ப்ளசிங் எண்டர்டெயினர்ஸ் சார்பில், பிரபாதீஸ் சாமுவேல் தயாரித்து வரும் திரைப்படம் ‘புத்தன் இயேசு காந்தி.’
இந்தப் படத்தில் புலனாய்வு பத்திரிகையாளராக நடிகை வசுந்தரா நடித்து வருகிறார். மேலும் கிஷோர், அசோக், மதுமிதா, கயல் வின்சென்ட், கல்லூரி அகில் ஆகியோரும் இதில் நடித்து வருகின்றனர்.
ஒளிப்பதிவு- விஜய் ஆம்ஸ்ட்ராங், இசை- வேத்சங்கர், பாடல்கள்- கவிபாஸ்கர், படத் தொகுப்பு – ரமேஷ்பாரதி, கலை – மூர்த்தி, நடனம் – எஸ். சுரேஷ், சண்டை – மிண்ட் கணேஷ், இயக்கம் வே.வெற்றிவேல் சந்திரசேகர், இணை தயாரிப்பு – கபிலன் சிவபாதம், தயாரிப்பு பிரபாதீஸ் சாமுவேல்.
அரசியல்வாதிகளின் ஊழலை ஆதாரங்களுடன் பத்திரிகையில் எழுதி அம்பலப்படுத்தும் கதாபாத்திரம் இவருக்கு. இந்தப் படத்திற்காக சென்னை நகருக்குள் மிகவும் வேகமாக கார் ஓட்டும் காட்சியில் நடிகை வசுந்தரா நடித்திருக்கிறார்.
மேலும், அவருடைய நிருபர் கதாபாத்திரத்திற்காக பைக் ஓட்டும் காட்சிகளும் படத்தில் இருக்கின்றன. மிகச் சிறப்பாக கார் ஓட்டும் வசுந்தராவுக்கு உண்மையில் பைக் ஓட்டத் தெரியாதாம்.
இதற்காக படக் குழுவினர் வசுந்தராவுக்கு பல நாட்கள் பைக் ஓட்டக் கற்றுத் தந்துள்ளனர். தினமும் காலையில் அண்ணா நகரில் இருந்து கோயம்பேடு, வடபழனி, மதுரவாயல், பூந்தமல்லி என நகரில் பரபரப்பான சாலைகளில் பைக் ஓட்டக் கற்றுக் கொண்டிருக்கிறார் வசுந்தரா. அதன் பின்னர் மிகவும் அனாயசமாக பைக் ஓட்டி நடித்திருக்கிறார். அவரது துணிச்சலை படக் குழுவினர் பாராட்டியுள்ளனர்.
இப்போது சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த ‘புத்தன் இயேசு காந்தி’ படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக வளர்ந்து வருகிறது.










