full screen background image

“எப்போதும் குற்றம், குறை சொல்லிக்கிட்டேயிருக்காங்க” – நடிகர் தனுஷின் வருத்தம்!

“எப்போதும் குற்றம், குறை சொல்லிக்கிட்டேயிருக்காங்க” – நடிகர் தனுஷின் வருத்தம்!

சத்யஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், வரலாற்றுப் பின்னணியில் பிரம்மாண்டமான ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள படம்  ‘கேப்டன் மில்லர்’.

ஜனவரி 12 அன்று திரைக்கு வரவுள்ள,  இப்படத்தின் Pre Release Event விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில், படக் குழுவினர், பத்திரிக்கையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில் நடிகர் இளங்கோ குமரவேல் பேசும்போது, “இந்தப் படத்தில் தனுஷை நான் பக்கத்திலிருந்து பார்த்தேன். தனுஷின் உழைப்பு பிரமிப்பாக இருந்தது. அவருடன் வேலை பார்த்தது நல்லதொரு அனுபவம். ஷூட்டிங்கில்  நாங்கள் ஒரு மலையில் இருப்போம், அவர் அடுத்த மலையில் தூரத்தில் நிற்பார். இப்படத்திற்காக மிகக் கடுமையாக உழைத்துள்ளார். இயக்குநர் அருண் மிகச் சிறப்பாகப் படத்தை உருவாக்கியுள்ளார். எனக்கு இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி..” என்றார்.

நடிகர் வினோத் கிஷன் பேசும்போது, “நான் தனுஷ் சாரின் மிகப் பெரிய ஃபேன். அருண் ப்ரோவுக்கும் நான் ஃபேன், இருவரும் இணையும் இந்தப் படத்தில் வேலை பார்த்தது எனக்கு ஒரு கிஃப்ட்டுதான். மிகச் சிறப்பான அனுபவமும்கூட. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்..” என்றார்.

நடிகை நிவேதிதா சதீஷ் பேசும்போது, “எனக்கு இந்தப் படம் ஒரு கனவு மாதிரி இருக்கிறது. ஒரு இண்டர்வியூவில் எனக்கு ஹிஸ்டாரிகல் படத்தில் நடிக்கணும், பிரம்மாண்டமான படத்தில் நடிக்கணும், தனுஷ் ஸார் படத்தில் நடிக்கணும் என மூன்று ஆசைகளைச் சொல்லியிருந்தேன். அந்த மூன்றும் இந்தப் படத்தில் நடந்ததுள்ளது.

தனுஷ் சாரின் தீவிர ஃபேன் நான். அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். இந்தப் படம் எனக்கொரு மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்..” என்றார்.

நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசும்போது, “இப்படியொரு பிரம்மாண்டமான விழாவில் நானும் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். தனுஷ் மீது எனக்கு எப்போதும் மரியாதை இருக்கிறது. சினிமாவில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு, இயக்குநராக, நடிகராக, பாடகராக கலக்குகிறார். அவர் இயக்கத்தில் ஒரு சில காட்சிகளில் நானும் நடித்திருக்கிறேன். மிக நல்ல அனுபவம், நிறையச் சொல்லித் தந்தார். இந்தப் படம் ஒரு புது அனுபவமாக இருக்கும். நடிகர் சிவராஜ் குமார் அவர்களுடன் நடித்ததிலும் மகிழ்ச்சி.

சுதந்திர காலத்துக்கு முன் நடக்கும் கதையில், இப்படிப்பட்ட பிரம்மாண்டமான படம் எடுக்க சத்யஜோதி பிலிம்ஸ் மாதிரியான நிறுவனம் வேண்டும். அவர்கள் இன்னும் நிறைய படம் எடுக்க வேண்டும். இம்மாதிரி படைப்பைச் சரியாக எடுத்துச் சென்ற இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றி..” என்றார்.

நடிகர் காளி வெங்கட் பேசும்போது, “தனுஷ் சாருடன் இது எனக்கு நான்காவது படம். இன்னும் நிறையக் கற்றுக் கொண்டே இருக்கிறேன். இயக்குநர் அருணை ‘இறுதிச்சுற்று’ படத்திலிருந்தே தெரியும், ஆனால் இந்தப் படத்தில்தான் வாய்ப்பு தந்துள்ளார். நல்ல ரோல். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். அனைவருக்கும் நன்றி..” என்றார்.

