தமிழ்த் திரையுலகின் புதிய முயற்சியாக நேற்று திரைக்கு வந்து மிகவும் பரபரப்பாக பேசப்படும் படமான ‘குற்றம் கடிதல்’ திரைப்படம் மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பின்பு வரும் 27-ம் தேதி முதல் இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளது.
ஜே.எஸ்.கே.பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரும், கிறிஸ்டி சிலுவப்பனும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை ஜி.பிரம்மா இயக்கியிருக்கிறார்.
இந்தப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றது. சென்ற ஆண்டுக்கான சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருதினையும் இந்தப் படம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று செப்டம்பர் 24-ம் தேதி திரைக்கு வந்த இந்தப் படம் வரும் 27-ம் தேதியன்று www.tentkotta.com என்கிற இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளது. இதனை இந்தியாவை தவிர மற்ற பகுதிகளில் இருப்பவர்கள் கண்டு களிக்கலாம்.
ஒரு முறை பார்ப்பதற்கு ஒரு கட்டணமும், மாதந்தோறும் அதே இணையத்தளத்தில் வெளியாகும் படங்களை தொடர்ச்சியாக பார்ப்பதற்கு ஒரு கட்டணமும் என்று நிர்ணயித்துள்ளார்கள்.
ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் ஏற்கெனவே தான் தயாரித்த ‘ஒரு கன்னியும் மூணு கவளாணிகளும்’ படத்தையும் ஒரே நேரத்தில் தியேட்டர்கள் மற்றும் இணையத்தில் வெளியிட முன் வந்தார். ஆனால் அப்போது தியேட்டர்காரர்களின் கடுமையான எதிர்ப்பினால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
ஆனால் இப்போது இந்தியாவில் இப்படம் தெரியாது என்கிற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த புதிய வியாபார முறையை மேற்கொண்டுள்ளார்.
இதே இணையத்தளததில் சமீபத்தில் வெளியான பல புதிய படங்களும் உலக தமிழர்களின் பார்வைக்கு வெளியாகிவிட்டன.
FMS எனப்படும் வெளிநாடுகளுக்கான உரிமம் கிடைக்காத படங்களும், உரிமம் விற்பனை செய்தும் சரியாக கவனிக்கப்படாமல் போன படங்களும் சட்டென்று இணையத்தில் வெளியாகி உலகத் தமிழ் ரசிகர்களின் கண் பார்வைக்குச் செல்வதுகூட ஒருவிதத்தில் சரியானதுதான்.
நிச்சயம் இந்த முறையிலான வியாபாரம் சூடு பிடித்தால் தயாரிப்பாளர்களுக்கும் மேலும் ஒரு வகையில் லாபம் கிடைக்க வாய்ப்புண்டு. தயாரிப்பாளர்கள் இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டால் நல்லதுதான்..!