full screen background image

BP 180 – திரைப்பட விமர்சனம்

BP 180 – திரைப்பட விமர்சனம்

ATUL INDIA MOVIES சார்பில் தயாரிப்பாளர் அதுல்.M.போஸ்மியா வழங்கும், இயக்குநர் ஜே.பி. இயக்கத்தில், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில், உருவாகியிருக்கும் புதிய படம் “BP 180”.

இந்தப் படத்தில் தான்யா ரவிச்சந்திரன், டேனியல் பாலாஜி, K.பாக்யராஜ், தமிழ், அருள் தாஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

தயாரிப்பு – ATUL INDIA MOVIES, தயாரிப்பாளர்அதுல் M போஸமியா, எழுத்து இயக்கம்ஜேபிஇசைஜிப்ரான், ஒளிப்பதிவு ராமலிங்கம், கலை இயக்கம் – A.R.மோகன், எடிட்டிங் இளையராஜா, புரடக்சன் எக்ஸ்க்யூட்டிவ் திருநீலகண்டன், மேக்கப்ராம் பாபு,  உடை வடிவமைப்புநாகா சத்யா, பப்ளிசிட்டி டிசைன்ஸ் – 8B STUDIOS, பத்திரிகை தொடர்புசதீஸ் (AIM).

படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஹை டென்ஷன் பிளட் பிரஷரை ஏற்றும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்தப் படத்திற்கு இப்படி ஒரு தலைப்பு வைத்திருப்பதாக படத்தின் இயக்குநர் ஜே.பி.பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். ஆனால் படம் முழுவதையும் பார்த்தபோது 180-ல் பாதிதான் ஏறி இருக்கிறது.

சென்னையை அடுத்த பொன்னேரி பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் இரண்டே இரண்டு பெண் மருத்துவர்கள், ஒரு மூத்த மருத்துவரையும் வைத்துக் கொண்டு இயங்கி வருகிறது. இங்கு தங்கம் என்ற பெண் மருத்துவராக நாயகி தான்யா ரவிச்சந்திரன் இருக்கிறார்.

அந்தப் பகுதியில் ஆளும் கட்சியை பிரமுகராக இருக்கும் பாக்யராஜின் மகள் ஒரு சாலை விபத்தில் பலியாகிறார். அவருடைய உடல் பொன்னேரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுகிறது.

அடுத்த மாதம் திருமணம் என்ற நிலையில் தன்னுடைய மகள் இறந்து போனதை தாங்க முடியாத பாக்கியராஜ்.. மகளின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்யாமல் கொடுக்கும்படி கேட்கிறார். ஆனால் இதற்கு தான்யா மறுப்பு தெரிவிக்கிறார்.

பாக்யராஜின் பிரதம சீடரான டேனியல் பாலாஜி, ‘காசிமேடு அர்னால்டு’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்செயலாக வெளியூருக்கு சென்று இருந்த பாலாஜி இந்த விஷயத்தை கேள்விப்பட்டு சென்னை திரும்புகிறார். திரும்பும்போதும் வழியில் போனிலேயே பாக்யராஜின் கோரிக்கையை ஏற்று உடனடியாக உடலை அவரிடம் ஒப்படைக்கும்படி சொல்கிறார். இப்போதும் தான்யா மறுக்கிறார்.

இதை எடுத்து அமைச்சர், மருத்துவ துறை செயலாளர் என்று பல இடங்களில் இருந்தும் தான்யாவுக்கு பிரஷர் வருகிறது. ஆனாலும், அந்த தங்கம் கடைசிவரையில் விட்டுக் கொடுக்காமல் நான் சட்டத்தின்படிதான் செயல்படுவேன் என்று உறுதியாக சொல்கிறார்.

தான் சொல்வதை கேட்க மறுக்கும் ஒரு அரசு அதிகாரி என்ற ரீதியில் பாக்யராஜ், அர்னால்டு, அருள்தாஸ் கூட்டணி தான்யாவை ஏதாவது செய்துவிடலாம் என்று கோபப்படுகிறார்கள்.

இந்தக் கோபத்தின் விளைவாக தான்யாவுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இறுதியில் தான்யா என்ன செய்தார்..? பாடியை போஸ்ட்மட்ட செய்யாமலேயே ஒப்படைத்தாரா? இல்லை.. பாலாஜியின் கொலை மிரட்டலை சந்தித்தாரா என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

கதையின் நாயகியாக தங்கம் என்ற பெண் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தான்யா ரவிச்சந்திரன் தைரியமான ஒரு பெண்ணாக படம் முழுவதும் வலம் வருகிறார். அதிலும் அவருடைய முகம் காட்டும் கடுமை நிச்சயம் வேறு எந்த படத்திலும் நாம் பார்க்காதது, இந்தப் படத்தில் அவருக்கு காதல் காட்சிகள் ரொமான்ஸ் கட்சியில் இல்லை என்பதால் படம் நெடுகிலும் ஒரு ஹீரோயினுக்கான திரைப்படம் இது என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார் தான்யா.

