பாலிவுட்டின் பிரபலமான இசையமைப்பாளரான பப்பிலஹரி இன்று காலை மும்பையில் காலமானார். அவருக்கு வயது 69.
கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பப்பிலஹரி, சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.
பாலிவுட் திரையுலகினர், ரசிகர்கள் அவரது மறைவிற்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 1973-ம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமான பப்பிலஹரி அதன் பின்னர் ஏராளமான இந்தி படங்களுக்கு இசையமைத்தார். அவர் கடைசியாக 2020-ம் ஆண்டு வெளியான ‘பாஹி 3’ என்ற பாலிவுட் படத்திற்கு இசை அமைத்தார். இவருடைய இசையமைப்பில் வெளியான ‘டிஸ்கோ டான்ஸர்’ படத்தின் பாடல்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் ஹிட் அடித்தன.
தமிழில் வெளியான ‘அபூர்வ சகோதரிகள்’, ‘பாடும் வானம்பாடி’, ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
மேலும் தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் ஒரு பாடகராகவும் பப்பி லஹரி சிறந்து விளங்கினார். நகைகள் அணிவதில் ஆர்வமுள்ள அவர் எப்போதும் உடலில் அதிகமாக நகைகளை சுமந்தபடியேதான் இருப்பார். இது பாலிவுட் உலகத்தில் பப்பி லஹரியின் தனித்துவமாக இருந்து வந்தது.
பப்பி லஹிரி பாரதீய ஜனதா கட்சியில் இருந்தார். கடந்த 2014-ம் ஆண்டு மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
காலமான பப்பி லஹரிக்கு மனைவியும் ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
பப்பிலஹரியின் இறுதிச் சடங்கு நாளை மும்பையில் நடைபெறவுள்ளது.