இந்தாண்டு பிப்ரவரி மாதம் 10-ம் தேதி தெலுங்கானாவிலும், ஆந்திராவிலும் வெளிவந்த பிரம்மாண்டமான படமான ‘ஓம் நமோ வெங்கடேசயா’ என்கிற திரைப்படம் தற்போது தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது.
இந்தப் படத்தில் நாகார்ஜுனா, அனுஷ்கா, பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் தமிழில் ‘பிரம்மாண்ட நாயகன்.’ என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது.
ராமா என்ற வெங்கடேச பெருமாளின் உண்மையான பக்தன் ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டது இந்தப் படம்.
ஜனரஞ்சகமாக இன்றைய நவீன காலத்திற்கேற்ப மிகச் சிறந்த தொழில் நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை சுமார் 60 படங்களுக்கும் மேல் இயக்கியுள்ளவரும் ‘பாகுபலி’ புகழ் எஸ்.எஸ். ராஜமெளலியின் குருவுமான கே.ராகவேந்திரராவ் இயக்கியிருக்கிறார்.
பெருமாளின் பக்தையான ஆண்டாளின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து அனுஷ்கா கதாபாத்திரத்தை உருவாக்கி கதாநாயகியாக நடிக்கவைத்துள்ளனர்.
மகாபாரத கிருஷ்ணராக நடித்து புகழ் பெற்ற சௌரப் ஜெயின் வெங்கடேச பெருமாள் வேடம் ஏற்று சிறப்பாக நடித்துள்ளார்.
‘பாகுபலி’க்கு இசையமைத்து புகழ்பெற்ற கீரவாணி இப்படத்தின் கதையின் தேவைக்கேற்ப 12 பாடல்களை சிறப்பாக இசையமைத்துள்ளார்.
பகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவு, திருமலை உருவான விதம், ஆனந்த நிலையம் என பெயர் வரக் காரணம், வேங்கடம் என்ற சொல்லுக்கு பொருள் விளக்கம், ராமா என்பவர் ஹாத்திராம் பாபாவாக மாறியது எப்படி, பாலாஜி என்று பெயர் வரக் காரணம், திருமலையில் முதலில் யாரை வணங்குவது என பக்தர்கள் மனதில் எழும் பல சந்தேக வினாக்களுக்கு ஏற்ற விளக்கங்களை இப்படத்தில் தெளிவான படக் காட்சிகளாக அமைத்து தெளிவுபடுத்தியுள்ளனர்.
பக்திக் கருத்துகளைக் கூறினாலும் இது ஒரு முழு நீள சமூகப் படம். விறுவிறுப்பான பிரம்மாண்ட காட்சிகளுக்குப் பஞ்சமில்லாதபடி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
J.K.பாரவி கதை எழுத, கோபால் ரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். வசனம், பாடல்களை D.S.பாலகன் எழுதியுள்ளார்.
பிரபல பின்னணிப் பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், எஸ்.பி.பி.சரண், டாக்டர் சீர்காழி ஜி.சிவசிதம்பரம் , வி.வி.பிரசன்னா, ஜானகி ஐயர், முகேஷ், ஹேமாம்பிகா. பிரியா, ராஜேஷ், கவிதா கோபி என பலரும் பாடல்களைப் பாடியுள்ளனர்.
‘பாகுபலி’க்குப் பிறகு அனுஷ்காவுக்குப் பெயரும் புகழும் சேர்க்கும்படி அவரது பாத்திரம் அடைந்து இருப்பது படத்தின் பெருமைகளில் ஒன்று.
தமிழகத் திரைகளில் இந்தப் ‘பிரம்மாண்ட நாயகன்’ காட்சி அமைப்பின் விஸ்வரூப தரிசனம் தரும் விதத்தில் வெளியாகவுள்ளது.
பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் உலகமெங்கும் திரையிட இப்படத்தை ஜோஷிகா பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் தயாரிப்பாளர்கள் S.துரைமுருகனும், B.நாகராஜனும் திட்டமிட்டுள்ளனர்.