மாஸ்டர் திலீப் சுப்புராயன் பேசும்போது, “தனுஷ் சாருடன் இது எனக்கு 7-வது படம். மிகப் பெரிய பயணம். ‘கேப்டன் மில்லர்’ எனக்கு லைஃப் டைம் படம். இதில் சிஜுயெல்லாம் இல்லை, லைவ்வாக நிறைய எடுத்திருக்கிறோம். அருணும் நானும் காலேஜுல் இருந்தே ஃபிரண்ட்ஸ். இதில் நிறைய புதுசாக பண்ணியிருக்கிறோம்.

தனுஷ் சார் தண்ணீர் மாதிரி. எதில் வைத்தாலும், அதற்கேற்ற மாதிரி மாறிவிடுவார். இந்தப் படத்தில் அவரை நிறைய கஷ்டப்படுத்தியிருக்கிறேன். அதற்காக ஸாரி. சிவாண்ணாவுடன் ரொம்ப நாளாக வேலை பார்க்க ஆசைப்பட்டேன், இப்படத்தில் அது நடந்தது மகிழ்ச்சி. இப்படத்தில் கேர்ள்ஸ்க்கும் நிறைய ஆக்சன் காட்சி இருந்தது, டூப் போடாமல் எடுத்திருக்கிறோம். எல்லோரும் பயங்கரமாக கஷ்டப்பட்டு உழைத்தனர். இப்படம் பொங்கலுக்கு விருந்தாக இருக்கும்..” என்றார்.

கலை இயக்குநர் T.ராமலிங்கம் பேசும்போது, “இப்படத்திற்காக 1500 துப்பாக்கிகள் செய்தோம். இந்தப் படம் நிறைய வேலை வாங்கியது. அந்தக் காலகட்டத்தைத் திரையில் கொண்டு வருவது பெரிய சவால், ஒரு கற்கோயிலைக் கொண்டு வருவது பயங்கர சவாலாக இருந்தது. படம் பார்க்கும் போது எது செட் என்று உங்களுக்குத் தெரியவே தெரியாது. இப்படத்திற்காக என்னுடன் உழைத்த தொழிலாளிகள் அனைவருக்கும் நன்றி.

சத்யஜோதி பிலிம்ஸ் புரொடக்சன் தரப்பில் மிகப் பெரிய ஆதரவாக இருந்தார்கள். அவர்களால்தான் இவ்வளவு பெரிய படம் சாத்தியமானது. தனுஷ் சாருடன் இரண்டாவது படம். ‘கர்ணன்’ படத்தில் “கண்டா வரச் சொல்லுங்க..” பாடலில் வரும் படத்தை நான்தான் வரைந்தேன். நான் தீவிரமான தலைவர் ஃபேன். அவரை நினைத்துத்தான் வரைந்தேன். தலைவருக்குப் பின் ஒரு நடிகராக தனுஷ் சாரை ரசிக்கிறேன். ரஜினி சாருக்குப் பிறகு அவர்தான். என் கல்லூரிக் கால நண்பர் அருண். அவருடன் வேலை பார்த்தது நல்ல அனுபவம். எனக்கு இப்படத்தில் முழுச் சுதந்திரம் தந்தார். இந்தப் படம் கண்டிப்பாக மிகப் பெரிய வெற்றிப் படமாக இருக்கும்..” என்றார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும்போது, “இந்த மேடையில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.  தனுஷ் சார் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம். ‘கேப்டன் மில்லர்’ விஷுவலை பார்த்தால், எனக்குப் பயமாக இருக்கிறது. அடுத்த படத்தில் அவரை வைத்து என்ன செய்யப் போகிறேன் எனத் தெரியவில்லை.