அதிலும் இடைவேளை காட்சிகள் அவர் பேசுகின்ற ஒரு ஒற்றை வசனம் மிகவும் பிரமாதம். அந்த இடத்தில் அவருடைய நடிப்பு நிச்சயமாக படம் பார்த்தவர்களுக்கும் ஒரு வெறியை ஏற்படுத்திவிட்டது என்பதில் சந்தேகம் இல்லை.

ரவுடி அர்னால்டு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் டேனியல் பாலாஜி எவ்வளவு அழகான நடிகர்.. இவ்வளவு சீக்கிரமாக போயிருக்கக் கூடாது என்று படம் பார்த்த ரசிகர்களையும் சொல்ல வைத்திருக்கிறார். அந்த அளவுக்கு தன்னுடைய முரட்டுத்தனமான வில்லன் நடிப்பை காட்டியிருக்கிறார்.

அதோடு இன்னொரு வில்லனின் மனைவியை அழைத்து வந்து குடும்பம் நடத்தும் வில்லனுக்கும் வில்லனான தனது நடிப்பை அர்னால்டு என்ற டேனியல் அலட்சியமாக செய்திருக்கிறார். அவருடைய கண்கள் காட்டும் அந்த கோபமும், வெறியும் உண்மையில் அழகான வில்லன் அர்னால்டு என்று நம்மை சொல்ல வைத்திருக்கிறார்.

இயக்குநர் கே.பாக்யராஜ் இதுவரையில் அவர் நடித்த எந்த திரைப்படத்திலும் இப்படி கதறி அழுது நடித்ததில்லை. அந்த அளவுக்கு ஒரு பாசமிக்க ஒரு அப்பாவாக கண்ணீர் விட்டு அழுது தன் மகளுக்காக தான்யாவிடம் கெஞ்சுகின்றபோது நமக்கே பாவமாக தோன்றுகிறது.

டேனியலின் வலது கரமாக நடித்திருக்கும் முன்னாள் எம்.எல்..அருள்தாஸ் உண்மையில் கடைசி வரையில் நல்லவராக இருப்பாரா? இருக்க மாட்டாரா? இல்லை டேனியலை கவிழ்த்து விடுவாரா என்கின்ற சந்தேகத்தை எழுப்பும்வகையில் நடித்திருக்கிறார்.

எப்பேர்ப்பட்ட ரவுடியாக இருந்தாலும் காக்கி சட்டையின் முன்பு அதிகாரத்தை வைத்து ஆட்டம் காட்ட முடியாது என்பதை சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக நடித்திருக்கும் தமிழ் தன்னுடைய நடிப்பின் மூலமாக காட்டி இருக்கிறார்.

தான்யாவுக்கு நூல் விடும் சமூக ஆர்வலராக நடித்திருக்கும் ஜாக் அருணாச்சலமும், நாயகியின் தங்கையாக நடித்திருக்கும் ஸ்வேதா டோரத்தி, தம்பியாக நடித்திருக்கும் ரங்கா,  தான்யாவின் சக மருத்துவராக நடித்திருக்கும் நயனா ஆகியோரும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் இயக்குநரின் திறமை இந்த நடிகர் நடிகைகளை நடிக்க வைத்தவிதத்திலேயே நமக்கு தெரிகிறது. பாராட்டுக்கள்.

தொழில் நுட்பத்திலும் திரைப்படம் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது ஒளிப்பதிவாளர் ராமலிங்கத்தின் கேமரா இடைவேளைக்கு பின்பு படபடக்க வைக்கும் காட்சிகளில் மூலமாக நம்மையும் கொஞ்சம் டென்ஷன் பட வைத்திருக்கிறார். இரவு, பகல் என்று காட்சிகளை மாறி மாறி காட்டு போதும் அழகாக படப் பதிவு செய்திருக்கிறார்.

இந்தப் படத்தில் அதிசயமாக பாடல்கள் இல்லை என்று இயக்குநர் முடிவெடுத்தது பாராட்டுக்குரியதுதான். ஏனெனில் படத்தின் ஒவ்வொரு கட்சியும் அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்பதை நமக்கு மிரட்டலாக சொல்லி கொண்டே வருவதால் இதில் பாடல்களை வைத்திருந்தால் நிச்சயமாக அது ஒரு ஸ்பீட் பிரேக்காகத்தான் இருந்திருக்கும்.

