ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், பூமிகா சாவ்லா, விடிவி கணேஷ், நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியன், ராவ் ரமேஷ், அச்யுத் குமார், சரண்யா பொன்வண்ணன், சீதா, சதீஷ் கிருஷ்ணன், எம்.எஸ்.பாஸ்கர், சுரேஷ் சக்கரவர்த்தி, விருத்தி விஷால், மாஸ்டர் அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் படத் தொகுப்பு பணிகளை ஆசிஷ் ஜோசப் கையாள , கலை இயக்கத்தை ஆர்.கிஷோர் மேற்கொண்டிருக்கிறார்.
அக்கா-தம்பி சகோதர பாசத்தை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
சட்டக் கல்லூரியில் படித்தும் இன்னமும் டிகிரியை முடிக்காமல் சர்டிபிகேட் வாங்காமல் இருந்தாலும் மனதளவில் ஒரு வழக்கறிஞராகவே இருப்பவர் ஜெயம் ரவி. தன் பிளாட்டில் கட்டுமானம் சரியில்லை என்று மாநகராட்சியில் புகார் கொடுத்து மொத்த பிளாட்வாசிகளையும் தன் குடும்பத்துக்கு எதிராகத் திருப்பியிருக்கிறார்.
இவருடைய அப்பாவான ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியரான அச்யுத் குமார் ஜெயம் ரவியின் அட்ராசிட்டியைத் தாங்க முடியாமல் மருத்துவமனையில் படுத்தேவிடுகிறார்.
ஊட்டியில் மருத்துவராக இருக்கும் ஜெயம் ரவியின் அக்காவான பூமிகா, ஓடோடி வந்து அப்பாவைப் பார்த்து ஆறுதல் சொன்ன கையோடு தம்பியை திருத்தி அனுப்பி வைப்பதாகச் சொல்லி ஜெயம் ரவியை ஊட்டிக்கு அழைத்து வருகிறார்.
ஊட்டியில் பூமிகா வாக்கப்பட்டிருக்கும் வீடு ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தின் ரவியின் வீடு போலவே உள்ளது. நீலகிரி மாவட்ட கலெக்டரான ராவ் ரமேஷ்தான் பூமிகாவின் மாமனார். எல்லாம் நேரத்துக்கு நடக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர். இவருடைய மகனும், பூமிகாவின் கணவருமான நட்டி நட்ராஜ் வனத்துறை அதிகாரி. மனைவியான சரண்யா பொன்வண்ணன் பேமஸான வக்கீல். மகளான பிரியங்கா மோகன் உள்ளிட்ட அனைவருமே அப்பாவுக்கு மிகவும் பயந்தவர்கள். வீடே சிஸ்டமேட்டிக்காக இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் அக்கா பூமிகாவுடன் அந்த வீட்டுக்குள் நுழையும் ஜெயம் ரவி அந்த வீட்டின் சூழலுக்கு ஏற்ப நடக்காமல் தனக்குப் பிடித்தது போன்று வாழ்கிறார். இது பெரும் பிரச்சினையாகி அந்த வீட்டில் ஒரு பூகம்பத்தையே ஏற்படுத்துகிறது.
இந்தப் பூகம்பத்தின் விளைவாக பூமிகா நட்டி நட்ராஜூடன் சண்டையிட.. நட்ராஜ் பூமிகாவை அடித்துவிட, கோபத்தில் பூமிகா தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அந்த வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.
தம்பியுடனும், குழந்தைகளுடனும் தனித்து வாழும் பூமிகாவை மீண்டும் அவரது குடும்பத்தாருடன் சேர்த்து வைக்க முயற்சி செய்கிறார் ரவி. அவருடைய இந்த முயற்சி வெற்றியடைந்ததா..? இல்லையா..? என்பதுதான் இந்த ‘பிரதர்’ படத்தின் திரைக்கதை.
ஜெயம் ரவிக்கு அசால்ட்டான கதாப்பாத்திரங்களை அலட்சியமாகச் செய்யும் அளவுக்கு இயல்பான நடிப்பும், டயலாக் டெலிவரியும் மிக எளிதாக வரும். அதை முன் வைத்துதான் இந்தக் கேரக்டரை இயக்குநர் ராஜேஷ் கொடுத்திருக்கிறார்போலும்.!
ஆனாலும் அக்கா, தம்பி பாசத்தைக் கொட்டும் அளவுக்கான கதை இல்லாததாலும், காட்சிகள் இல்லாததாலும் அவருடைய பாச நடிப்பு நம் மனதில் நிலைக்கவில்லை.