‘கர்ணன்’ முடிந்தவுடன், அவருடன் வேலை பார்க்க சைன் பண்ணினேன். ஆனால் எனக்கு வேறு புராஜக்ட் வந்தபோது,  என்னை அன்புடன் அனுப்பி வைத்தார். அதற்காக அவருக்கு நன்றி. ‘கர்ணன்’ செய்யும்போதே, இந்தக் ‘கேப்டன் மில்லரில்’ ஒப்பந்தமாகிவிட்டார். ‘கர்ணனை’விட இதில் பயங்கரமாக வேலை பார்த்திருக்கிறார். அடுத்த படத்தில் இதைவிட, உங்களுக்குப் பெரிய தீனி தர முயற்சிக்கிறேன். இப்படத்தில் என் நண்பர்கள் பலர் வேலை பார்த்துள்ளனர், அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தூத்துக்குடியில் வெள்ளம் வந்தபோது நான் அங்கு போயிருந்தேன். அப்போது முதல் ஆளாக எனக்குக் கால் பண்ணி விசாரித்தவர் தனுஷ் சார். தனுஷ் சாரிடம் எப்போதும் நல்ல நட்பு இருக்கிறது. அவர் எப்போதும் சினிமாவை கவனித்துக் கொண்டிருக்கிறார். நிச்சயம் கேப்டன் மில்லர் மிகப் பெரிய வெற்றி பெறும் நன்றி..” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, “இது மிகப் பெரிய படம். தனுஷ் சாருடன் இரண்டு தம்பிகள் அமர்ந்திருக்கிறார்கள், அவர்களைப் பார்த்தால் மகன்கள் மாதிரி தெரியவில்லை. அவர்களும் விரைவில் ஹீரோவாக வர வேண்டும். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம், அருண் மற்றும் இந்த டீமை நம்பி, மிகப் பெரிய படைப்பைத் தந்திருக்கிறார்கள். விஷுவல்கள் சூப்பராக இருக்கிறது. கண்டிப்பாக இப்படம் பொங்கலுக்கு பெரிய வெற்றிப் படமாக இருக்கும்..” என்றார்.

பாடலாசிரியர் உமாதேவி பேசும்போது, “கேப்டன் மில்லர்’ நான் தனுஷ் சாருக்கு எழுதியிருக்கும் ரெண்டாவது படம். ‘பட்டாஸ்’ படத்தில் ‘புது சூரியன்’ பாடலை எழுதினேன். அவரை மனதில் வைத்துத்தான் எழுதினேன். இரண்டு பாடலும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தந்த வாய்ப்பு. இப்படத்தில் ‘கோரனாரு’ என்ற பாடல் எழுதியிருக்கிறேன். ‘கோரனாரு’ என்றால் ‘யானை பலம் கொண்டவர்’ என்று அர்த்தம். இந்தப் பாடலுக்காக ஜீவி சாருக்கு நன்றி. இந்த வாய்ப்பை தந்த இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோருக்கும் நன்றி..” என்றார்.

பாடலாசிரியர் விவேக் பேசும்போது, “தன் கலைப் படைப்பு மூலம், எனக்கு நான் ராஜாவாக வாழுறேன் என வாழ்பவர் தனுஷ் சார். இளையராஜா சார் போன்ற ஆளுமைகள் கோலோச்சிய காலத்தில் நாம் இல்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கும். ஆனால் தனுஷ் சாரும் மிகப் பெரிய ஆளுமைதான். அவர் காலத்தில் அவருடன் இணைந்து பல படங்களில் பணியாற்றுவது, மிகப் பெரிய பெருமை. ஜீவி சார் மிகப் பெரிய சாதனைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. அருண் மிகப் பெரிய உழைப்பாளி. அவருக்கு என் வாழ்த்துக்கள். இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி…” என்றார். 

நடிகை பிரியங்கா மோகன் பேசும்போது, “இந்த கேப்டன் மில்லர் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். அருண் சார் கதையை சொன்னபோதே, ரொம்ப எக்ஸைட்டாக இருந்தது. எனக்கு ஹிஸ்டாரிகல் படங்கள் என்றாலே பிடிக்கும், அப்படிப்பட்ட படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி.

இப்படத்திற்காக அந்தக் காலகட்டத்தைக் கொண்டு வர, எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளனர். எனக்குத் துப்பாக்கி பிடிக்கவே தெரியாது. என்னை ஆக்சன் செய்ய வைத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் என் நன்றியைச் சொல்ல வேண்டும்.

இவ்வளவு பெரிய படத்தை புரடியூஸ் பண்ணுவது மிகப் பெரிய வேலை, சத்ய ஜோதி பிலிம்ஸ் தந்த ஆதரவுக்கு நன்றி. ஜீவி சார் அட்டகாசமான இசையைத் தந்துள்ளார். சிவராஜ்குமார் சாருடன் இணைந்து நடித்தது பெருமை. அருண் உண்மையில் செம்ம ஜாலியானவர். கடுமையாக உழைத்திருக்கிறார்.