ஜிப்ரானின் பின்னணி இசை அவ்வளவு அசத்தல் என்று சொல்லலாம். ஒரு மிரட்டலையும், பயங்கரத்தையும் காட்டுகின்ற வில்லன்களின் ஒவ்வொரு அசைவையும் படமாக்கி இருக்கும்விதத்திற்கு ஏற்றவாறு தன்னுடைய பின்னணி இசையையும் அடித்து ஆடியிருக்கிறார் ஜிப்ரான். ஆனால் ஒரே ஒரு குறை ஒலிப்பதிவு காதை கிளிப்பதுபோல அமைந்தது ஏன் என்றுதான் தெரியவில்லை. உண்மையில் இந்தப் படத்தின் பல இடங்களில் பின்னணி இசையை அமைக்காமல் மௌனித்திருக்கலாம். அதுவும் சிறப்பாகத்தான் இருந்திருக்கும்.

ஆனால் இயக்குநர் மிஷ்கினின் உதவியாளர்தான் இந்தப் படத்தின் இயக்குநர் ஜே.பி. என்பதால் படம் பார்க்கும் யாரும் தப்பி தவறி கூட தூங்கி விடக் கூடாது என்கின்ற ஒரு நல்ல எண்ணத்தில் ஜிப்ரான் நம்முடைய காதை கிழித்து எடுத்திருக்கிறார்போலும்!.

படத்தின் முற்பகுதியில் படம் விறுவிறுப்பாக செல்லும் வகையில் படத் தொகுப்பு செய்திருக்கிறார் படத் தொகுப்பாளர் இளையராஜா சேகர். ஆனால் இடைவேளைக்கு பின்பு சில காட்சிகள் திரும்பத் திரும்ப வருவது போலவே நமக்கு தோன்றுவதால் கொஞ்சம் தேக்க நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஆனாலும், அதுவும் பரவாயில்லை என்பதை நமக்கு உணர்த்தும் வகையில் ஆங்காங்கே சில டிவிஸ்டுகளை வைத்து படத்தைக் மொத்தமாக தொகுத்து கொடுத்திருக்கிறார்.

அரசியலும், ஆட்சியும் எப்படி நிர்வாகத்தில் தலையிட்டு சட்ட விரோத செயல்களை செய்ய வைக்கிறது என்பதை இந்த படத்தின் மூலமாக அழகாக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் படத்தின் இயக்குநர் ஜே.பி. இடைவேளைக்கு பின்பு சில காட்சிகளில் லாஜிக் இல்லை மீறலாக இருந்தாலும் அதிகாரமும், அரசியல்வாதிகளும் இணைந்தால் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதை நமக்கு காட்டுவதற்காக செய்திருப்பதாக நாம் சமாதானம் செய்து கொள்ளலாம்.

இந்தப் படத்தில் அதிகப்பட்சமாக 100% எதார்த்தமான ஒரு காட்சி என்றால் அது போலீஸ் கமிஷனர் தமிழ், அர்னால்டையும் அருள்தாஸையும் நேரில் வரவழைத்து எச்சரித்து அனுப்புவதுதான். அந்த கட்சியை மிக அழகாக எளிமையான வசனங்களாலும் அழகான பட பதிவினாலும் கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

அதேபோல் ஒரு போலீஸ் கமிஷனர் ஒரு ரவுடி அழைத்தான் என்பதற்காக தனியாக பீச்சுக்கு வந்து சந்திப்பதும் அந்த போலீஸ் கமிஷனரை அர்னால்டு தீர்த்து கட்டுவது போலவும் காட்சிகள் அமைந்திருப்பது நிச்சயம் படு பயங்கரமான லாஜிக் மிஸ்டேக் என்றே சொல்லலாம்.

ஒரு நேர்மையான அதிகாரி நிர்வாகத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை காட்டுவதற்காக இப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜே.பி. இந்த அரசியலையும் அதிகார வர்க்கத்தையும் அரசியல் வியாதிகளையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் நிச்சயமாக பாராட்டுக்குரியது. தன்னால் முடிந்த அளவுக்கு நேர்மையாக இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார். இயக்குநர். அவருக்கு நமது பாராட்டுக்கள்.

படத்தின் தலைப்பான பிபி 180-ஐ தாண்டினாலும், படம் பார்க்கும் ரசிகர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதுதான் உண்மை.

RATING : 3.5 / 5

Our Score