படத்தின் முன் பாதியில் விளையாட்டுத்தனமாய் அவர் செய்யும் சேட்டைகளும், காட்சிகளும் ஓகேதான் என்றாலும், திரைக்கதையில் அவ்வளவு பெரிய ஓட்டையிருப்பதால் அதையும் ரசிக்க முடியவில்லை.
படத்தின் பின் பாதியில் எமோஷன்ஸ் காட்சியில் ரவியின் ஆழ்ந்த நடிப்பு ஓரளவு ஒர்க் அவுட்டாகியுள்ளது. ஆனால் இந்தப் பாசப் போரட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய அக்காவான பூமிகா எப்போதும் தூக்கக் கலக்கத்திலேயே பேசுவதைப் போல கடைசிவரையிலும் பேசுவதால் நமக்கு அந்தப் பாசப் பிணைப்பு கதையும் இம்பாக்ட் ஆகவில்லை. இந்தப் படத்தில் அக்கா கதாப்பாத்திரத்திற்கு கொஞ்சமும் பொருத்தமில்லாதவராக இருக்கிறார் பூமிகா.
ஜெயம் ரவியின் காதலியாக பிரியங்கா மோகன். அவ்வப்போது வந்து திரைக்கதையை நகர்த்த உதவியிருக்கிறார். அதே சமயம் சில நேரங்களில் அவர் காட்டும் சில முக பாவனைகளைப் பார்க்கும்போது, இன்னும் கொஞ்ச நேரம் ஸ்கிரீனில் இருக்கக் கூடாதா என்று ஏங்க வைத்திருக்கிறார்.
பூமிகாவின் கணவரான நட்டி பிள்ளைகளைப் பார்த்தவுடன் மனம் மாறுவது, படபடவென ஆங்கிலம் பேசும் வக்கீலான சரண்யா பொன்வண்ணன் கடைசி நேரத்தில் கணவரை எதிர்ப்பது.. கறார் ‘கலெக்டர்’ ராவ் ரமேஷ் தனக்கு வந்த பிரச்சினைகளுக்குப் பிறகு குடும்பத்தினரை தேடுவது.. வீட்டு வேலைக்காரரான விடிவி கணேஷ் வேலை கொடுத்த முதலாளியையே ஆள் வைத்து கடத்தும் அளவுக்குப் போவது, எல்லாவற்றுக்கும் மேலாக கடைசி நேரத்தில் வந்து பிரியங்கா மோகன் ஐ லவ் யூ சொல்வது என்று தமிழ் டிவி சீரியலின் கதை, திரைக்கதையை அப்படியே அட்சரப் பிசகாமல் எழுதியிருக்கிறார் இயக்குநர் எம்.ராஜேஷ்.
ஒளிப்பதிவாளர் விவேகானந்த் சந்தோஷத்தின் ஒளிப்பதிவில் ஊட்டி வெளிச்சத்தில் ஜொலிக்கிறது. கதையின் களமாக ஊட்டியை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஹாரிஸ் ஜெயராஜ் மட்டுமே படத்தின் பலம் என்று சொல்லலாம். ‘மக்கா மிஷி’ பாடல் அனைவரையும் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை பரவாயில்லை ரகம்.
கணவர் மனைவி இடையே ஏற்படும் மோதல், இதனால் விளையும் ஈகோ, இதனால் இரு குடும்பங்களிடையே ஏற்படும் உறவு சிக்கல்கள், எல்லாவற்றுக்கும் மேலாக அக்கா தம்பி இடையேயான பாசம், இவைகளை முன் வைத்து ஒரு எளிமையான கதையை சொல்ல முனைந்திருக்கிறார் இயக்குநர் எம்.ராஜேஷ். ஆனால், மொத்தத் திரைக்கதையும் எளிதில் ஊகிக்கும்படி இருப்பதுதான் படத்தின் மிகப் பெரிய பேக் டிராப்.
இயக்குநர் எம் ராஜேஷ் படங்களில் எப்போதும் இருக்கும் சிச்சுவேஷன் காமெடியும், பன்ச் டயலாக்குகளும் இந்தப் படத்தில் மிஸ்ஸிங்! அதோடு அவரது வழக்கமான சுவாரசியமான, நகைச்சுவை கலந்த திரைக்கதையையும் காணவில்லை.
மொத்தத்தில் இந்த ‘பிரதர்’ நம்மை அணைக்கவில்லை..!









