சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம், படக் குழுவினர் கலந்து கொள்ள பூஜையுடன் இன்றைக்கு இனிதே துவங்கியது.
இந்தக் ‘கேப்டன் மில்லர்’ படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் T.G.தியாகராஜன், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் மூவரும் தயாரிக்கின்றனர். G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர்.
இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடிக்க பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கின்றார். பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், “மேற்குத் தொடர்ச்சி மலை” ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் (இசை), மதன் கார்க்கி (வசனம்), ஸ்ரேயாஸ் கிருஷ்ணா (ஒளிப்பதிவு), நாகூரன் (படத் தொகுப்பு), T. ராமலிங்கம் (கலை), பூர்ணிமா ராமசாமி & காவ்யா ஸ்ரீராம் (ஆடை வடிவமைப்பு), திலீப் சுப்பராயன் (ஆக்சன்), ட்யூனி ஜான் 24am (பப்ளிசிட்டி டிசைனிங்) ஆகியோர் தொழில் நுட்பக் குழுவில் பணியாற்றுகின்றனர்.
பெரும் பாராட்டுக்களை குவித்த ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார்.
இந்தக் ‘கேப்டன் மில்லர்’ 1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்று திரைப்படமாகும். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ளது.
‘கேப்டன் மில்லர்’ படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்களிடம் மிகப் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர், வீடியோ திரையுலகில் மிகப் பெரும் அலையை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு குறித்தான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.












