பாலாமெண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் கவின், ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகதா, டி.எம்.கார்த்திக், பதம் வேணுகுமார், அர்ஷத், மிஸ் சலீமா, பிரியதர்ஷினி ராஜ்குமார், அக்ஷயா ஹரிஹரன், அனார்கலி நசர், திவ்யா விக்ரம், தனுஜா மதுரபாந்துலா, ரோஹித் டெனிஸ், வித்யுத் ரவி, முகமது பிலால், யு.ஸ்ரீ.சரவணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சுஜித் சாரங், இசை – ஜென் மார்ட்டின், படத்தொகுப்பு – நிர்மல், கலை இயக்கம் – மணிமொழியன், எழுத்து, இயக்கம் – சிவபாலன் முத்துக்குமார்.
சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த கவின், சந்தர்ப்ப சூழ்நிலையால் சிறு வயதிலிருந்தே பிச்சையெடுத்து வாழ்க்கையை நடத்துபவர். தன்னைப் போலவே கேட்பார் யாருமின்றி, அனாதையாக இருந்த ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து பிளாட்பாரத்திலேயே குடும்பம் நடத்துகிறார்.
இருவருமே பிச்சையெடுத்து வந்த நிலையில் ஒரு ஆண் குழந்தையும் இவர்களுக்குப் பிறக்கிறது. இந்த நேரத்தில் ஒரு விபத்தில் மனைவி இறக்க மகனுடன் தனித்துவிடப் படுகிறார் கவின். காலத்தின் சூழ்ச்சியால் மகனுடன் தனி மரமான கவின் தன் மகனையும் தன்னைப் போலவே பிச்சைக்காரனாக்கி வைத்திருக்கிறார். ஆனால், தான்தான் அவனின் தந்தை என்பதை மட்டும் சொல்லாமல் வைத்திருக்கிறார்.
இந்த நேரத்தில் அதே ஊரில் இருக்கும் மிகப் பெரிய பணக்காரர் தனது தந்தையின் மறைவு நாளையொட்டி ஏழைகளுக்குத் தன் வீட்டில் அன்னதானம் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் கவின்.
சென்ற இடத்தில் சாப்பிட்டுவிட்டு அனைவரும் வெளியேறிவிட.. கவின் மட்டும் அந்த அரண்மனைக்குள் என்னதான் இருக்கிறது பார்ப்போமே என்று நினைத்து உள்ளே சென்று சுற்றிப் பார்க்கிறார்.
அந்த நேரத்தில் அந்த வீட்டில் சொத்துப் பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது. சொத்துக்களின் வாரிசுதாரர்களில் ஒருவரான சலீமா தன் பெண் உதவியாளர் மற்றும் வக்கீலுடன் அந்த வீட்டில் இருக்கிறார்.
அந்த வீட்டின் உரிமையாளரின் இரண்டாவது மனைவி மூலம் பிறந்த மகனான ரெடின் கிங்க்ஸ்லியை 2 நாட்களுக்கு முன்பாக சொத்துப் பிரச்சினையைப் பற்றிப் பேச வேண்டும் என்று அழைத்து வந்து அவரை படுகொலை செய்திருக்கிறார்கள் இந்த மூவர் கூட்டணி.
ரெடின் கிங்க்ஸ்லி இப்போது அந்த வீட்டிலேயே ஆவியாகச் சுற்றித் திரிகிறார். இவர் கவினின் கண்களுக்கு மட்டுமே தென்படுகிறார். அந்த மூவர் கூட்டணியின் கண்ணில் கவின் பட்டுவிட, கவினை ரெடின் கிங்க்ஸ்லியாக மாற்றி மற்றவர்கள் முன்பு நடிக்க வைத்து மொத்தச் சொத்துக்களையும் அபகரிக்கலாம் என்று வக்கீல், சலீமா கூட்டணி முடிவு செய்கிறது.
ஆனால் முதல் சந்திப்பிலேயே கவின் சொதப்பிவிட்டதால், கவினை கொலை செய்ய மொத்தக் குடும்பமும் திட்டமிட்டு விரட்டுகிறது. பூட்டப்பட்ட அந்த அரண்மனைக்குள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தப்பித்து ஓடிக் கொண்டேயிருக்கிறார் கவின்.
கவின் கடைசியில் தப்பித்தாரா..? அந்த சொத்துக்கள் கடைசியில் யாருக்கு சென்றது..? என்பதுதான் இந்த ‘பிளடி பெக்கர்’ படத்தின் கதை.
பிச்சைக்காரன் கோலம் பூண்டிருக்கும் கவின், கேஷூவலாக கால் ஊனம் என்று சொல்லிப் பிச்சை கேட்கிறார். சாவு தப்பாட்டத்திற்கு எழுந்து நின்று நடனமாடுகிறார். எதிர்வீட்டுக்காரரை கலாய்க்கிறார். பிச்சைக்காரனாகவே இருந்தாலும் சரி, ஏமாற்றுப் பேர்வழியாக இருப்பவர் மீது நமக்குப் பரிதாபம் எங்கேயிருந்து வரும்..? இயக்குநர் எப்படி இதை நம்பினார் என்றே தெரியவில்லை.