நான் தனுஷ் சாருக்கு பெரிய ஃபேன். அவருடன் சேர்ந்து நடித்தது சந்தோஷம். அவர் நடிப்பைப் பார்த்து மிரண்டிருக்கிறேன். இந்தப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இந்தப்படம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய கொண்டாட்டமாக இருக்கும்.  நன்றி..” என்றார்.

நடிகர் சந்தீப் கிஷன் பேசும்போது, “தனுஷ் அண்ணா ஃபேன்ஸுக்கு நன்றி. அவருக்கும் எனக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப் தனித்துவமானது. ஒரு நடிகனாக அவருடைய தாக்கம் என்னிடம் நிறைய இருக்கிறது. நான் நடிகனாக ஆசைப்பட்டபோது, எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது செல்வா சார், தனுஷ் அண்ணாதான். என் மீது அவர் நிறைய நம்பிக்கை வைத்துள்ளார், அதைக் காப்பாற்றுவேன்.

என் வீட்டிலேயே என்னை நடிகனாக நம்பாதபோது, என்னை ஹீரோவாக நம்பி, ஃபர்ஸ்ட் செக் தந்த, சத்யஜோதி நிறுவனத்திற்கு நன்றி. சினிமா மேல் காதல் இருந்தால்தான் இப்படிப்பட்ட படம் செய்ய முடியும், அதற்காக சத்யஜோதி நிறுவனத்திற்கு நன்றி.

தனுஷ் சார், அருண் மாதேஸ்வரனை நம்பி இப்படம் செய்ததற்கு நன்றி. அருணின் உழைப்பு மிகப் பெரியது. இந்தக் கேப்டன் மில்லருக்காக எல்லோருமே கடுமையாக உழைத்துள்ளனர். சிவராஜ்குமார் தங்க மனசுக்காரர், பிரியா ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு. எல்லோருமே காதலுடன் இப்படத்தைச் செய்துள்ளோம்.  இப்படம் உங்கள் அனைவருக்கும் மிகப் பெரிய ஆச்சரியத்தைத் தரும்..” என்றார்.

 

இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் பேசும்போது, “கேப்டன் மில்லர்’, புது வருடத்தில் முதல் ஈவண்ட், மகிழ்ச்சி. தமிழ் சினிமாவும், இந்திய சினிமாவும், பெருமைப்படும் படைப்பாக இப்படம் இருக்கும். எல்லோரும் அவ்வளவு பெரிய உழைப்பைத் தந்துள்ளார்கள். சில படங்கள் செய்யும்போதுதான் நாம் பெரிய, முக்கியமான படத்தில் வேலை செய்வதாகத் தோன்றும். இந்த ப்படம் அந்த மாதிரியான படம்.

தனுஷ் சாருடன் ‘பொல்லாதவனில்’ ஆரம்பித்த பயணம். ஒவ்வொரு தடவையும் இதற்கு அவார்ட் கிடைக்கும் என்று சொல்வேன், அதெல்லாம் தரமாட்டார்கள் என என்னைக் கிண்டல் செய்வார். ஆனால் ‘ஆடுகளம்’, ‘மயக்கம் என்ன’, ‘அசுரன்’ எல்லாம் செய்தவுடன், நிறைய  விருதுகள் வாங்கி, கலக்கிவிட்டார். இப்படத்தில் ரொம்ப புதுசாக ஒன்றைச் செய்துள்ளார். எல்லோருக்கும் பிடிக்கும். படம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி..” என்றார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் T.G.தியாகராஜன் பேசும்போது, “கேப்டன் மில்லர்’ படத்தைப் பற்றி எல்லோரும்  நிறையச் சொல்லி விட்டார்கள். என்னுடைய சினிமா ஜர்னியில் நான் அட்மையர் பண்ணியது என்றால் ரஜினி சார்தான். அவருடன் 5 படங்கள் செய்தோம். அதற்குப் பிறகு, நான் அதிகம் ரசிக்கும் நடிகர் தனுஷ். அவருடன் 3 படங்கள் செய்துவிட்டோம்.  இன்னும் பயணம் தொடர்கிறது.

