full screen background image

பாலிவுட்டின் மூத்த நடிகையான ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது..!

பாலிவுட்டின் மூத்த நடிகையான ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது..!

பிரபல மூத்த ஹிந்தி திரையுலக நடிகையான ஆஷா பரேக்கிற்கு இந்திய சினிமாவின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவின் தந்தையாக கருதப்படும் தாத சாகேப் பால்கேவின் நினைவாக திரைத் துறையினருக்கு ஒவ்வொரு ஆண்டும் அவரது பெயரில் விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில் 2020-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது பாலிவுட்டின் மூத்த நடிகையான ஆஷா பரேக்கிற்கு வழங்கப்படுவதாக இன்றைக்கு ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நடிகையாக மட்டுமல்லாது இயக்குநராக, தயாரிப்பாளராகவும் இவர் முத்திரை பதித்துள்ளார்.

மும்பையில் பிறந்து, வளர்ந்த ஆஷா பரேக் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தார். ஆஷா மா’(1952), ‘பாப் பேட்டி’(1954) ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

ஷம்மி கபூருக்கு ஜோடியாக ‘தில் தேகே தேகோ’(1959) என்ற திரைப்படத்தில்தான் ஆஷா பாலிவுட்டில் அறிமுகமானார். ‘ஜப் பியார் கிசி சே ஹோதா ஹை’(1961), ‘தீஸ்ரி மன்சில்’, ‘தோ படன்’(1966), ‘கடி படங்’(1970), ‘கேரவன்’(1971), ‘மெயின் துளசி தேரே ஆங்கன் கி’(1978) ‘கி படோசன்’, ‘பாக்யவான்’(1993), ‘கர் கி இஸத்’(1994), ‘அந்தோலன்’(1995) உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

ஹிந்தி திரையுலகத்தில் ஹிட் பட நாயகியாகவும், 1960-70 காலக்கட்டத்தில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் வலம் வந்தார் ஆஷா பரேக். ஹிந்தி மட்டுமல்லாது பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

இயக்குராகவும், தயாரிப்பாளராகவும் சினிமாவில் வலம் வந்த இவர் இந்திய திரைப்பட துறையின் தணிக்கை குழுவில் முதல் பெண் தலைவராக பதவி வகித்துள்ளார்.

இப்படி சினிமாவில் பல துறைகளில் சாதித்த ஆஷா பரேக்கிற்கு கடந்த 1992-ல் இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது. இப்போது மற்றுமொரு கவுரவமாக தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் இந்த விருதை பிருத்விராஜ் கபூர், எல்.வி.பிரசாத், சத்யஜித் ரே, நாகிரெட்டி, ராஜ்கபூர், லதா மங்கேஷ்கர், திலீப் குமார், ராஜ்குமார், டி.ராமாநாயுடு, கே.விஸ்வநாத், சிவாஜி கணேசன், கே.பாலச்சந்தர், அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் என்று பல கலைஞர்கள் பெற்றுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த விருது நடிகை ஆஷா பரேக்கிற்கு வழங்கப்படுகிறது.

Our Score