தன் மனைவியின் இறப்புக்குக் காரணமானவர்களை அடையாளம் காணும் காட்சியிலாவது இயக்குநர் தனி முத்திரையைப் பதித்திருக்கலாம். ஆனால் அதிலும் மிக சாதாரணமாகவே இயக்கம் செய்திருப்பதால், அந்தக் காட்சியில்கூட நமக்கு பரிதாபம் வரவில்லை. மொத்த்த்தில் கவினின் நடிப்பு விழழுக்கு இழைத்த நீர் என்றே சொல்லலாம்.
அரண்மனைக்குள் அனைவரும் தப்பியோடும் காட்சிகளில் காமெடி என்று சொல்லி எதையோ எடுத்து வைத்திருக்கிறார் இயக்குநர். மற்ற நடிகர், நடிகையரில் பிரியதர்ஷிணியும், டி.எம்.கார்த்திக்கும் நன்கு அறிமுகமானவர்கள். மற்றவர்கள் புதுமுகங்களாக இருப்பதாலும், திரைக்கதையில் வலு இல்லாததாலும், அவர்களது நடிப்பும் நம்மைக் கவரவில்லை.
கடைசியாக வந்து தலையைக் காட்டும் ராதாரவியும் வசன உச்சரிப்பில் வில்லத்தனத்தைக் காட்டிவிட்டு எஸ்கேப்பாகுகிறார்.
பேயாக வரும் ரெடின் கிங்ஸ்லி, தனது வழக்கமான டயலாக் டெலிவரியில் சிற்சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். கவினின் மகனாக நடித்த சிறுவன்தான் பதைபதைக்கவும், ரசிக்கவும் வைத்திருக்கிறான். பாராட்டுக்கள் தம்பி..!
இது போன்ற பேய், அரண்மனை, துரத்துதல் கொண்ட படங்களுக்கு கேமிராமேனின் பங்களிப்பு பிரதானமாக இருக்க வேண்டும். சுஜித் சுரங்கின் ஒளிப்பதிவில் குறையில்லை. சண்டை இயக்குநரின் ஒத்துழைப்புடன் சேஸிங் காட்சிகளை பிரமாதமாக படம் பிடித்திருக்கிறார்.
முழுக்க, முழுக்க பெங்களூர் அரண்மனைக்குள்ளேயே படமாக்கியிருக்கிறார்கள். தேடுதல் வேட்டையில் உடைக்க வேண்டியவைகளை உடைத்து படத்திற்கு பெரும் உதவிகளை செய்திருக்கும் கலை இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள். பின்னணி இசையில் அடித்து ஆடியிருக்கிறார் இசையமைப்பாளர்.
வித்தியாசமான கதைகளும், கேரக்டர்களும் கிடைத்தால்தான் தமிழ்த் திரையுலகத்தில் நீடித்து நிலைத்து நிற்க முடியும் என்று கவினிடம் யாரோ அறிவுறுத்தியிருக்கிறார்கள் போலும்.. கமல்ஹாசன் பாணியில் உடலை வருத்தி, இளைக்கச் செய்து, நிஜமாகவே தாடி வளர்த்து அசல் பிச்சைக்காரனாகவே மாறியிருக்கிறார். ஆனால் அசல் பிச்சைக்காரனாக ஒரு காட்சியில்கூட நடிக்கவில்லை என்பதுதான் சோகம்.
கொஞ்சம் எள்ளலும், நக்கலும், எகத்தாளமும் நிறைந்த மனதோடு எந்தவிதமான பரிதாபத்தையும் வரவழைக்காத கேரக்டர் ஸ்கெட்ச்சில் கவின் நடித்திருப்பதால், அவரது பிச்சைக்கார தோற்றம் நமக்கு எந்தவிதமான இம்பாக்ட்டையும் கொடுக்கவில்லை என்பது சோகமான விஷயம்.
காமெடி கதையில் பேயையும் கொண்டு வந்து அந்தப் பேய் கவினின் கண்களுக்கு மட்டுமே தெரியும் என்ற திரைக்கதை எதற்கு என்று தெரியவில்லை. எப்படி என்றும் புரியவில்லை.
சுவையில்லாத திரைக்கதை, அழுத்தமில்லாத நடிப்பு, சுவைபட சொல்லாத இயக்கம் என்று பல பழுதுகளுடன் வந்திருக்கும் இந்த ‘பிளடி பெக்கர்.. பிளடி படம்..’ என்றுதான் சொல்ல வைத்திருக்கிறது. ஸாரி இயக்குநரே..!
RATING : 2 / 5