அருண் பற்றி முதலில் என் மகன்தான் சொன்னார். அவர் படம் ‘ராக்கி’ பார்த்தேன், என்னைப் பிரமிக்க வைத்தது. பாரதிராஜா சாரை சந்தித்தபோது, அருண் மிகப் பெரிய திறமைசாலி என்றார். அந்த நம்பிக்கையில் தான் தனுஷ் சாரை அணுகினோம். அருண் ஹாலிவுட் தரத்தில் இப்படத்தைத் தந்துள்ளார்.

எங்கள் நிறுவனத்திலிருந்து பொங்கலுக்கு வந்த,  ‘விஸ்வாசம்’ படம் போல,  இப்படமும் எங்களுக்கு மிகப் பெரிய வெற்றிப் படமாக இருக்கும். தனுஷ் சார் மிகக் கடின உழைப்பைத் தந்துள்ளார். சிவராஜ்குமார், சந்தீப், பிரியா அனைவருக்கும் நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி..” என்றார்.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பேசும்போது, “T.G.தியாகராஜன் சாருக்கு  என் முதல் நன்றி. என்னை நம்பி இவ்வளவு பெரிய படம் செய்ததற்கு நன்றி. முதலில் நான் தேவதாஸ் என்ற கதை எழுதினேன். ஜீவிக்கு தெரியும். அந்தக் கதைக்கே தனுஷ் சாரைத்தான் அணுக முயற்சித்தேன். முடியவில்லை.  ராக்கிக்கும் அவர்தான் மனதிலிருந்தார். ஆனால் நடக்கவில்லை. இந்த வாய்ப்பு வந்தபோது, உடனேயே இந்தக் கதையை அனுப்பி விட்டேன்.  என்னை நம்பி வந்துவிட்டார். ராக்கி வரும் முன்னரே படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார். அடுத்து இன்னும் ஒரு பெரிய படம் செய்யப் போகிறோம். நான் எந்தக் கதையை எழுதினாலும், அவர்தான் முதன்முதலில் மனதில் வருகிறார். என்னை நம்பிய தனுஷ் சாருக்கு நன்றி.

ஜீவி எனக்கு மிகவும் நெருக்கம். அவரோடு படம் செய்தது மகிழ்ச்சி. சிவராஜ்குமார் சாரை சந்திக்கப் பெங்களூர் போனேன். அவரைப் பார்த்தது காட்ஃபாதர் பட அனுபவம் போல இருந்தது. அங்கு அவர் அப்படிதான் இருந்தார்.  தனுஷ் எனக்குப் பிடிக்கும். அவருக்காக நடிக்கிறேன் என்று நடிக்க  வந்தார். அவர் ஒரு  ஸ்டார், ஆனால் எங்களை எல்லாம் ஈஸியாக வைத்துக் கொண்டார். 

பிரியங்காவிற்கு முதல் நாள் ஷீட்டிங்கிலேயே, துப்பாக்கியை கையில் தந்துவிட்டோம். முதலில் பயந்துவிட்டார். கொஞ்ச நாளில் பழகிவிட்டார். அட்டகாசமாக நடித்துள்ளார். படத்தில் உழைத்த  அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும். நன்றி..” என்றார்.

நடிகர் சிவராஜ்குமார் பேசும்போது, “T.G.தியாகராஜன் சார், அர்ஜூன் எல்லோருக்கும் நன்றி. அருண் வந்து கதை சொன்னபோதே, “தனுஷ் சார் நடிக்கிறாரா? அப்போ நான் நடிக்கிறேன்..” என்று சொன்னேன். அவரை முதல் படத்திலிருந்தே  எனக்குப் பிடிக்கும். சிம்பிள், சூப்பர் ஆக்டர் என்றால் அவர்தான். எப்போதும் அவர் படங்கள் நிறைய முறைப் பார்ப்பேன். இந்தப் பட ஷீட்டிங் செம்ம ஜாலியாக இருந்தது. அவருக்காக எப்போதும்  நான் நடிக்க தயார். இந்தியாவில் மட்டும் இல்லை, உலக அளவில் சிறந்த ஆக்டர் தனுஷ்.

இப்படத்தில்  சந்தீப், பிரியங்கா எல்லோரும்  நன்றாக நடித்துள்ளார்கள். ஜீவி பிரகாஷ் சூப்பராக மியூசிக் செய்துள்ளார். உங்கள் எல்லோருக்கும் இந்தப் படம் கண்டிப்பாகப் பிடிக்கும். கொண்டாடுவீர்கள் அனைவருக்கும் நன்றி..” என்றார்.

