்ளன்’ திரைப்படம் இன்று தென் மாவட்டங்களில் திரையிடப்படவில்லையாம்.

இன்றுதான் இப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் இந்தப் படத்தின் தலைப்பான கள்ளன்’ என்ற பெயர் தங்களது சாதியைக் குறிப்பதாகச் சொல்லி அந்தச் சாதியைச் சேர்ந்த சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கினை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இந்த நிலையில் இ்ன்று வெளியாவதாக இருந்த திரையரங்களுக்குக் குறிப்பிட்ட சாதி சங்கத்தினர், “படத்தைத் திரையிட்டால் திரையரங்குகளைத் தாக்குவோம்…” என்று எச்சரிக்கை விடுத்ததால் இன்று காலையில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கள்ளன்’ படத்தைத் திரையிடுவதை அந்தத் தியேட்டர் நிர்வாகத்தினர் நிறுத்திவிட்டார்கள்.

இன்று காலையில் திடீரென்று ஏற்பட்ட இந்தப் பிரச்சினையையொட்டி இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மதியழகன், இயக்குநர் சந்திரா தங்கராஜ் இருவரும் உடனடியாக பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார்கள்.

இந்தச் சந்திப்பில் தயாரிப்பாளர் மதியழகன் பேசுகையில், “அவ்வளவு சிரமப்பட்டு கிட்டத்தட்ட இன்று அதிகாலைவரையிலும் முழித்திருந்து கஷ்டப்பட்டு, பேசிப் பேசித்தான் இந்த படத்தை இன்று ரிலீஸ் செய்தேன்.  ஆனால் திருச்சி, மதுரை, தேனி மாவட்டங்களில் எங்களது கள்ளன்’ படத்தைத் திரையிட்ட சில திரையரங்குகளின் திரைகளை சில சாதி வெறி பிடித்தவர்கள் கிழித்து எறிந்திருக்கிறார்கள்.

அந்தப் புகைப்படங்களை தங்களது வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் புகைப்படமாக வைத்து அதை பரப்புரையும் செய்து வருகிறார்கள். கூடவே. “நாங்கள் எத்தனை திரையரங்குகளில் படத்தை நிறுத்திவிட்டோம் என்பதைப் பாருங்கள்…” என்று பெருமையாகப் பதிவும் செய்திருக்கிறார்கள்.

அந்தச் சாதியைச் சேர்ந்த சில கவுன்சிலர்கள் படத்தை பார்த்தப் பிறகும் சம்பந்தப்பட்ட ஜாதிக்காரர்கள், திரையரங்குகளுக்கு மிரட்டல் விடுத்து படத்தை ரிலீஸ் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

நேற்றுவரை 180 திரையரங்குகள் எங்கள் படத்தை திரையிட ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால் தற்போது 75 திரைகளில்தான் படம் ஓடுகிறது. மேலும் சில திரையரங்குகள் எங்கள் படத்தை திரையிட மறுக்கின்றனர். நாங்கள் அந்த ஜாதியை சேர்ந்தவர்கள் கேட்டபடி மன்னிப்பு கடிதமும் கொடுத்துள்ளோம். ஆனாலும், அவர்கள் படத்தை வெளியிட அனுமதிக்கவில்லை.

தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பில் இருப்பவர்களும் இந்த விஷயத்தில் எங்களுக்காகக் குரல் கொடுக்க தயாராக இல்லை. அவர்கள் குறிப்பிட்ட ஜாதியினரை பகைத்துக் கொள்ள தயாராக இல்லையாம்.

நேற்று இரவு 11 மணிவரை அவர்கள் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், இரவு 2 மணிக்குத்தான் அவர்கள் மீண்டும் மிரட்டல் விடுத்தார்கள். இதற்கு முன்னதாக சட்ட ரீதியாக இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்தில் சந்தித்து அதை ஜெயித்து வந்தோம். ஆனாலும் மீண்டும் பிரச்சனையை கிளம்பியிருக்கிறார்கள். இதனால் எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பேசாமல் ஓடிடி போன்ற தளங்களுக்கே இனிமேல் படங்களைக் கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறோம்..” என்றார்.

இயக்குநர் சந்திரா பேசும்போது, ”நானும் அதே சாதியைச் சேர்ந்தவள்தான். ‘திருடன்’ என்பதற்கு நேரான தமிழ்ச் சொல்தான் ‘கள்ளன்’. இதுவொன்றும் சாதிப் பெயரில்லை.

மலைக்கள்ளன்’, ‘கள்ளன்’, ‘பவித்ர கள்ளன்’ என்று மலையாளத்தில்கூட பல படங்கள் வந்துள்ளன. அது வெறும் டைட்டில் மட்டும்தான். கள்வர்’ என ஏற்கனவே பெயர் இருந்ததால்தான் நான் கள்ளன்’ என பெயர் வைத்தேன். இது பெரிய நடிகரின் படம் இல்லை… நான் படத்தின் பெயரை மாற்றினால் மக்களுக்கு அது உடனேயே போய்ச் சேராது.

ஆனால், இதைப் புரிந்து கொள்ளாமல் கள்ளர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் எங்களுக்கு மிரட்டல் கொடுத்திருக்கிறார்கள். என்னுடைய புகைப்படத்தை எடிட்டிங் செய்து ஆபாசமாக வெளியிட்டுள்ளனர்.

முக்கியமாக ‘வாண்டையார்’ என்னும் நபர்தான் என்னுடைய தொலைபேசி என்னை கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கொடுத்துள்ளார். ஒரு சிலர் என்னை தொடர்பு கொண்டார்கள். நான் சொன்ன கருத்துக்களை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

18 வருடங்களாக நான் உழைத்த உழைப்பெல்லாம் வீணாய் போய்விட்டது. எனது சொந்த ஊரில்கூட இந்தப் படம் திரையிடப்படவில்லை. எனது ஊரில் உள்ள STP திரையரங்கம், வேல்முருகன் திரையரங்கம் இரண்டிலும் படங்கள் வெளியாகவில்லை.

இந்த இக்கட்டான நேரத்தில் தமிழக முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன். இந்த செயலுக்கு நீங்கள் தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் மீண்டும் ஜாதி வெறி பிடித்த மாநிலமாகத்தான் மாறும். இது பெரியாரின் மண். பெண் பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி இது. நீங்கள் தக்க நடவடிக்கை எடுத்து இந்த படத்திற்கு மட்டுமில்லை… இனிமேல் வரும் எந்தப் படத்திற்கும் ஜாதி பிரச்னை வராமல் பார்த்து கொள்ளுங்கள். கரு.பழனியப்பனையும் சேர்த்துதான் சொல்கிறேன். இந்தப் பிரச்சினையில் பத்திரிகையாளர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்…” என கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார்.

Our Score