கேமியோ பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சி.ஜெ.ஜெயக்குமார் தயாரித்து, ‘டிமான்டி காலனி’ புகழ் அஜய் ஞானமுத்து இயக்கும் ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தில் பிரபல பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப் வில்லன் கேரக்டரில் நடிக்கவுள்ளார்.
அதர்வா, நயன்தாரா மற்றும் ராஷி கண்ணா நடிக்கும் இந்த ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முதல் முறையாக அனுராக் காஷ்யப் அடியெடுத்து வைப்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றிப் பேசிய படத்தின் இயக்குநரான அஜய் ஞானமுத்து, “சமீபத்தில் வெளியான ஏ.ஆர்.முருகதாஸ் சாரின் ‘அகிரா’ படத்தில், கருணையற்ற போலீஸ் அதிகாரியாக நடித்து, ரசிகர்களின் அமோக பாராட்டுகளை பெற்றவர் இயக்குநர் அனுராக் காஷ்யப். அவர் எங்களது ‘இமைக்கா நொடிகள்’ கூட்டணியில் இணைந்திருப்பதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி.
இந்தப் படத்தில் ருத்ரா என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருக்கிறார். வில்லன் கதாபாத்திரமாக இருந்தாலும், இதுவரை தமிழ் ரசிகர்கள் ஒரு திரில்லர் படத்தில் கண்டிராத புதுமையான கேரக்டர் ஸ்கெட்ச் உள்ள வேடம் அது. நிச்சயம் அவரால் இந்தப் படம் பேசப்படும்… ” என்று உற்சாகமாக கூறினார்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம், ‘7 ஆம் அறிவு’ மற்றும் ‘துப்பாக்கி’ படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரையுலகில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் படப்பிடிப்பு, இந்த மாதத்தில் துவங்க இருக்கிறது.