நடிகர் தனுஷ் பேசும்போது, “சிறு துளி பெரு வெள்ளம்.  2002-ம் ஆண்டிலிருந்து சேர்த்த துளிகள், ரசிகர்களின் பெருவெள்ளமாக வந்துள்ளது. உங்களால்தான் நான். கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்.

இந்தப் படம் பற்றி யோசித்தால் மனதில் வருவது உழைப்பு. அசுரத்தனமான உழைப்பை, அனைவரும் தந்து உருவாக்கிய படம். வேர்வை சிந்தி, இரத்தம் சிந்தி, உருவாக்கிய படம். உண்மையில் அருண் மாதேஸ்வரன்தான் இந்தப் படத்தின் டெவில்.  அவரும் அவர் டீமும் கொடுத்த  உழைப்பைப் பார்த்த பிறகு, நான் பட்ட கஷ்டமெல்லாம் ஒன்றுமே இல்லை.

நான் நிறைய புது இயக்குநர்களோடு வேலை பார்த்திருக்கிறேன். அருண் மாதேஸ்வரனை பார்க்கும்போது, எனக்கு வெற்றிமாறன் ஞாபகம்தான் வருகிறது. அருணை முதன்முதலில் பார்க்கும் போது, காதில் கம்மல் எல்லாம் போட்டுக்கொண்டு ஆடிடியூட்டோடு இருந்தார். என்ன இவர் இப்படி இருக்கிறார்? என்று தோன்றியது.

கதையை சொன்னார். கேட்டவுடனேயே இதையெல்லாம் பண்ண முடியுமா? என சந்தேகம் வந்தது.  அவரிடமே “பண்ண முடியுமா..?” எனக் கேட்டேன். “ம்ம்… பண்ணலாம் சார்..” என்றார். இப்போது படம் பார்க்கும் போதுதான் அதன் அர்த்தம் புரிகிறது. படத்தில் மிரட்டியிருக்கிறார்.

‘பொல்லாதவன்’ படத்தில்தான் எனக்கு ஜீவி அறிமுகம். அங்கு ஆரம்பித்த பயணம்.  எனக்காக சூப்பர் ஹிட் சாங்ஸ் நிறைய பண்ணிவிட்டார். எப்போது போன் செய்தாலும், “சொல்லு மச்சான்” என ஓடி வருவார். ஜீவி ஐ லவ் யூ.

சிவராஜ்குமார் சார் என்னோட ஃபேன் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். அவரது பண்புக்கு, பணிவுக்கு நான் அடிபணிகிறேன். அப்பா பெயரைக் காப்பாற்றுவது எப்படி என்று, உங்களைப் பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்.

இப்படி ஒரு படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்க, மிகப் பெரிய ஆதரவு தந்த, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் சாருக்கு நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் சார், திலீப் சார் இருவரின் உழைப்பும் மிகப் பெரிது. கேப்டன் மில்லர் லுக்கை உருவாக்கிய திவ்யாவுக்கு நன்றி.

‘கேப்டன் மில்லர்’ என்பதன் டேக் லைன், ‘மரியாதைதான் சுதந்திரம்’ என்பதாகும். ஆனால் இங்கே எதற்கு மரியாதை இருக்கிறது?, எதற்குச் சுதந்திரம் இருக்கிறது?. எது சொன்னாலும், எது செய்தாலும், இங்குக் குறை சொல்ல ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஏன் என்றே புரியவில்லை. ஒரு சின்ன கூட்டம். இதை செய்து கொண்டே இருக்கிறது. அதைப் பற்றி கவலைப்படாமல் நம் வேலையைச் செய்வோம்.

கேப்டன் மில்லர் ஒரு உலகப் படமாக இருக்கும். ரொம்ப புதிதான படமாக, உங்களுக்குப் பிடிக்கும் படமாக இருக்கும். எனக்காக இங்கு வந்த மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி.  ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி..” என்றார்.

இப்படத்தில் தனுஷ்,  பிரியங்கா மோகன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தக் ‘கேப்டன் மில்லர்’  படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்குகிறார். செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார்.

இப்படம் பொங்கல் விருந்தாக வரும் ஜனவரி 12-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Our Score